என் இனிய நம் வாழ்வு வாசகப் பெருமக்களே!
உங்கள் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இந்திய,
தமிழ்நாடு கத்தோலிக்கத் திரு அவைக்கும் தமிழ்க்கூறும் நல்லுல கிற்கும் இவ்வாண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டாக
அமைகிறது. இத்தளங்களில் சமூக - அரசியல் - ஆன்மிக - வாழ்வியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தமிழ்நாடு திரு அவையின் ஒப்பற்ற வார இதழ் நல்லவர்களின் நாடித்துடிப்பு ‘நம் வாழ்வு’ தன் பொன் விழாவிற்குள் அடியெடுத்து வைக்கிறது. தமிழ் இதழியல் மற்றும் திரு அவை அச்சு ஊடகத் துறையில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய தருணம் இது!
பொன்விழா
ஆண்டின் மகிழ்ச்சியான இத்தருணத்தில் இவ்விதழின் முதன்மை ஆசிரியர் என்ற முறையில் என் எண்ணங்களில் எழுவது - நன்றி, வியப்பு, எதிர்நோக்கு என்னும் மும்முனைக் கூறுகளே!
50 ஆண்டுகாலப்
பயணம் என்பது எளிதானது அல்ல; இதற்கான ஆதாரமாய் அமைந்து, விதையிட்டு, தளிர் கண்டு, பூத்துக் குலுங்கும் நிலை கண்டு, காய்த்துக் கனி தரும் இன்றைய சூழலில், இவ்விதழின் கடந்து வந்த பாதைகளைச் சற்றே பின்னோக்கிப் பார்ப்பதே சாலச்சிறந்தது எனக் கருதுகிறேன்.
தனிமனிதனையும்
சமூக நலனையும் முன்னிறுத்தி, மாறி வரும் காலச்சூழலுக்கு ஏற்றவாறு தனித்துவமான ஆளுமைகளாக ஒவ்வொருவரையும் உருவாக்கவும் இன்றைய சமூக- அரசியல் சூழலில் சம நீதியும் சமூக
நீதியும் கொண்ட சமத்துவச் சமுதாயத்தைப் படைக்கவும் தமிழ்நாடு திரு அவையால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் ஏராளம். அத்தகைய முயற்சிகளில் முத்தாய்ப்பாய் அமைந்திருப்பது அச்சு ஊடகப் பணியகத்தின் ‘நம் வாழ்வு’ வார இதழ் என்றால் அது மிகையாகாது.
தமிழ்நாடு
ஆயர் பேரவையின் முதல் ஊடகக் குழந்தையாய்ப் பிறந்து, எல்லாருடைய கரங்களிலும் தவழ்ந்து, இன்றும் அது தொடர்ந்து வீறுநடை போட்டுக் கொண்டிருப்பது பெருமைக்குரியதே. இப்பயணத்தில், அருள்பொழிந்து துணையிருந்த மூவொரு இறைவனுக்கு முதல் நன்றி. மேலும், முன்நின்ற ஆயர்கள், பேராயர்கள்
குறிப்பாக இந்நிறுவனத்தின் மேனாள் தலைவர்கள், முதன்மை ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், ஆசிரியர் குழு உறுப்பினர்கள், வெளியீட்டுச் சங்க உறுப்பினர்கள், மறைமாவட்டப் பொறுப்பாளர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கவிஞர்கள், நலவிரும்பிகள், வர்த்தக நிறுவனத்தார், வாசகர்கள், சந்தாதாரர்கள் என்னும் நீண்ட பட்டியலில் இடம்பெறும் உங்கள் ஒவ்வொருவரையும் நன்றி நிறைந்த உள்ளத்தோடு நினைத்துப் பார்க்கிறேன்.
இந்த
நன்றி உணர்வில் என்னில் மிகுந்திருப்பது வியப்பே! என்னே மாபெரும்
சாதனை இது! கிறிஸ்துவின் இறையாட்சி மதிப்பீடுகளான அன்பு, நீதி, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம், உரிமைக்கான குரல், விடுதலை முழக்கம், சமநீதி என்னும் சமூக வாழ்வியலின்
மேலான விழுமியங்களை முன்வைத்து இவ்விதழ் பயணித்து
வந்திருப்பது மிகப்பெரிய வியப்பு! எச்சூழலிலும் எவ்விதச் சமரசமும் இன்றி நிலைப்பாட்டில்
உறுதித்தன்மையும் இலக்கில் கூர்மையும் கொண்டு இவ்விதழ் பயணித்து வந்திருப்பது மற்றொரு
வியப்பே!
சிறு
விதையாய் தன் தொடக்கத்தைக் கொண்டிருந்த ‘நம் வாழ்வு’ வார
இதழ், இன்று ஆலமரமாய்த் தழைத்தோங்கி, தமிழ்நாடு கடந்து, இந்தியா முழுவதும் பரந்து,
உலகளவிலும் சிறந்து விளங்குவது தமிழ்க்கூறும் நல்லுலகிற்குச் சான்றாகவே அமைகிறது. இதுவும்
மற்றொரு மாபெரும் வியப்பே! இத்தகைய வியப்புக்குரிய சூழலில் ‘கூர்முனைப் புரட்சியால்
சீர்மிகு உலகு செய்ய முடியும்’ என்னும் ஆழமான நம்பிக்கையோடும் உறுதிப்பாட்டோடும் அடியேனும் இப்பயணத்தில் இணைய
இறைவன் வழங்கியுள்ள இந்த மாபெரும் வாய்ப்புக்காக நன்றி கூறுகிறேன்.
