news-details
தலையங்கம்
மாறுமா... மாற்றாந்தாய் மனநிலை?

இன்று எவரும் விமர்சனங்களை விரும்புவதுமில்லை; வரவேற்பதுமில்லை. ஆயினும், பொதுவெளியில் சமூக, அரசியல் தளங்களில் விமர்சனங்கள் தவிர்க்க முடியாதவைகளே!

தனிமனித விமர்சனங்களைத் தவிர்த்து, கருத்துகளின் மீதும் கருத்தியலின் மீதும் செயல்முறைகளின் மீதும் விமர்சனம் எழுவது ஆரோக்கியமான சமூகக் கட்டமைப்புக்கு வழிவகுக்கும் என்பதே உண்மை.

அத்தகைய கருத்து வேறுபாடுதான் சனநாயகத்தின் சாராம்சம். “Dissent is the essence of democracy!” என்பார்கள். நலமான விவாதங்களும் கருத்து வேறுபாடுகளும்தான் சனநாயகத்தை நேரிய வழியில் பயணிக்க வைக்கும்; அங்கே உண்மை நிலைக்க வழிவகுக்கும்; சனநாயகம் தழைக்க வழி பிறக்கும்.

என் தவறுகளை விமர்சிப்பவர், நேரில் அந்த விமர்சனங்களை வைக்கட்டும்; அவருடைய வரவுக்காக நான் காத்திருக்கிறேன்என்றார் பிரெஞ்சுப் புரட்சியின் பிதாமகன் ரூசோ. அது அவருடைய தவறுகளை விமர்சிப்பதற்கான அழைப்பு.

மற்றொருபுறம், வெற்றியாளர்களும் வெற்றியும் ஒருபோதும் மதிப்பீடு செய்யப்படக்கூடாது; அங்கே விமர்சனங்களும் கேள்விகளும் எழுப்பலாகாது என்பதும் பலருடைய எண்ணமாக இருக்கிறது. ஆனால், “எங்கும் யாவும் மதிப்பிடப்படவும் விமர்சிக்கப்படவும் கேள்விக்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்; அப்போதுதான், அதில் உள்ள உண்மைத்தன்மை புடமிடப்படும்என்றார் சோவியத்தின் இரும்பு மனிதர் ஜோசப் ஸ்டாலின்.

இந்திய ஒன்றிய அரசின் 2025-26-ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து எட்டாவது முறையாக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “மக்களால், மக்களுக்காக, மக்களே முன்னெடுத்த பட்ஜெட்; இது நடுத்தர வகுப்பினரின் குரலுக்குச் செவிசாய்த்திருக்கிறதுஎன்று சுய விமர்சனம் தந்தாலும், இந்த நிதிநிலை அறிக்கையை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக அல்ல; மாறாக, ஒரு சாமானியனின் பார்வையில் இதை மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதும் இங்கே அவசியமாகிறது.

புதிய வருமான வரிவிதிப்பு முறையின் கீழ் தனிநபர் வருமான வரிவிலக்கின் உச்சவரம்பு ரூ. 7 இலட்சத்திலிருந்து ரூ. 12 இலட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது பலருடைய கவனத்தை ஈர்த்து, பாராட்டப்படக் கூடியதாக அமைந்தாலும்கண் பார்வை இழந்த பின்பு சூரிய நமஸ்காரம் தேடும் செயலாகவேஇது பார்க்கப்படுகிறது.

கொரோனாபெருந்தொற்றுக்குப் பிறகு சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டு நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதாரம் பெரிதும் முடக்கப்பட்ட சூழலில், அவர்களின் ஏற்றத்திற்கான எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளாத ஒன்றிய அரசு, அப்போதும் எப்போதும் பெரும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் தந்து, தாராளமயமாக்கலுக்கும் சந்தைமயமாக்கலுக்கும் வழிவகுத்துவிட்டு, காலம் கடந்த இச்சூழலில், நடுத்தர வர்க்கத்தைத் தூக்கி நிமிர்த்த முன்வந்திருப்பது நகைப்புக்குரியது.

நாட்டின் பொருளாதாரத்தையும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தொழில்துறையினர் கருத்து தெரிவித்தாலும், காலம் கடந்து கடை விரிப்பதனால் பலன் ஏதும் உண்டோ? என்றே எண்ணத் தோன்றுகிறது. இப்போதாவது விழித்துக் கொண்டார்களே என்று சற்றே ஆறுதல் அடைந்தாலும், எத்தகைய தாக்கத்தை இது ஏற்படுத்தக் கூடும்என்பதும் பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

எப்போதும் ஒன்றிய அரசுக்குத் துதிபாடும் தமிழ்நாடு அரசின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், “இது மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை எனக் கூறுவதைவிட, பீகார் மாநில வரவு-செலவு நிதிநிலை அறிக்கை எனக் கருதும்படி அமைந்துள்ளதுஎனவும், “தமிழ் நாட்டுக்கு எந்தவிதமான சிறப்புத் திட்டங்களும் இதில் இல்லை. இது ஒரு மாயாஜால அறிக்கையாக வார்த்தை ஜாலங்கள் நிறைந்திருக்கிறதுஎன்றும் விமர்சித்திருக்கிறார்.

