news-details
தலையங்கம்
விடைபெறும் இறையியல் விருட்சம்!

சீரிய சிந்தனையும், நேரிய சொல்லும், உயரிய செயலும் கொண்ட ஒருவரின் வாழ்வியல் இந்த மனுக்குலம் மடியும் வரை மறக்கவே முடியாதது. அதுவே ஆகச் சிறந்த  ஆளுமையாக அவரை உயர்த்திப் பிடிக்கிறது. அத்தகையோரின் மரணம் சமூகத்திற்கு ஆயிரம் அர்த்தங்களைச் சொல்லுகிறது. நீண்ட காலம் வாழ்வதுதான் நிறைவான வாழ்க்கை என்று நினைப்பவர் மத்தியில், ‘வாழ்க்கையின் பெருமை வாழும் நாள்களில் இல்லை; செய்து முடிக்கும் செயல்களில் இருக்கிறதுஎன்பதை இவர்கள் எண்பிக்கிறார்கள்.

பொய்யாமொழி புலவர் ஐயன் வள்ளுவரின் வாக்கு

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் 236)

என்னும் குறளில் வெளிப்படும் பொருள், பேராசான் முதுமுனைவர்  இறையியலாளர் தந்தை பெலிக்ஸ்  வில்பிரட் அவர்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் பேருண்மையாகவே இருக்கிறது.

மனிதனாகப் பிறந்தால் புகழுக்குரிய செயல்களைச் செய்ய வேண்டும்என்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். தன் அறிவாற்றலாலும் முழுமையான அர்ப்பணத்தாலும் அளப்பெரிய இறையியல் புலமையாலும் இச்சமூகத்திற்கும் திரு அவைக்கும் மாபெரும் பங்களிப்பு செய்தவர் தந்தை வில்பிரட் அவர்கள்.

இவரது பிறப்பு மகிழத்தக்கது; வாழ்க்கை புகழத்தக்கது; மரணம் வணங்கத்தக்கது!

அன்பில் சிறந்த பணியாளனாய், அறிவில் சிறந்த சான்றோனாய், பண்பில் சிறந்த மனிதனாய், பணியில் வியக்கும் பேராளுமையாய் பயணித்த ஒரு நதி தன் மூல தர்மத்தில் முழுமையாய்  சங்கமித்திருக்கிறது. இந்த நதி தடம் பதித்த பாதைகளும் தவழ்ந்து வந்த சூழல்களும் போற்றத்தக்கவையே! இறையியல் பேராசிரியராய், குருமாணவர் பயிற்சியாளராய், மிகச்சிறந்த அறிஞராய், எழுத்தாளராய், இந்நூற்றாண்டின் வியத்தகு இறைவாக்கினராய், தமிழக, இந்திய, ஆசியத் திரு அவையின் மாபெரும் அடையாளமாய் அறியப்பட்ட இந்த ஆளுமை தடம் பதித்தத் துறைகள் ஏராளம்.

தத்துவவியல், இறையியலின் கிளைக்கூறுகளான கிறித்தியல், தொகுப்பு இறையியல், திரு அவையியல், விடுதலை இறையியல், பெண்ணிய விடுதலை இறையியல், பல்சமய உரையாடல், கிறித்தவ ஒன்றிப்புசூழலியல், கலாச்சாரக் கலந்துரையாடல் எனப் பல்வேறு துறைகளில் தடம் பதித்து, மானுட நேயம் கொண்டு மனிதகுல விடுதலைக்காகவும், குறிப்பாக, அடித்தட்டு மக்களின், விளிம்பு நிலை மக்களின் குரலாகத் தன்னை அடையாளப்படுத்தி வீரியமிக்க எழுத்துகளாலும் விடுதலைக் கூறு கொண்ட முழக்கங்களாலும் தன் சிந்தனைகளை உலகெங்கும் விதைத்து வந்த மாபெரும் சாதனையாளர் இவர்.

ஆகவேதான், இந்திய ஆயர் பேரவையின் தலைவரும் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் தலைவருமான கர்தினால் பிலிப்பு நேரி பெரேரோ அவர்கள், “இறையியலாளர் வில்பிரட் அவர்கள் அறிவின், ஆன்மிக ஞானத்தின் அடையாளம்என்று தனது இரங்கல் செய்தியில் குறிப்பிடுகிறார்.

