news-details
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 7-ஆம் ஞாயிறு (23-02-2025) (மூன்றாம் ஆண்டு) 1சாமு 26:2,7-9,12-13,22-23; 1கொரி 15:45-49; லூக் 6:27-38

திருப்பலி முன்னுரை

அன்றாடம் அனைவரையும் அன்பு செய்து, நாம் பேறுபெற்ற மக்களாக வாழ இந்த ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, பகைவருக்கு அன்பைக் கொடுக்கவும், வெறுப்போருக்கு நன்மை செய்யவும், சபிப்போருக்கு ஆசி வழங்கவும், இகழ்ந்து பேசுவோருக்காக இறைவேண்டல் செய்யவும், கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தைக் காட்டவும்எதையும் எதிர்பார்க்காமல் கடன் கொடுக்கவும், இரக்கத்தோடு வாழவும், மன்னிப்பு கேட்க முந்திக்கொள்ளவும், எவரையும் தீர்ப்பிடாமல் இருக்கவும் நமக்கு அழைப்புவிடுக்கிறார். இந்த மதிப்பீடுகளின்படி வாழ்ந்தாலே நாம் வாழும் இடம் சொர்க்கமாகிவிடும். இந்த வாழ்க்கை இறைவன் கொடுத்த மிகப்பெரிய கொடை! நாளை என்பது நமது கரங்களில் இல்லை. அனைவரோடும் நல்லுறவுடன் வாழ்வோம். ஒவ்வொரு நாளும் அடுத்திருப்போருக்கு நன்மை செய்வதில் கவனமாய் இருப்போம். இயேசுவின் அன்பை அனுதினமும் சுவைத்து, அதை அனைவருக்கும் கொடுக்கும் செயல்வீரர்களாக மாறுவோம். கடவுளிடமிருந்து அனைத்தையும் இலவசமாகப் பெற்றுக்கொண்ட நாம், உடன் வாழும் சகோதர- சகோதரிகளுக்கு நம்மிடம் உள்ளதைப் பகிர்ந்து வாழ்வோம். நாம் எதை விதைக்கிறோமோ அதை மட்டுமே அறுவடை செய்வோம். நற்செயல்களை விதைத்து நூறு மடங்கு பலன் கொடுத்து வாழ வரம் வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.

முதல் வாசகம் முன்னுரை

தனக்கு இன்னாது செய்த சவுலை வெறுக்காமல், அவரின் உயிரை விட்டுவைக்கின்றார் தாவீது. தன் கையில் சவுலின் உயிர் கிடைத்தும், தனக்கு வாய்ப்புகள் கிடைத்தும், சவுலுக்குத் தீங்கு செய்ய முற்படவில்லை. ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்கள் அவருக்குரியவர்கள். அவர்கள் பணிவாழ்வில் துணையாய் இருப்பது நமது கடமை. இறைவனின் பணிக்காகத் தங்களை அர்ப்பணித்தவர்களை இறைவனே காப்பார் என்று கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

ஒருவர் தம்மை ஆதாமின் இயல்போடு இணைத்துக்கொண்டால் அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியாமல், மண்ணைச் சார்ந்த இயல்பைக் கொண்டவராக இறந்துவிடுவார். ஆதலால், கிறிஸ்துவின் இயல்பில் வாழும்போது, பேறுபெற்ற மக்களாக ஆசிர்வதிக்கப்படுகிறார். திருமுழுக்கு வழியாகக் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்ட நாம் இறுதிவரை அவரோடு இணைந்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1) அன்பின் இறைவா! உமது பணிக்காக நீர் தேர்ந்துகொண்ட திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரையும் ஆசிர்வதியும். இறைப்பணிக்காகத் தங்களையே அர்ப்பணித்த இவர்களின் பணிவாழ்விற்கு நாங்கள் துணையாய் இருக்கவும், அவர்களின் துன்ப நேரங்களில் துணையிருக்கவும் தேவையான வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2) எம்மோடு வாழும் ஆண்டவரே! எங்கள் குடும்பங்களுக்கும், பங்கிற்கும்  நீர் செய்த அனைத்து வல்ல செயல்களுக்காகவும் நன்றி கூறுகின்றோம். எங்களின் சிந்தனை, சொல், செயல்களால் அடுத்திருப்போருக்கு நன்மைகளை மட்டும் செய்து, பேறுபெற்ற மக்களாக வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3) எம்மை நேசிக்கும் ஆண்டவரே! இன்றைய திருப்பலியில் பங்குகொண்டுள்ள எங்கள் அனைவரையும் ஆசிர்வதியும். இறைவார்த்தையையும், மறையுரையையும் கேட்கும் நாங்கள் அவற்றின்படி வாழவும், தகுந்த தயாரிப்போடு திருப்பலியில் பங்குகொள்ளவும், ஒப்புரவு என்ற அருளடையாளத்தால் எங்கள் ஆன்மாவைத் தூய்மையாக்கி தூய மக்களாக வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4) அன்பின் ஆண்டவரே! எமது குடும்பத்திற்கு ஆசிர்வாதமாய் நீர் கொடுத்த எமது குழந்தைகளுக்காய் நன்றி கூறுகின்றோம். அவர்களை ஒவ்வொரு நாளும் இறைநம்பிக்கையிலும் இறைஞானத்திலும் நாங்கள் வளர்க்கவும், அழைத்தல் என்ற உன்னதக் கொடையின் முக்கியத்துவத்தை அவர்கள் மனத்தில் விதைக்கவும் தேவையான வரத்தை எமக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.