“அரசியல்-ஆன்மிக-சமூக வாழ்வியல் விழிப்புணர்வு வார இதழான நம் வாழ்வின் வரவு, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நமது கத்தோலிக்க ஆயர்களின் தீர்க்கமான முடிவு. அச்சு ஊடகத்தின் வழியாகக் கத்தோலிக்கத் திரு அவையின் நடப்புச் செய்திகளையும், நடக்கும் நிகழ்வுகளையும் நடக்கப் போகும் நிகழ்வுகளையும் மாநிலம், நாடு, அகில உலகம் என எந்த நிலைகளிலும் திரு அவையையும் உலகையும் கத்தோலிக்க மக்களுக்கு ஐம்பது ஆண்டுகளாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஊடகம், ஆட்சியாளர்கள் அரவணைப்பில் தன்னை அடக்கிக்கொள்ளும் கலாச்சாரத்துக்கு முற்றிலும் மாறுபட்டு உண்மை, நீதி, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் இறையாட்சியின் மதிப்பீடுகளை எங்கும் அடகு வைக்காமல், யாருக்கும் எந்தச் சூழலிலும் சமரசம் செய்யாமல் தனித்துவ நிலைப்பாட்டோடு ஐம்பது ஆண்டுகளாக நிமிர்ந்து நிற்கிறது ‘நம் வாழ்வு’ வார இதழ். ஊடக உலகில் கத்தோலிக்கத் திரு அவையின் குரல் என்ன என்பதை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் வெளிப்படுத்திய ஒரே இதழ் ‘நம் வாழ்வு’ வார இதழ். இதழில் வெளிவரும் செய்திகள் சமூகத்தில், சமூக- பொருளாதார-அரசியல் வாழ்வில், பேசுபொருளாகத் தடம் பதித்துள்ளது. கணினி உலக ஊடக ஆதிக்கம் கடந்த இருபது ஆண்டுகளில் மிக வேகமான வளர்ச்சியைப் பெற்று அச்சு ஊடகத்தை அடக்கும் நிலையில், ‘நம் வாழ்வு’ வார இதழ் தன்னுடைய தரத்திலும் உறுதியிலும் தாழ்ந்து போகாமல் நடை போட்டு பயணிக்கிறது என்பதைக் காணும்போது, உண்மையிலேயே நான் பெருமை அடைகிறேன். கடினங்கள் சூழ்ந்து நிற்கும் இந்த ஊடக உலகில், காலத்தின் சுழலுக்கும் தேவைக்கும் ஏற்ப நற்செய்தி மதிப்பீடுகளைச் சமரசம் செய்யாமல் உண்மையை எடுத்துரைத்து, நேர்மைக்குக் களங்கம் ஏற்படாமல் செயல்பட்டு, நேரிய வழியில் நிலைத்து நின்று, நெடுங்காலம் இந்த அச்சு ஊடகத்தின் வழியாக இறையாட்சியைப் பரப்பி வரும் ‘நம் வாழ்வு’ வார இதழ் பலநூறு ஆண்டுகள் வாழ வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.”
- மேதகு பேராயர் பிரான்சிஸ்
கலிஸ்ட்,
பாண்டி-கடலூர்
உயர்
மறைமாவட்டம்
“பத்திரிகைகள்
என்று எடுத்துக்கொண்டால் இன்றைய சமுதாயத்தில் சினிமாவைப் பற்றிச் சித்தரிக்கின்ற பத்திரிகைகள் உண்டு; அரசியலைப் பற்றிச் சித்தரிக்கின்ற பத்திரிகைகள் உண்டு; அரசியலைக் கேலி செய்து எழுதுகின்ற பத்திரிகைகள் உண்டு; பத்திரிகைகள் விற்க வேண்டும் என்று தலையங்கங்கள் எழுதுகின்ற பத்திரிகைகள் உண்டு. இப்படிப்பட்ட பொய்யை மட்டுமே பரப்பும் பத்திரிகைகள் மத்தியில், ஆன்மிகக் கருத்துகளோடு இறைமகன் இயேசுவின் வழியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வோடு வெளிவந்து கொண்டிருக்கிற கத்தோலிக்க வார இதழ் ‘நம் வாழ்வு’ இதழ். மத்திய மாநில அரசுகளின் மக்களுக்கு எதிரான செயல்களுக்குப் பதில் கொடுக்கின்ற, ஆட்சியாளர் எடுக்கின்ற நிலைப்பாடுகளைப் பாகுபாடற்ற பார்வையோடு விமர்சிக்கின்ற, உலக அளவில் கிறித்தவர்களுக்கு என்னென்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் மத்தியில் விரிவாகக் கொண்டுபோய் சேர்க்கின்ற இதழாகவும் ‘நம் வாழ்வு’ இதழ் விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நினைத்து உளமாரப் பாராட்ட நான் கடமைப்பட்டுள்ளேன்.”
- உயர்திரு. இனிகோ இருதயராஜ்,
திருச்சி கிழக்கு சட்டமன்ற
உறுப்பினர்
“நம்
வாழ்வு கடந்து வந்த பாதை கடினமான பாதைதான். ஏனென்றால், எல்லாச் சூழ்நிலைகளிலும் இந்த இதழானது குறைவில்லாமல் ஐம்பது
ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது என்பதை நினைக்கின்றபோது மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்த ‘நம் வாழ்வு’ இதழை நம்முடைய கத்தோலிக்கக் கிறித்தவக் குடும்பங்களிலே நிச்சயமாக வாங்கிப் படிக்க வேண்டும். இன்றைக்கு அரசியல், ஆன்மிக, சமூகக் கருத்துகளை எல்லா மக்களுக்கும் எடுத்துச் செல்கின்ற ஓர் இதழாக இது அமைந்திருக்கிறது. இன்னும் இதனுடைய எண்ணிக்கையானது உயர வேண்டும். இது காலத்தின் கட்டாயத் தேவை. இன்றைக்குச் சிறுபான்மையினர்மீது அரசால் திணிக்கப்படும் கருத்துகள், திட்டங்கள் உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியுமா? முடியாதா? என்பதை நமக்குத் தெரிவிக்கின்ற அரசியல் விழிப்புணர்வைக் கொடுக்கின்ற இதழாக இவ்விதழ் இருக்கிறது. இன்று 50-வது ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடுகின்ற வேளையில் நம்முடைய குடும்பங்களில், நம்முடைய நிறுவனங்களில் இந்த இதழ் இடம்பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.”
- மேதகு அந்தோணி பாப்புசாமி,
மேனாள் பேராயர், மதுரை
உயர்
மறைமாவட்டம்