news-details
ஞாயிறு தோழன்
ஆண்டவருடைய திருக்காட்சிப் பெருவிழா (05-01-2025) எசாயா 60:1-6, எபேசியர் 3:2-3,5-6

முன்னுரை

இன்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடத் திரு அவை நமக்கு அழைப்பு விடுக்கிறது. இவ்விழாவானது இயேசுவைக் கண்டு அனுபவித்து வாழவும், அவர் காட்டுகின்ற ஒளியின் வழியில் நடக்கவும் நம்மை அழைக்கிறது. ஞானிகள் எவ்வாறேனும் ஆண்டவரைக் காணவேண்டும் என்ற தாகம் கொண்டார்கள்ஆண்டவரைக் கண்டார்கள். ஆண்டவரைக் காண வேண்டும் என்ற ஏக்கம் நம் உள்ளத்தில் எழும்போது, அவரைக் காணும் பேறுபெறுவோம். ஞானிகள் தங்கள் பதவி, பணம், பட்டம் ஆகியவற்றிலிருந்து இறங்கி வந்தார்கள். இயேசுவைக் கண்டு தெண்டனிட்டு வணங்கினார்கள். நாமும் ஆண்டவர்முன் நம்மைத் தாழ்த்துவோம்; அவர்முன் நம்மை அர்ப்பணிக்கும்போது நம் வாழ்க்கையில் எக்குறையும் இருக்காது. ஞானிகளைப் போன்று நம்முடைய தேடல் எப்போதும் இயேசுவாக மட்டுமே இருக்க வேண்டும். ஞானிகள் இயேசுவுக்குத் தங்கள் பேழைகளைத் திறந்து, பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு  நம் இதயப் பேழையைத் திறந்து எதைக் கொடுக்கப் போகிறோம்? அன்பையா? இரக்கத்தையாவிட்டுக்கொடுத்தலையா? மன்னிப்பையா? நல்லுறவையா? சிந்திப்போம். பிறர் இயேசுவை அறியவும் அறிவிக்கவும் நாமும் விண்மீன்களாக இருப்போம்! அத்தகைய வரம் வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.

முதல் வாசகம் முன்னுரை

ஒளி இறைவனின் அடையாளம். நம்மை விடுவிக்க நமக்காக ஒளி தோன்றியுள்ளது. ஒளி இருக்கும் இடத்தில் அச்சம், பயம், பாவம் இவற்றிற்கு இடம் இல்லை. ஆண்டவரின் மாட்சி நம்மேல் உதித்துள்ளது. துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சியும், இன்னல்கள் நீங்கி இன்பமும், குழப்பங்கள் நீங்கி நம்பிக்கையும், நோய்கள் நீங்கி வளமையும் நமக்குக் கிடைக்கும். எனவே, ஒளியின் மகத்துவத்தை உணர்ந்து வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இயேசு என்ற ஒப்பற்ற செல்வத்தைச் சுவைத்தவர் தூய பவுல். ஆண்டவரின் அன்பைச் சுவைத்தவர்களால் இயேசுவை அறிவிக்காமல் இருக்க முடியாது என்பதற்குச் சிறந்த இலக்கணமும் அவரே. இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுளின் அருளால் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பையும் அந்த மறைபொருள் தனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டதாகவும் கூறுகிறார். நாமும் இறைவெளிப்பாட்டை நமது வாழ்க்கையில் கண்டு, மறைபொருளான இயேசுவை அனுபவித்து வாழ இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ஞானத்தின் ஊற்றே இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் இயேசுவை அனுபவித்து அதை வாழ்க்கையால் மக்களுக்குப் போதிக்கவும், உமது பணியைச் சிறப்பாகச் செய்வதற்குத் தேவையான உடல்-உள்ள சுகத்தைத் தந்து காத்திடவும், அவர்களின் தனிமையில் உம் தூதர்களைக் கொண்டு வழிநடத்திடவும் தேவையான அருளைத் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்களோடு பயணிக்கும் ஆண்டவரே! எம் தாய்த் திருநாட்டை உம் பாதம் அர்ப்பணிக்கிறோம். எம் நாட்டில் பஞ்சம் பறந்திடவும், தீராத நோய்கள் அழிந்திடவும், ஏழைகள் அனைவரும் வாழ்வு பெறவும், வேற்றுமைகள் வேரறுக்கப்படவும், வன்முறை ஒழிந்து அனைவரும் மகிழ்வோடு வாழ்ந்திடவும், கொலை, கொள்ளை நீங்கி மக்கள் அனைவரும் பாதுகாப்போடு வாழ்ந்திடவும் தேவையான வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எமக்காக இம்மண்ணிற்கு வந்த ஆண்டவரே! திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடும் நாங்கள் அனைவரும் அடுத்தவரில் உம்மைக் காணவும், எம் நற்செயல்கள் வழியாக உம்மை வெளிப்படுத்தவும், விண்மீன் போன்று நாங்களும் அடுத்திருப்போருக்கு இயேசுவைக் காண வழிகாட்டவும் தேவையான வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வாழ்வு வழங்கும் ஆண்டவரே! எம் குடும்பத்திலுள்ள குழந்தைகள் அனைவரையும் ஆசிர்வதியும். பெற்றோர்களாகிய நாங்கள் அவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து ஆன்மிகத்தில் அவர்களை வளர்த்தெடுக்கவும், திருவழிபாட்டு நிகழ்வுகளில் முழுமையாகப் பங்கேற்க நாங்கள் உதவிசெய்யவும்  தேவையான வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.