news-details
தலையங்கம்
உலகே போற்றும் உத்தமர்!

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க் கல்லால் அரிது! (குறள் - 235)

அதாவது, ‘புகழுடன் வாழ்வது, நிலையான புகழுடன் இறப்பது ஆகிய இவ்விரண்டும் அறிவாளிகளுக்கே கிடைக்கும்; மற்றவர்களுக்குக் கிடைப்பது அரிதுஎன ஐயன் வள்ளுவர் குறிப்பிடும் இக்குறள், மறைந்த பொருளாதார மாமேதை இந்தியத் திருநாட்டின் மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்காகவே எழுதப்பட்டது போன்று எண்ணத் தோன்றுகிறது.

தங்கள் பெயர் வரலாற்றில் இடம்பெற்றதால் சில ஆளுமைகள் பெருமை கொள்கின்றனர்; ஆனால், சிலருடைய பெயர் வரலாற்றின் பக்கங்களை அணி செய்வதால் வரலாறே பெருமை கொள்கிறது. அத்தகைய வரலாறே பெருமைகொள்ளும் வகையில் இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஆளுமையாக வலம் வந்தவர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள்.

தான் வாழ்ந்த காலத்திலும் இறந்த இச்சூழலிலும் உலகமே வியந்து போற்றும் ஓர் ஒப்பற்ற தலைவராக, மாமனிதராக  இவர் வாழ்ந்திருக்கிறார் என்பதே இந்த ஆளுமைக்குக் கிடைத்த புகழ்; பெரும்பேறு! இவர் தனி ஆளுமை என்பதையும் கடந்து, இவர் ஓர் அடையாளம் (Icon). உலகில் தலைசிறந்த கல்வி நிலையங்களில், பல்கலைக்கழகங்களில் படித்துப் புலமை பெற்று பேராசிரியராக வலம் வந்த டாக்டர் மன்மோகன் சிங், நேர்மைக்கும் எளிமைக்கும் எடுத்துக்காட்டாகவும் அறிவுக்கும் அடக்கத்திற்கும் மாண்புமிகு அரசியல் அடையாளமாகவும் கணிக்கப்படுகிறார்.

இவர் அடக்கத்தின் வடிவம். மகத்தான மனிதர்கள் யாவரும் அடக்கமே வடிவாய் வாழ்ந்தவர்களே! அடக்கம் என்ற வேரிலிருந்தே எல்லா நற்பண்புகளும் கிளைபரப்புகின்றன. ‘அடக்கம் உள்ள இதயத்தில்தான் ஆண்டவனும் குடியிருப்பான்என்பது ஆன்றோர் வாக்கு. அடக்கம் பொதுநலத்தின் ஆலயம். முற்றிய கதிர்கள் மட்டுமே தரை நோக்கித் தலைதாழ்த்தும். முதிர்ச்சியும் பக்குவமும் அடைந்த மனமே அடக்கத்துடன் பணிந்து நடக்கும். எனவேதான், “எளிமை, அறிவு மற்றும் பணிவின் உருவமான அவர் நாட்டுக்காக முழு மனத்தோடு பணியாற்றிய ஒப்பற்ற தலைவர்எனத் தன் இரங்கல் செய்தியில் பதிவு செய்கிறார் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமதி. சோனியா காந்தி.

வர்த்தகத் துறையில் பொருளாதார ஆலோசகராகப் பதவியைத் தொடங்கிய டாக்டர் மன்மோகன் சிங், நிதித்துறையில் பொருளாதாரத் தலைமை ஆலோசகராகவும், மத்திய நிதித் துறைச் செயலராகவும், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், திட்டக்குழுவின் துணைத் தலைவராகவும் பதவி வகித்து, படிப்படியாக உயர்ந்து பின்னாளில், இந்தியத் திருநாட்டின் நிதி அமைச்சராக மிளிர்ந்து, இறுதியில் உலகின் மிகப்பெரிய சனநாயகமான இந்தியத் திருநாட்டின் பிரதமராகவும் பணியாற்றியது அவருடைய கண்ணியத்திற்கும் கடின உழைப்பிற்கும் அறிவாற்றலுக்கும் சீரிய சிந்தனைக்கும் தீர்க்கமான முன்னெடுப்புகளுக்கும் கிடைத்த பரிசாகவே கருதப்பட்டன.

ஒவ்வொரு படிநிலைகளிலும் தான் வகித்தது பதவி என்று கருதாமல், அது பொறுப்புமிக்கப் பணி எனக் கருதி முழு மூச்சோடும் முழுமையான அர்ப்பணத்தோடும் அவர் பணியாற்றியது அனைவரையும் வியப்புக்குள்ளாக்குகிறது.

அவருடைய தனிமனித மதிப்பீட்டு வாழ்வியல், ஆழமான பொருளாதார அறிவு, வெற்றி நிறைந்த அரசியல் பயணம் எனும் மும்முனைத் தளங்களில் இப்பேராளுமையைச் சிந்திக்க விழைகிறேன்.

