திருப்பலி முன்னுரை
இன்று
அன்னையாம் திரு அவை ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்த நாளைச் சிறப்பிக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு என்ற ஒளியைக் கையில் ஏந்தியவுடன், சிமியோன் மீட்பைக் கண்டுகொள்கின்றார். அவ்வாறே திருமுழுக்கு என்ற ஒளியால் நாம் ஆண்டவரின் மக்களாக இணைக்கப்பட்டுள்ளோம்.
அன்றாடம் திருப்பலியின் வழியாக இயேசுவை நாம் சுவைத்துக்கொண்டு இருக்கிறோம். இயேசுவை நமது வாழ்க்கையில் வெளிப்படுத்த நாம் மேற்கொண்ட முயற்சிகள் யாவை? சிந்திப்போம். மேலும், இன்று துறவியர் தினத்தைக் கொண்டாட திரு அவை நமக்கு அழைப்பு விடுக்கிறது. திரு அவையில் பணிபுரியும் அனைத்துத் துறவியர்களையும் இறைவன் நிறைவாக ஆசிர்வதிக்கவும், பணி வாழ்வில் உடன் பயணிக்கவும், இறையழைத்தல் பெருகவும் செபிப்போம். நம் குழந்தைகளை மருத்துவராக, பொறியாளராக, விஞ்ஞானியாக, ஆசிரியராக மாற்றவேண்டும் என்று நினைப்பதோடு, அதற்காக அன்றாடம் உழைக்கின்றோம். ஆனால், நமது குழந்தைகளை அருள்பணியாளராக, அருள்சகோதரியாகப் பணிசெய்வதற்கு அனுப்ப நாம் முயற்சி எடுத்துள்ளோமா? மீட்பின்
ஒளியைக் கையில் ஏந்தியுள்ள நாம் ஒளியின் மக்களாக வாழ்ந்து, இயேசு என்ற ஒளியை அகத்தில் ஒளிர்வித்து, உண்மைச் சீடர்களாக வாழ வரம் வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.
முதல் வாசகம்
முன்னுரை
“இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்”
என்கிறார் படைகளின் ஆண்டவர். நமது வாழ்வும் வார்த்தையும் எப்போதும் ஆண்டவரை அறிவிப்பதாக இருக்க வேண்டும். ஆண்டவர் எப்போதும் நம்முடன் பயணிக்கிறார் என்று கூறி, ஆண்டவரில் வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
ஆண்டவர்
பணியை நாம் செய்யத் துவங்கும் போது அவர் நம் அருகில் இருப்பார். அனைத்துவித மான நன்மைத்தனங்களாலும் நம்மை நிரப்புவார். நாம் கேட்பதற்கு மேலாக நமக்குத் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்து வழிநடத்தும் இறைவனின் பேரன்பில் திளைத்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1) அன்பு
ஆண்டவரே! உமது பணிக்காக நீரே தேர்ந்துகொண்ட எம் திரு அவைத் தலைவர்களை ஆசிர்வதியும். அவர்கள்
அனைவரும் அழைத்தலின் மகத்துவத்தையும் நோக்கத்தையும் அன்றாடம் அறிந்து, உமது வழியில் பயணிக்கத் தேவையான வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2) ஞானத்தின்
ஊற்றே எம் இறைவா! எம் பங்கிற்கும் குடும்பத்திற்கும் நீர் கொடையாகக் கொடுத்த எமது குழந்தைகளுக்காக உம்மிடம் வேண்டுகின்றோம். ஒவ்வொரு நாளும் இறைப்பற்றிலும் இறைநம்பிக்கையிலும் அவர்கள் வளரவும், அவர்கள் எதிர்காலம் சிறக்கவும் தேவையான வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3) ஒளியின்
ஊற்றே எம் இறைவா! ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்த இந்த நாளில் எங்களையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். நாங்கள் அனைவரும் உண்மை ஒளியாகிய உம்மில் வாழவும், இருளின் செயல்களைக் களைந்துவிட்டு, அன்பு, நீதி, உண்மை, நேர்மை போன்ற பண்புகளில் நாளும் வளர்ந்து சான்றுபகரத் தேவையான வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4) அன்பின்
இறைவா! துறவியர் தினத்தைக் கொண்டாடும் இந்த நாளில் உலகில் உள்ள அனைத்துத் துறவியரையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். அனைவரையும் ஆசிர்வதியும். அவர்களுடைய பணிவாழ்வில் நாங்கள் துணையாக இருக்கவும், எமது குடும்பங்களில் உள்ள பிள்ளைகளுக்கு இறையழைத்தலை ஊக்குவிக்கவும் தேவையான வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.