news-details
தலையங்கம்
வாசிப்பை நேசிப்போம்

அறிவு கண் விழிக்க, ஆதி ஆசானாய் இருப்பது மொழி. அந்த மொழியில் தவழும் ஒவ்வோர் எழுத்தும் வார்த்தைகளும் முக்கியமானவை. அவை சிந்தனைகளைச் செதுக்கிச் செப்பனிடுபவை. நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் எழுத்துகளும் சொற்களும் அமையும்போது அவை மொழிக்கு வலிமை சேர்க்கின்றன. எனவே, ஓர் அறிவுநிறைச் சமூகத்தை உருவாக்க புத்தகமும் அதில் மலரும் வாசிப்பும் மிக மிக அவசியமே!

ஆகவேதான், தமிழுக்குப் புதிய உயிரும் உருவமும் உள்ளடக்கமும் தந்து நவீனப்படுத்திய பாரதி, “பழம்பெருமை பேசிக்கொண்டிருப்பதால் தமிழ் வளர்ந்துவிடாது: மாறாக, பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யவேண்டும்; இறவாப் புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் படைக்கப்பட வேண்டும்என்று வலியுறுத்தினார்.

அதன் அடிப்படையில்எழுத்துஉயிர் கொண்டு, ‘வாக்குவளமாகி, ‘வாழ்வுவரமாக உருவாகும் அறிவுப் புதையலே புத்தகம். ஒவ்வொரு புத்தகத்திலும் இடம்பெறும் சொற்களில் எழுத்துகள் மட்டுமே கோர்க்கப்படுவதில்லை; மாறாக, எழுத்துகளுக்கு இடையே கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. ஆழமான பொருளுடன், உணர்வுகளும் சிந்தனைகளும் களத்தரவுகளும் பொதிந்து வைக்கப்படுகின்றன. ஆகவேதான், புத்தகம் என்பது ஒரு தனி மனிதனின், சமூகத்தின், தேசத்தின் ஆவணம் எனப்படுகின்றது.

புத்தகத்தின் தாக்கம் அளப்பரியது; புத்தக வாசிப்பு உன்னதமானது. இந்தப் புத்தக வாசிப்பால் உறவுகள் மேம்படும்; நட்புகள் ஆழப்படும்; சிந்தனைகள் கூர்மைப்படுத்தப்படும்; புரட்சிகள் முன்னெடுக்கப்படும்; செயல்பாடுகள் வீரியப்படும்; தன்னிலும் சமூகத்திலும் மாற்றங்களைக் கொண்டு வரும். ஒரு புத்தகத்தில் பதிந்திருக்கும் கருத்துகளில் உண்மை இருந்தால், இத்தகைய அதிர்வுகளை அது ஏற்படுத்தும்.

எழுத்துத்துறை இன்று முற்றிலும் தளர்ந்து வருகிறது. வாசிப்பு என்பது இச்சமூகத்திலிருந்து முற்றிலும் அப்புறப்படும் வண்ணம் நகர்ந்து செல்கிறது. இச்சூழலில், இளையத் தலைமுறையினர் எழுத்தையும் வாசிப்பையும் இரு கண்ணெனக் கொள்ள வேண்டும். வாசிப்பு என்பது எந்நாளும் நேசிக்கப்பட வேண்டும்! அறிஞர் பெர்னாட்ஷா தனது நண்பருக்குப் பரிசளித்த புத்தகத்தைப் பழைய புத்தகக் கடையில் கண்டதும், அதை மீண்டும் அந்த நண்பருக்கே அனுப்பிவைத்து, புத்தகத்தின் பெருமை பற்றிக் கடிதம் எழுதினார் என்பது ஒரு வரலாற்று நிகழ்வு.

அண்மையில் சென்னையில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நிகழ்ந்தது. கடந்த டிசம்பர் 27- ஆம் தேதி முதல் ஜனவரி 12-ஆம் தேதி வரை 17 நாள்கள் சென்னை - நந்தனம் ஒய்.எம்.சி.. மைதானம் விழாக்கோலம் கொண்டிருந்தது. புகழ்பெற்ற பல்வேறு பதிப்பகங்கள் பங்கேற்றன; சுமார் 900 அரங்குகளில் அவர்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர். சிறுவர் முதல் பெரியவர் வரை யாவருக்குமான சிறப்பான படைப்புகள் இடம்பெற்றிருந்தன.

தமிழ் மொழி, கலை, பண்பாடு, இலக்கியம், அறிவியல், உலக அறிவு, ஆன்மிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் கதை, கட்டுரை, நாவல், புதினம், சிறுவர்களுக்கான ஓவிய நூல்கள், மொழி ஆய்வு அடிப்படையிலான நூல்கள், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களின் தமிழ்மொழி மற்றும் அகழாய்வு சார்ந்த நூல்கள் எனப் பல நூல்கள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. தமிழ்மொழி சார்ந்த படைப்புகள் அதிகம் விற்பனையானது என்னும் தரவு, தமிழ் மரபியல் சார்ந்த படைப்புகள் வாசகர்களின் வாசிப்பு இரசனையைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. இலக்கணம், இலக்கியம் சார்ந்த நூல்களுக்கு அவர்கள் தரும் மதிப்பையும் வரவேற்பையும் அது சுட்டிக்காட்டுகிறது.

