ஏறக்குறைய நான்கு ஆண்டுகாலமாக நாட்டில் நடந்து வந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு, மியான்மரில் அமைதி மலரும் ஆண்டாக 2025 இருக்கும் என்று மியான்மர் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் சார்லஸ் தெரிவித்துள்ளார். இளைஞர்களை அமைதியின் சிற்பிகள் எனக் குறிப்பிட்ட அவர், இளைஞர்களுக்கான வாய்ப்புகளையும் கல்வியையும் வழங்குவது அவசியம் என வலியுறுத்தினார். இதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, நாட்டின் ஆன்மாவையும் மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று கூறினார். நல்லிணக்கம் என்பது ஒரு செயல்முறை மட்டுமல்ல; அது ஒரு தேர்வாகும், அன்பை வழங்கும் செயலாகும் என்றும் விளக்கிய அவர், உண்மையான அமைதி என்பது போரற்ற சூழல், இது அனைவருக்கும் நீதி, பாதுகாப்பு மற்றும் மாண்பை அளிக்கும் என்பதை எடுத்துரைத்துள்ளார்.