திருப்பலி முன்னுரை:
இயேசுவின்
பணிவாழ்வில் பங்குகொண்டு, உயிரோட்டமுள்ள வாழ்வு வாழ ஆண்டின்
பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு ஏழைகள்மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். ஏழைகளிடமிருந்துதான் தம்முடைய பணிவாழ்வை ஆரம்பிக்கிறார். இன்றைய நற்செய்திப் பகுதி வழியாக இயேசு இவ்வுலகிற்கு வந்ததன் நோக்கத்தைத் தீர்க்கமாக எடுத்துரைக்கிறார். நாமும் ஏழைகள், வறியோர், ஒதுக்கப்பட்டோர், புறக்கணிக்கப்பட்டோர், இயலாதோர் அனைவருக்கும் துணையாக இருப்போம். ஆண்டவரின் அருள்தரும் ஆண்டான இந்த யூபிலி ஆண்டிலே எவரையும் தனித்துவிடாமலும் உறவைக் கொடுப்பவர்களாகவும், சமத்துவத்தை விதைப்பவர்களாகவும், அனைவரையும் அன்பு செய்பவர்களாகவும், தேடிச்சென்று உதவுபவர்களாகவும், உண்மை உடையவர்களாகவும், கடவுளின் கருணையை நினைத்து நன்றி சொல்பவர்களாகவும், இருப்பதில் நிறைவு
கொண்டவர்களாகவும் வட்டிக்குக் கடன் கொடுக்காதவர்களாகவும் யாரையும் அடிமைப்படுத்தாதவர்களாகவும்
மற்றவர்களைப் பற்றி நல்லது மட்டும் பேசுபவர்களாகவும் வாழ்வோம். அனைவரிலும் அனைத்திலும் இறைவனைக் கண்டு வாழ இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை
இன்றைய
முதல் வாசகத்தில் குரு எஸ்ரா திருச்சட்ட நூலைத் திறந்தபோது மக்கள் கடவுளின் மாட்சியைத் தங்கள் நடுவில் உணர்ந்தனர். அதை வாசிக்கக் கேட்ட பொழுது அழுதார்கள் என்பதைக் கேட்கும்போது நமக்குள்ளும் ஒரு கேள்வி எழுகிறது. நற்செய்தி நூலைத் திறக்கும்போதும் அதை வாசிக்கும்போதும் இதுபோன்ற இறைப் பிரசன்னத்தை உள்ளூர உணர்கின்றோமா? ஆண்டவரின் மகிழ்வே நமது வலிமை. ஆண்டவருக்குள் வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
உடலின்
உறுப்புகள் பலவாயினும், உடல் ஒன்றாய் இருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். நாம் கிறிஸ்துவின் உடலாய் இருக்கிறோம். வாய் உண்ணக் கை உதவுகிறது. கால்
நடக்க கண் வழி காட்டுகிறது. உடலில் எங்கே காயப்பட்டாலும் கண் அழுகிறது. பல்லுக்கும் நாவுக்கும் பகைமை என்றால் பேச்சு ஏது? உடலில் உள்ள அங்கங்கள் அனைத்தும் சங்கமத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. கிறிஸ்துவின் உறுப்புகளாகச் செயல்பட்டு உறவுள்ள வாழ்வு வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்:
1) இரக்கமே
உருவான இறைவா! தாயாம் திரு அவையை வழிநடத்தும் எம் திரு அவைத் தலைவர்களை ஆசிர்வதியும். இறைப்பணிக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட
இவர்கள் கிறிஸ்துவின்
மதிப்பீடுகளை வாழ்ந்து காட்டவும், வாழ்க்கையால் மற்றவர்களுக்குப் போதிக்கவும் தேவையான அருள்தர
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2) அன்பின்
இறைவா! மனிதரில் எத்தகைய வேற்றுமையும் பாராமல், உலகில் உள்ள அனைவரும் முக்கியமானவர்கள் என்று கருதி சாதி, சமயம், மொழி, இனம், பொருளாதாரம், அறிவுசார்ந்த வேறுபாடுகள் அனைத்தையும் களைந்து
அனைவரோடும் இணைந்து வாழ்ந்து, ஒற்றுமையின் இறையரசைக் கட்டியெழுப்பிட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3) அன்பின்
இறைவா! எசாயா தன் இறை வாக்கின் வழியாக உம் திருமகன் இவ்வுலகிற்கு வந்ததன் நோக்கத்தை அறிந்து அறிவித்தது போல நாங்களும் எங்களுக்கான இறைத் திட்டத்தை ஆவியாரின் உதவியால் சிந்தித்து, தேர்ந்து தெளிந்து அதன்படி வாழ்ந்திட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4) அன்பின்
இறைவா! குடியரசு தின விழாவைக் கொண்டாடும் எம் தாய்நாட்டை ஆசிர்வதியும். தலைவர்கள்
தங்களின் சுயநலப் போக்கினால் ஆட்சி செய்யாமல், பரந்துபட்ட அறிவோடு அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடிய ஆட்சி அமைத்திடவும், மக்கள் இன்புற்று வாழ வழிகாட்டவும் தேவையான அருள்தர
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.