புத்தக வாசிப்பு மட்டுமே என்றும் அழியாத சொத்து. நூல்களை நேசிக்கும் மனிதர்கள் வாழ்நாள் முழுவதும் கற்கும் மாணவ நிலையிலேயே இருக்கிறார்கள்என்கிறார் சொற்பொழிவாளர் சு. அன்பரசன். புத்தக வாசிப்பு என்பது நம்மை எந்தச் சூழலிலும் கலங்காமல் இருக்கும் மனத்திடத்தைக் கொடுப்பவை. அவை தன்னம்பிக்கையை வளர்ப்பதாகவும் திகழ்கின்றன. நமது நம்பிக்கைக்கும் நற்சிந்தனைகளுக்கும் புத்தகங்களே வழிகாட்டுகின்றன. ஒருவரது சிறந்த சிந்தனைகளை மற்றவர்களுக்குக் கடத்தக்கூடியதாகப் புத்தகங்கள் உள்ளன.

ஆகவேதான், “மனிதர்களின் கண்டுபிடிப்புகள் பலவும் காலத்தால் மாற்றப்பட்டு வரும் நிலையில், புத்தகங்கள் மட்டுமே எக்காலத்திலும் மாற்றப்படாதவையாகும். வாழ்க்கையின் தத்துவத்தைப் பாதுகாக்கும் பெட்டகங்களாகவும் உள்ளனஎன்கிறார் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார். புத்தகங்களும் அதில் இழையோடும் கருத்துகளும் மனித வாழ்வையும் சமூகத்தையும் மாற்றி அமைக்கத் தேவைப்படும் தத்துவங்களை எடுத்துரைப்பவை. அவை நமக்குக் கற்கவும் கற்றுத்தரவும் காலத்தால் அழியாத பெட்டகங்களாக இருப்பவை. ஆகவேதான், படைப்பாளிகளும் படைப்புகளும் அமரத்துவம் பெற்றவை என்கின்றனர்.

புத்தகங்களை ஒவ்வொரு முறையும் படிக்கும் போது அவை ஒவ்வொரு விதமான கருத்துகளால் நம்மை ஆட்கொள்கின்றன. கல்வெட்டுகள் போல கடந்த கால வரலாற்றையும், பனித்துளி போல நிகழ்காலச் சம்பவங்களையும் அவை நமக்குக் காட்டுகின்றன. ஆகவே, ஆழ்ந்து வாசிக்கும்போது, உண்மையைக் கண்டுகொள்வோம்; உண்மை வழி நிற்கப் பாதையைக் கண்டுகொள்வோம்; உண்மையின் பாதையில் பயணிக்க உறவுகளைக் கண்டுகொள்வோம்; உறவுகள் ஒன்றிணைந்து புரட்சியைக் கண்டுகொள்வோம்; புரட்சியின் விலை மதிப்பில்லாப் பரிசாக மாற்றங்களைக் கண்டுகொள்வோம்.

தன்னிலும் சமூகத்திலும்  மாற்றத்திற்கான விடியலைத் தருபவை புத்தகங்கள். அதன் அடிப்படையில் கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழ் நெஞ்சங்களில் சமூக, ஆன்மிக, அரசியல், வாழ்வியல் வழிகாட்டியாக வலம் வந்து கொண்டிருக்கும்நம் வாழ்வும்அதன் பதிப்பகமும் வெளிக்கொணரும் புத்தகங்களும் அவை முன்வைக்கும் கருத்துகளும் காலத்தால் அழியாதவை.

தரமான புத்தகங்களை இச்சமூகத்திற்கு வெளிக்கொணர்ந்து வரும்நம் வாழ்வுபதிப்பகம் இப்பொன்விழா ஆண்டில் - ‘கூர்முனைக் குரல்கள், ‘உண்மையை உரக்கச் சொல்வேன், ‘வாழ்வு வளம் பெற, ‘ஒரு திருக்குடும்பத்தின் பயணம்தெய்வீகத் தடங்கள்எனும் ஐந்து புதிய நூல்களைப் பொன்விழாக் கொண்டாட்டத்தில் வெளியிட இருக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்வீட்டுக்கு ஒரு விவிலியம்என்னும் நமது அறைகூவல், இன்று வீட்டிற்குப் பல திருவிவிலியங்களைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. அவ்வாறேநம் வாழ்வுஇதழின் இப்பொன்விழா ஆண்டில்வீட்டுக்கு ஒரு நூலகம்என்னும் அறைகூவலை முன்வைக்கிறோம். கருத்து வளமிக்கத் தரமான புத்தகங்களைப் பெற்று, இன்றே நம் வீடுகளில் நூலகம் அமைப்போம்; நாளைய தலைமுறைக்கு வழிகாட்டும் ஒளிச்சுடர்களை ஏற்றுவோம்!

வாசிப்பை நேசிப்போம்; மாற்றத்தைச் சுவாசிப்போம்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்