1975-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகத்தின் - ‘நம் வாழ்வு’ வார இதழின் பொன்விழாக் கொண்டாட்டமானது ஜனவரி 22, புதன்கிழமை அன்று மதுரை உயர் மறைமாவட்டம் ஞானஒளிவுபுரம், தூய பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு ஆயர்கள் அனைவருடைய தலைமையில் கூட்டுத் திருப்பலியுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
திருப்பலிக்குத்
தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் மேதகு முனைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் தலைமையேற்க, ‘நம் வாழ்வு’ வெளியீட்டுச் சங்கத்தின் தலைவர் மேதகு முனைவர் லூர்து ஆனந்தம் மறையுரையை வழங்கினார். மறையுரையின்போது “நற்செய்தியாக இருக்கும் கிறிஸ்துவை, அவர் வழங்கிய நற்செய்தியை மற்றும் இறையரசு பற்றிய மதிப்பீடுகள் கொண்ட விழுமியங்களை எடுத்துரைக்கும் நற்செய்தி அறிவிப்புப் பணியைக் கடந்த அரை நூற்றாண்டாக மேற்கொண்டு வரும் நம் வாழ்வின் ஊடகப் பணி பாராட்டத்தக்கது. இப்பணி தொடர வாழ்த்துவதோடு, இந்த வார இதழைக் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் அரசியல், சமூக, விழிப்புணர்வு பெறுவதற்கான கருவியாகப் பயன்படுத்த வேண்டும்”
எனவும், “தொடர்ந்து இன்னும் பல வாசகர்களை, சந்தாதாரர்களை
அறிமுகப்படுத்த வேண்டும்”
எனவும் கேட்டுக் கொண்டார்.
விழாவிற்குத்
தலைமை வகித்த மதுரை உயர் மறைமாவட்ட மேனாள் பேராயர் மேதகு முனைவர் அந்தோணி பாப்புசாமி அவர்கள், “நம் வாழ்வு வார இதழானது சிறுபான்மைச் சமூகமான கத்தோலிக்கக் கிறித்தவர்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய உரிமைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் ஊடகமாக அது பயணித்து வந்திருப்பது பாராட்டத்தக்கது” எனப்
புகழாரம் சூட்டினார்.
விழாவிற்கு
முன்னிலை வகித்த பாண்டி-கடலூர் உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்கள், “ஆட்சியாளர்களின் கரங்களில் மற்றும் அரசியல் தலைவர்களின் கரங்களில் பத்திரிகைகள் சிக்கிக் கொண்டிருக்கும் இச்சூழலில், ‘நம் வாழ்வு’ வார இதழ் தனித்துவம் பெற்று எச்சூழலிலும் எவருக்கும் சமரசமின்றிக் கருத்துகளை முன்வைத்து வருவது, கிறிஸ்துவின் மதிப்பீடுகளை எடுத்துச் சொல்லும் உன்னதச் செயல்” எனப் புகழாரம் சூட்டினார்.
இவ்விழாவிற்குச்
சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும், கிறித்தவர்களின் முகமாகத் தமிழ்நாடு அரசியலில் அடையாளம் காணப்படுகின்றவருமான உயர்திரு. இனிகோ இருதயராஜ் அவர்கள், “ஒவ்வொரு கிறித்தவக் குடும்பத்திலும் இவ்விதழ் இடம்பெற வேண்டும்; அதற்குப் பங்குத்தந்தையர்கள், இறைமக்கள் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும்”
எனக் கேட்டுக் கொண்டார். “இந்த இதழ் இன்று காலத்தின் கட்டாயம்; கிறித்தவ மக்களை ஒன்றிணைக்கக் கூடிய ஒரு பேராயுதம்”
எனவும் குறிப்பிட்டார்.
‘நம் வாழ்வு’ இதழோடு நெடும் பயணம் மேற்கொண்ட பழம்பெரும்
எழுத்தாளர்களுக்குப் பொன்விழா விருதும் பாராட்டும் வழங்கப்பட்டது. ஏறக்குறைய 80 அருள்பணியாளர்கள், 100 அருள்சகோதரிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேலான இறைமக்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வை, தமிழ் நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகத்தின் இயக்குநரும், இவ்விதழின் முதன்மை ஆசிரியருமான அருள்முனைவர் செ. இராஜசேகரன் அவர்களும், துணை ஆசிரியர்களான அருள்பணி. ஞானசேகரன், அருள்பணி. அருண் பிரசாத் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும், மதுரை உயர் மறைமாவட்ட நொபிலி மறைப்பணி நிலையத்தின் இயக்குநரும், பணிக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளருமான அருள்பணி. பால் பிரிட்டோ அவர்கள் விழா ஏற்பாடுகளைச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்கள்.
செய்தி:
திரு.
எட்வின்