news-details
தமிழக செய்திகள்
நம் வாழ்வு அரை நூற்றாண்டு காலச் சாதனை! (வாழ்த்துச் செய்தி)

தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகம், அதன் வார இதழ்நம் வாழ்வுதன் பொன்விழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில் அதன் முதன்மை ஆசிரியர் அருள்முனைவர் செ. இராஜசேகரன், துணை ஆசிரியர்கள், அலுவலர்கள், வாசகர்கள் அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன்.

ஊடகம் சனநாயகத்தின் நான்காவது தூண் என்பதை நாமறிவோம். ஊடகம் இன்று மிகவும் வலிமையான ஆயுதமாக இருக்கிறது. தரவுகளை உடனுக்குடன் பகிரும் இன்றைய டிஜிட்டல் உலகில், அச்சு ஊடகத்திற்கு என்றே தனிச்சிறப்பு இருக்கிறது. எதையும் ஆவணப்படுத்துவதற்கு அச்சு ஊடகமே தலையாயது. ‘சொல் பிடி கொடுத்தாலும், எழுத்துப்பிடி கொடுக்கக்கூடாதுஎன்பார்கள். எழுத்து என்பது எப்போதும் ஆவணமாகிறது. ஆகவே, தெளிந்த சிந்தனையோடு, கருத்துகள் தெளிவாகப் பதிவு செய்யப்பட வேண்டும். இத்தகைய பயணத்தில்நம் வாழ்வுசிறப்புறப் பயணித்திருப்பது உண்மையிலேயே பாராட்டுதற்குரியது.

கிறித்தவ அச்சு ஊடகப் பணி நான்கு படிநிலைகளைக் கொண்டிருக்க வேண்டும்: ஒன்று, கருத்துகள் கூர்மையானதாக இருக்க வேண்டும்; இரண்டு, அதில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும்; மூன்று, அக்கருத்துகள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்; நான்கு, திரு அவையின் மரபையும் போதனையையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். அதாவது, கிறிஸ்துவின் விழுமியங்களைத் தழுவியதாக, திரு அவையின் மதிப்பீடுகளைத் தாங்கியதாக இருக்க வேண்டும். இத்தகைய வரிசையில்நம் வாழ்வுவார இதழ் 50 ஆண்டுகள் தமிழ்நாடு திரு அவையில் கிறித்தவ மக்களுக்கும் இச்சமூகத்திற்கும் ஆற்றியுள்ள பணிகள் மிகவும் பாராட்டுதற்குரியதே!

ஐம்பது ஆண்டுகள் பயணம் என்பது சாதாரண செயல் அல்ல; இது அரை நூற்றாண்டு காலச் சாதனை! இச்சாதனைக்குப் பலர் சொந்தக்காரர்கள். இவ்விதழைத் துவங்கிய ஆயர் பெருமக்கள், இப்பணியகத்தின் தலைவர்களாக இருந்த ஆயர்கள், முதன்மை ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பொறுப்பாளர்கள், எழுத்தாளர்கள், அச்சகத்தார், மற்றப் பணியாளர்கள், வாசகர்கள் மற்றும் சந்தாதாரர்கள் ஆகிய அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன்!

கிறிஸ்துவில்  அன்புள்ள,

மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி

பேராயர், சென்னை -மயிலை உயர்மறைமாவட்டம்

தலைவர், தமிழ்நாடு ஆயர் பேரவை