எளிய தோற்றம், ஈரமுள்ள இதயம், இனிய உடல் மொழிக்கூறு, அன்பான வார்த்தைகள், அமைதியான உரையாடல், ஆழமான சிந்தனை, கருத்துச் செறிவுமிக்க பேருரைகள், தீர்க்கமான முன்னெடுப்புகள்... இத்தகைய மதிப்பீடுகளின் வரிசையில் ஒருபோதும் தளும்பாத நிறைகுடமாகவே அவர் வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

எவரையும் கடிந்துகொள்ளாத இவர், கடைநிலை ஊழியரிடமும் கனிந்த இதயத்துடன் உறவாடுவதும் உரையாடுவதும் தன் ஆளுமையின் தனிச்சிறப்பாகவே கொண்டிருந்ததும், பேச்சிலும் செயலிலும் தன்னால் எவரும் ஒருபோதும் காயப்பட்டு விடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்ததும் பெரிதும் போற்றத்தக்கதே!

இந்த ஆளுமையின் பொருளாதார அறிவு உலகையே வியப்புக்குள்ளாக்குகிறது. இந்தியாவின் பொருளாதார ஏறுமுகத்திற்கான ஆதாரப் புள்ளி இவர் என்றால் அது மிகையாகாது. 1971 - இல் இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகப் பொறுப்பு வகித்த காலத்திலும், 1982 முதல் 1985 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த காலத்திலும் இந்தியப் பொருளாதாரத்தைப் புதைகுழியிலிருந்து மீட்டெடுத்த பொருளாதார மாமேதையாகப் புகழப்படுகிறார்.

1991-ஆம் ஆண்டு, இந்திய வரலாற்றின் பொருளாதார ஏற்றத்திற்கான முக்கிய ஆண்டு. அன்றைய பிரதமர்  பி. வி. நரசிம்மராவும், டாக்டர் மன்மோகன் சிங்கும் இக்கட்டான இந்திய நிதி நெருக்கடியில் இருந்து இந்நாட்டை மீட்டவர்கள் என்றால், அப்பெருமை அவர்களையே சாரும். டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் கூர்மையான சிந்தனைத் தெளிவு பல பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்தது; பிற நாடுகளின் முதலீடுகளைக் கவர்ந்திழுத்தது. இந்தியாவை உலகின் ஐந்தாவது மாபெரும் பொருளாதாரத் தன்னிறைவு கொண்ட நாடாக உயர்த்தியது.

டாக்டர் மன்மோகன் சிங்கின் பொருளாதாரச் சிந்தனையும் செயல்பாடுகளும் இந்திய நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்காக மட்டுமின்றி, உலக அளவிலும் பல்வேறு பலன்களை அளித்துள்ளதுஎன்று புகழாரம் சூட்டுகிறார் இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அவ்வாறே, இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் லின்டி கேமரூன், “தனது துணிச்சலான பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் இந்தியாவின் நலன்களை மன்மோகன் சிங் முன்னெடுத்துச் சென்றவர். சிறந்த பிரதமராக, நிதி அமைச்சராக, உலக அளவில் சிறந்த அரசியல் தலைவராக மதிக்கப்பட்டவர்எனக் குறிப்பிடுகிறார்.

மேலும், ஒன்றிய அரசின் முதன்மை அமைச்சர் மோடி  அவர்கள், “போராட்டங்களைக் கடந்து எவரும் உயர்ந்த நிலையை எட்ட முடியும் என்பதற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் வாழ்க்கை அடுத்தத் தலைமுறைக்குப் பெரும் பாடமாக அமையும். பிரதமராக நாட்டின் வளர்ச்சிக்கு அவர் வழங்கிய பங்களிப்பு எப்போதும் நினைவில் கொள்ளப்படும்என நினைவு கூருகிறார்.

டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவு தனிப்பட்ட இழப்பாகச் சிலருக்கு அமைந்தாலும், நம் நாட்டிற்கும் உலகிற்கும் பேரிழப்பே! அவரது இழப்பை நிரப்புவது மிகவும் கடினம். பொருளாதாரம், அரசியல் எனப் பல தளங்களில் அவரது ஆலோசனைகளைக் கேட்க கட்சி பாகுபாடின்றி பறவைகள் போல் பலரும் கூடிய ஆலமரம் இன்று சாய்ந்துவிட்டது. ஆயினும், வாஞ்சையோடு தழுவிக்கொண்ட வரலாறு இத்தகைய பேராளுமையால் பெருமை கொள்கிறது.

எளிமை, உயர்கல்வி, விடாமுயற்சி, கடின உழைப்பு, வெற்றி, உயர்வு, மேன்மை, நேர்மை, நிர்வாகம், சீரிய சிந்தனை, தொலை நோக்குப் பார்வை, பொருளாதாரம், அரசியல், அறிவியல், அறநெறி வாழ்வியல் எனப் பல படிநிலைகளில் இந்நூற்றாண்டின் குறியீடாக முன்னிருக்கும் டாக்டர் மன்மோகன் சிங் இன்றைய இளையோர் படிக்க வேண்டிய பேராளுமையே!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்