திருப்பலி முன்னுரை: இன்றைய நாள் இறைஇயல்பில் வாழ நமக்கு அழைப்புவிடுக்கிறது. இயேசு ஏழை, எளிய மக்களுக்காக இவ்வுலகிற்கு வந்தார். தந்தை தமக்குப் பணித்த அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றினார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றுகிறார். இதுதான் இயேசு தம்முடைய பணியைத் தொடங்கியவுடன் செய்த முதல் அருளடையாளம். திருமண விருந்தில் குறைவை நிறைவாக்கி மகிழ்ச்சியைக் கொடுக்கிறார். நம்முடைய வாழ்க்கை அன்பு, மன்னிப்பு, இரக்கம், உடனிருத்தல், நீதி, நேர்மை, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற விழுமியங்களால் நிரப்பப்படும்போது, நம்முடைய வாழ்விலும் அருஞ்செயல்கள் கட்டாயம் நடக்கும். அன்னை மரியா தன்னுடைய பிள்ளைகளின் வாழ்வில் குறிப்பறிந்து உதவி செய்பவர் என்பதற்கு இந்நிகழ்வு சிறந்த எடுத்துக்காட்டு. அன்னை மரியாவின் துணையை அன்றாடம் நாடுவோம். அவர் நமக்காகத் தன்னுடைய மகனிடம் பரிந்து பேசிக்கொண்டே இருக்கிறார். ஆகவே, நமது விருப்பங்களை விடுத்து இயேசுவின் விருப்பத்தை நிறைவேற்றுவோம். இந்த யூபிலி ஆண்டிலே நீண்ட நாள்களாக அமைதியில்லாமல் இருக்கும் குடும்பங்களுக்கு நமது உடனிருத்தலால் அமைதியைக் கொடுப்போம். அப்போது அன்னை மரியின் அரவணைப்பும், இயேசுவின் வழிகாட்டுதலும் நமக்கும், நமது பங்கிலுள்ள குடும்பங்களுக்கும் நிறைவாகக் கிடைக்கும். அத்தகைய அருள் வேண்டி இத்திருப்பலியில் பங்கெடுப்போம்!
முதல் வாசகம்
முன்னுரை:
கடவுள் இறைவாக்கினர் வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு எப்சிபா, பெயுலா என்ற புதிய பெயர்களைச் சூட்டி, அவர்களிடமிருந்த பழைய கறைகளைப்போக்கி மகிழ்விக்க இன்றே, இப்பொழுதே வரும் கடவுளாக வெளிப்படுகிறார். “ஆண்டவன் கையில் நீ அழகிய மணிமுடியாகத்
திகழ்வாய், உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய்” என்று
இஸ்ரயேல் மக்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டு அவர்களுக்கு ஆசிர் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை:
தூய பவுல், ‘ஆவியானவர் ஒருவரே! அவர் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான திறமைகளை அளிக்கிறார். அதைச்
செயலாக்கம் செய்பவரும் அவரே. வரங்களைப் பெற்றுக்கொண்ட நாம் அதை சுயநலத்திற்காக, பெருமைக்காக, புகழுக்காகப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, மற்றவர்கள் நன்மைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்’
என்று கூறுகின்றார். நாம் பெற்றுக் கொண்ட வரங்களின் மகத்துவம் அறிந்து வாழ அழைக் கும் இரண்டாம் வாசகத்திற்கு நாம் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. அன்பின்
இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள், இறைமக்கள் அனைவருக்கும் நம்பிக்கை செய்தியையும், இறைவனின் நல்வாக்கையும் எடுத்துரைக்கும் இறைவாக்கினர்களாக வாழவும், பணிவாழ்வில் இடையூறுகள் ஏற்படும்போது அழைத்தவர் கைவிடமாட்டார் என்ற உத்வேகத்தில் பணியைச் சிறப்பாகச் செய்வதற்குத் தேவையான ஆற்றலைத் தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. காத்து
வழிநடத்தும் இறைவா! நீர் எங்கள்மீது கொண்டுள்ள அன்பினால் எங்களுக்கு இலவசமாக வழங்கியுள்ள வரங்களையும் கொடைகளையும் மற்றவர்களோடு பகிர்ந்து வாழவும், உமது மகிமைக்காக உழைக்கவும் தேவையான வரம் தர வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகின்றோம்.
3. எங்களோடு
வாழும் இறைவா! கானாவூர் திருமண வீட்டில் தீர்ந்துவிட்ட திராட்சை இரசம் குறித்து அக்குடும்பத்தார்மீது
அக்கறை கொண்ட உம் தாய் உம்மிடம் பரிந்துரைத்து உதவி செய்ததைப்போல நாங்களும் மற்றவர்கள் துன்பத்தைக் கண்டு மனமுவந்து
உதவி செய்திடும் வரம் தர வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகின்றோம்.
4. எங்களை
அன்பு செய்யும் ஆண்டவரே! அன்னை மரியா கூறிய ‘அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்’ என்ற
வாக்கை எமதாக்கி, அன்றாடம் இறைவார்த்தையை வாசித்து, அவை காட்டுகின்ற வழியில் நடக்கவும், இயேசுவின் அளவற்ற அன்பை நாங்கள் சுவைத்து, மற்றவர்களும் சுவைக்கச் செய்திட தேவையான வரம் தர வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகின்றோம்.