வளர்ச்சி நோக்கிய திட்டங்களும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எண்ணங்களும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துகின்ற இலக்கும் இதில் ஒன்றும் தெளிவுபடவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. ஆகவேதான், திரு. வைகோ அவர்கள், “புற்றுநோய் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரிவிலக்கு, கிராமங்களில் 1.5 இலட்சம் தபால் நிலையங்கள், சாலை வியாபாரிகளுக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் காப்பீடு அட்டை வழங்குதல் போன்ற வரவேற்கத்தக்கக் கூறுகள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக இந்த நிதிநிலை அறிக்கை ஏமாற்றத்தையே தருகிறதுஎன்று குறிப்பிடுகிறார்.

இந்த நிதிநிலை அறிக்கையில் காணப்படும் வருமான வரி படிநிலைகள் மற்றும் விகித மாற்றங்களால் சாமானியர்களின், குறிப்பாக, நடுத்தர வகுப்பினரின் வரிகள் குறையும்; இது அவர்களின் கையில் கூடுதல் பண இருப்புக்கு வழிவகுக்கும்; குடும்பங்களின் நுகர்வு, சேமிப்பு, முதலீட்டை ஊக்குவிக்கும்; மேலும், அவர்களின் வாங்கும் சக்தி அதிகரித்தால் மட்டுமே பொருளாதார வளர்ச்சி அடையும் என்பதை எல்லாம் சற்று காலதாமதமாகவே இந்த அரசு உணர்ந்திருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

பெரும் முதலாளிகளையும் கார்ப்பரேட் நிறுவனங்களையுமே சார்ந்து நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் இந்திய ஒன்றிய பா... அரசு, இந்த முறை நடுத்தர வர்க்கம் என்பதைத் தொடர்ந்து பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில் ஊதிய உயர்வு இல்லாமல், வேலை வாய்ப்புகளும் அமையாமல், விலைவாசி உயர்வைச் சமாளிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தினரின் மத்தியில் அதிகரித்து வரும் அதிருப்தியை அரசு உணரத் தொடங்கி இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.

சுகாதாரம், மருத்துவம், கல்வி ஆகிய துறைகளுக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் தனிக் கவனம் செலுத்தப்பட்டிருந்தாலும், தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலேதான் இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது; சுங்கவரியில் அவர்களுக்கு அதிக சலுகைகள்  அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்துவதற்காக ஒன்றிய பா... அரசால் இந்த நிதிநிலை அறிக்கை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ‘ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்புஎன்று கூறப்படும் பழமொழி போல ஓரவஞ்சனையாகப் பீகார் மாநிலத்திற்குப் பல நலத்திட்டங்களையும் சலுகைகளையும் வாரி வழங்கியிருக்கும் இந்த நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு ஓர் அறிவிப்புகூட இடம்பெறாமல் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதே! “இது மாநிலங்களுக்கு இடையே பாகுபாடுகளை உருவாக்கும்; பிரிவினைவாத போக்கை ஏற்படுத்தி இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும்என்று திருமாவளவன் குறிப்பிடுவது இங்கே நினைவுகூரத்தக்கதே.

தமிழ்நாடு ஏற்காத கொள்கைகளையும் மொழியையும் திணிப்பதில் ஒன்றிய பா... அரசு காட்டும் ஆர்வத்தில் சிறு துளியாவது இந்த நிதி ஒதுக்கீட்டில் காட்ட வேண்டாமா?” என்று தமிழ்நாட்டின் முதல்வர் வெளிப்படுத்தும் ஆதங்கம், நம் எண்ண அலைகளைப் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.

இது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான நிதிநிலை அறிக்கையாக இல்லாமல், ஒன்றிய அரசின் பா... ஆட்சி நடத்தும் மாநிலங்களில் அதிகாரத்தைத் தக்க வைப்பதற்கான தந்திர அறிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டு முதல்வர் குறிப்பிடுவது போல, “வெற்றுச் சொல் அலங்காரங்களும் வஞ்சனையான மேல் பூச்சுகளும் கொண்ட அறிக்கையின் மூலமாக இந்திய நாட்டு மக்களை வழக்கம்போல ஏமாற்றும் பா...வின் நாடகம் தொடர்வதாகவே அமைந்திருக்கிறது!” இத்தகைய மாற்றாந்தாய் எண்ணங்கள் ஆரோக்கியமான அரசியலுக்கு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

ஓரவஞ்சகத்திலே உண்டு கொழிக்கும் ஆட்சியாளர்களைக் காணும்போது...

கணக்கு மீறித் தின்றதாலே

 கனத்த ஆடு சாயுது - அதைக்

கண்ட பின்னும் மந்தையெல்லாம்

அதுக்கு மேலே மேயுது!”

என்னும் பட்டுக்கோட்டையாரின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்