news-details
தமிழக செய்திகள்
எதிர்நோக்கின் நம்பிக்கை நட்சத்திரங்களின் யூபிலிக் கொண்டாட்டம் - 2025

சனவரி 26 அன்று சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம், வளரும் குழந்தைகளின் மறைக்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ‘எதிர்நோக்கின் திருப்பயணிகளான நம் குழந்தைகளின் எதிர்நோக்கு என்ன?’ என்ற பொருளில் குழந்தைகளுக்கான யூபிலிக் கொண்டாட்டக் கூடுகை சாந்தோம் பள்ளியில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. தமிழ்நாடு ஆயர் பேரவையின் மறைக்கல்விப் பணிக்குழுச் செயலர் அருள்பணி. அனலின் மற்றும் மறைமாவட்ட அருள்பணியாளர்கள் பலரும் பங்கேற்றனர். ‘உன்னையும் உன்னை வழிநடத்தும் இறைஆற்றலையும் நம்புஎன்ற தலைப்பில் அருள்பணி. பீட்டர் தும்மா அவர்களும், ‘நாம் ஏன் எதிர்நோக்கின் திருப்பயணிகள் என அழைக்கப்படுகிறோம்? நாம் எப்படி நம்பிக்கை நட்சத்திரங்களாக மின்ன முடியும்?’ என்ற தலைப்பில் அருள்பணி. சதிஷ்பால் .. அவர்களும், ‘கடவுளுக்கு மகிமை - குழந்தைகள் ஆற்றலோடும் துடிப்போடும் இருப்பதுபோன்ற கருத்தாழமிக்க தலைப்பிலே திருமதி. பவுலின் ரோஸ் அவர்களும் கருத்துரை வழங்கினர். பாடல்கள், கதைகள், திறன் கண்டறியும் விளையாட்டுகள், நம்பிக்கைச் சுவரில் தங்கள் எண்ணங்களை வெளியிடல் எனப் பல குழந்தைகளுக்கான மகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அருள்பணி. ரேமண்ட் பீட்டர் அவர்கள் மறைக்கல்வி பிள்ளைகள் தங்கள் வாழ்விலே இயேசுவையே மையப்புள்ளியாகக் கொண்டு செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் 12 மறைவட்டங்களிலுள்ள 96 பங்குகளிலிருந்து 3478 மறைக்கல்வி பயிலும் குழந்தைகள், 565-க்கும் மேற்பட்ட மறைக்கல்வி ஆசிரியர்கள், தன்னார்வத் தொண்டர்கள், அருள்தந்தையர்கள், அருள்சகோதரிகள், பெஸ்கி, அருள் கடல், இளங்குருமடம், திரு இருதய குருத்துவப் பயிற்சி இல்லங்களிலிருந்து குருமட மாணவர்கள் கலந்துகொண்டனர்.