நன்றியும்
வியப்பும் கலந்த இத்தருணத்தில் தொடர்ந்து எம்மை ஆட்கொள்வது எதிர்நோக்கே! இச்சூழலில்,
“எதிர்நோக்கு ஏமாற்றம் தராது” (உரோ 5:5) என்னும் பவுலடியாரின் வார்த்தைகளும்,
இதே தலைப்பில் வெளிவந்த திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களின் சுற்று மடலும் எமக்கு ஆழமான நம்பிக்கையைத் தருகிறது. “எதிர்காலம் எதைக் கொணரும்
என்பதை நாம் அறியாமல் இருந்தாலும், நம் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வரவிருக்கும் நற்காரியங்களின்
விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் எதிர்நோக்கு குடிகொண்டிருக்கிறது” என்னும் திருத்தந்தையின்
கூற்று, விடியல் நன்மைத்தனங்கள் நிறைந்ததாக அமையும் என்ற மகிழ்ச்சியான அருள் நிறைந்த
செய்தியைத் தருகிறது. விடியும் பொழுதில் நன்மைத்தனங்கள் நிறைந்து நம் வாழ்வின் எதிர்காலம்
செழுமை மிக்கதாக இன்னும் பல ஏற்றங்கள் காணக்கூடியதாக அமையும் என்ற நம்பிக்கையை இந்த
எதிர்நோக்கு தருகின்றது.
இவ்வேளையில்,
மூன்று செய்திகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகிறேன். ஒன்று, பொன்விழா நிகழ்வு மதுரை
உயர் மறைமாவட்ட இதழாக இருந்த ‘கத்தோலிக்கு சேவை’ என்னும்
இதழை இடைநிறுத்தம் செய்து மலர்ந்த ‘நம் வாழ்வு’ என்னும்
இக்குழந்தைக்கு அது பிறந்த இடத்திலேயே விழா எடுப்பது சிறந்தது எனக் கருதுகிறோம். ஆகவே,
இம்மாதம் 22-ஆம் நாள் புதன்கிழமை மாலை 5 மணிக்கு, மதுரை - ஞான ஒளிவுபுரம், புனித தே
பிரித்தோ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு ஆயர்கள் அனைவரும் கூடும் மாபெரும் விழா
நிகழவிருக்கிறது. ‘நம் வாழ்வு’ வெளியீட்டுச் சங்கத்தின் தலைவரும்,
சிவகங்கை மறைமாவட்ட ஆயருமான மேதகு முனைவர் லூர்து ஆனந்தம் அவர்களின் பெயரால் இவ்வரலாற்றுச்
சிறப்புமிக்க விழாவிற்கு உங்கள் ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றேன்.
இரண்டாவதாக,
இப்பொன்விழா ஆண்டின் முத்தாய்ப்பாக இவ்விதழ் எண்ணிமத் (Digital)
தொழில்நுட்பத்தில் முழுமையாகத் தடம் பதிக்கிறது. காலத்தின் தேவைக்கேற்ப அவ்வப்போது
வலைதளங்களில் உலாவந்த இந்த இதழ், இன்று எண்ணிமத் தொழில்நுட்ப உதவியுடன் எல்லா ஊடகத்
தளங்களிலும் தடம் பதித்து உலகெங்கும் வாழும் தமிழர்களை உடனுக்குடன் சென்றடையவிருக்கிறது.
ஆகவே, புதிய தொழில்நுட்பத்துடன் namvazhvu.co.in என்னும் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மூன்றாவதாக,
தமிழ்நாடு திரு அவையின் அச்சு ஊடகப் பணித்தளத்தின் எதிர்கால வளர்ச்சியைக் கண்முன் கொண்டு
புரவலர் திட்டத்தைப் பரவலாக்கும் விதமாக ‘நம்(ன்)கொடை நம் வாழ்வுக்கு’ என்னும் சொற்பதத்தை முன்வைத்து நன்கொடையாளர்களை வரவேற்கிறோம்.
இத்திட்டத்தால் நீங்கள் மாதந்தோறும் வழங்கும் உங்களால் இயன்ற பொருள் உதவி, இந்த ஊடகப்
பணியின் எதிர்கால வளர்ச்சியைச் செழுமை அடையச் செய்யும் என நம்புகிறோம். எனவே, இப்பொன்விழா
நிகழ்விற்கும் எதிர்வரும் காலங்களில் இவ்விதழ் இன்னும் பொலிவோடு உங்களை வந்தடையவும்
தாராள உள்ளத்தோடு பொருள் உதவி தந்து இவ்வூடகப் பணியைத் தாங்கிட அன்போடு வேண்டுகிறேன்.
பொன்விழா
நிகழ்வுக்காகவும், இவ்வாண்டில் நாம் முன்னெடுக்கும் திட்டங்கள், செயல்பாடுகள் சிறப்புற
அமையவும் உங்கள் செபங்களில் எம்மையும் நினைவுகூருங்கள்.
வாருங்கள்...
புத்துலகு படைப்போம்!
பொன்விழா ஆண்டில்...
கூர்முனைப் புரட்சி செய்வோம்!
சீர்மிகு உலகமைப்போம்!!
அன்புத் தோழமையில்,
அருள்முனைவர் செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்