சீரோ-மலபார் திரு அவையின் ஆயர்கள் கேரள மாநிலத்தில் வனச்சட்டங்களில் மாற்றங்களை எதிர்த்துக் குரல் எழுப்பியுள்ளனர். புதிய திருத்தங்கள், காடுகளுக்குச் சுற்றுப்புற பகுதிகளில் வாழும் விவசாயிகளுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர். கம்யூனிஸ்ட் தலைமையிலான கேரள அரசு, 1961 -ஆம் ஆண்டின் வனச்சட்டத்தைத் திருத்துவதன் மூலம், சிறந்த வனப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றது. எனினும், இந்த மாற்றங்கள் மனித-விலங்கு மோதல்களைக் கவனத்தில் கொண்டு விவசாயிகளுக்கு அதிக பிரச்சினைகளை உருவாக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வன அதிகாரிகளுக்குக் கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்குவது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும், இந்தத் திருத்தங்களை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். காடுகளுக்கு அருகில் வாழும் மூன்று மில்லியன் விவசாயிகள், அத்துடன் மனித-விலங்கு மோதல்கள் காரணமாகத் தங்கள் உயிரையும் பயிர்களையும் காப்பாற்றத் தொடர்ந்து போராடி வருகின்றனர். 2017 முதல் 2021 வரை இந்த மோதல்களில் 445 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.