அவ்வாறே, “இவர் இறையியலில் இமயம் தொட்டவர்; இல்லை, இமயங்கள் பல கண்டவர். உலக அளவில் பல பொறுப்புகளை வகித்தவர்; பல சிறப்புகளைப் பெற்றவர்; பல பேர் ஆளுமைகளோடு தொடர்பில் இருந்தவர்; ஆயினும், மிக மிக எளிமையானவர். அடக்கம் என்னும் உயர்தன்மை ஒருவரை அழியாப் புகழ் நிலைக்குச் சேர்க்கும் என்பதற்கு எடுத்துக் காட்டானவர்என்று புகழாரம் சூட்டுகிறார் சிவகங்கை மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு சூசைமாணிக்கம் அவர்கள்.

இந்த ஞான ஒளி பல விளக்குகளை இச்சமூகத்தில் ஏற்றியிருக்கிறது என்பதே இவ்வொளி கண்ட  பெரும் பேறு! ஏறக்குறைய முப்பது முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களையும், எழுபதிற்கும் மேற்பட்ட முதுகலைப் பட்ட ஆராய்ச்சி மாணவர்களையும் உருவாக்கியிருக்கிறார் என்பதே அதற்குச் சான்று.

அத்தகைய வரிசையில், தந்தை வில்பிரட் அவர்களின் மாணவரும் தஞ்சை மறைமாவட்ட ஆயருமான மேதகு T. சகாய ராஜ் அவர்கள், “தந்தை வில்பிரட் அவர்கள் விடுதலை இறையியலின் குரலாகவும், விளிம்பு நிலை மக்களின் தோழனாகவும், ததும்பாத நிறைகுடமாகவும், அமைதியாக வற்றாத இறையியல் நதியாகவும் பயணித்து இறையியலை இயக்கமாகக் கட்டி எழுப்பியவர்என்று புகழாரம் சூட்டுகிறார். “தலத் திரு அவை மக்களை மையப்படுத்திய தலத் திரு அவை, விளிம்பு நிலை மக்களை நோக்கிய திரு அவை என்னும் கருத்தியலில் சிந்தனைக் களமும் செயல்பாட்டுத் தளமும் ஒருங்கே கொண்டவர்என்று மேலும் குறிப்பிடுகிறார்.

தமிழக, இந்திய, ஆசியத் திரு அவையின் முகமாக ஒளிர்ந்த தந்தை வில்பிரட் அவர்கள் ஒவ்வொரு சூழலிலும் மக்களின் வாழ்வியலைக் கருவாக, மையமாகக் கொண்டு அம்மக்களின் பண்பாட்டில் வேரூன்றிய இறையியலைக் கட்டமைக்கவே கனவு கண்டார். ஆகவேதான், ஆசியாவுக்கு என்று தனித்துவமான இறையியல் உண்டு என்பதை உலகறியச் செய்தார்.

1976-ஆம் ஆண்டு உரோமை உர்பானியா பல்கலைக்கழகத்தில் தனது 28-வது வயதில் இறையியலில் தங்கப் பதக்கத்தோடு முனைவர் பட்டம் பெற்ற இவர், அகில உலக இறையியல் கழகத்தின் உறுப்பினராகவும், ஆசிய ஆயர் பேரவையின் இறையியல் மன்ற ஆலோசகச் செயலராகவும், பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு வருகைதருபேராசிரியராகவும், சிறப்புமிக்க இறையியல் இதழ்களின் ஆசிரியராகவும், 25 -க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியராகவும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைப் பல்வேறு தளங்களில் சமர்ப்பித்துப் பரிணமித்திருப்பது அவருடைய ஞானவெளிப்பாட்டின் அங்கீகாரமாகவே அடையாளப்படுத்தப்படுகிறது.

இத்தகைய சிறப்புமிக்க அருள்பணியாளரை, இறையியலாளரை தமிழக, இந்திய, ஆசியத் திரு அவையின் முகத்தை நாம் இழந்திருப்பது ஒட்டுமொத்தத் திரு அவைக்கும் பேரிழப்பாகும்.

தன் மக்களை முறையாகப் பயிற்றுவித்த பின்பு, தலைவன் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்வது, தன்னைப் போல புதிய தலைவர்கள் பரிணமிக்க வேண்டும் என்பதற்காகவே!” என்னும் சுவாமி விவேகானந்தரின் கூற்றைப் போல, தந்தை வில்பிரட் என்னும் பேரொளி மறைந்தாலும், அவரால் ஏற்றி வைக்கப்பட்ட ஆயிரமாயிரம் அகல் விளக்குகள் ஒளி வீசிக் கொண்டே இருக்கும் என்பதில் எள்ளளவும் எமக்கு ஐயமில்லை.

தந்தை வில்பிரட் அவர்களின் ஆன்மா இறைவனில் இளைப்பாறட்டும்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்