news-details
ஞாயிறு தோழன்
பிப்ரவரி 16, 2025, ஆண்டின் பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) எரே 17:5-8; 1கொரி 15:12,16-20; லூக் 6:17,20-26

திருப்பலி முன்னுரை

ஆண்டின் பொதுக்காலம்  ஆறாம் ஞாயிறு, பேறுபெற்ற மக்களாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுபேறுபெற்ற மக்கள் யார்?’ என்பதையும், ‘சாபத்துக்குரிய மக்கள் யார்?’ என்பதையும் தெளிவாகக் குறிப்பிடுகிறார். நாம் அனைவரும் மகிழ்வுடன் வாழ விரும்புகிறோம்; இறைவனும் நாம் மகிழ்வுடன் வாழ்வதையே விரும்புகிறார். எளிமை, பசி, வருத்தம், கண்ணீர், வெறுப்பு ஆகியவற்றால் வாடும் மக்களைப் பார்த்துநீங்கள் பேறுபெற்றவர்கள்என்கிறார். காரணம் ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோர், பசியால் வாடுவோர், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மனிதர்களை அல்ல; மாறாக, கடவுளை மட்டுமே நம்பி வாழ்கிறார்கள். இறைவன் மட்டுமே அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார். இறைவன்மீது அவர்கள் கொண்ட நம்பிக்கைதான் அவர்களை அன்றாடம் வாழ வைக்கிறது. பணம், பதவி, பட்டம், பகட்டு, வீண்பெருமை, ஆடம்பரம், சொத்து சேர்த்தல், மற்றவர்களின் துன்பத்தில் மகிழ்ச்சி காணுதல், மற்றவர்களை ஏளனமாகப் பேசுதல், பணத்தை வைத்து மனிதர்களை எடைபோடுதல், ஆடை ஆபரணங்களைப் பார்த்து மரியாதை கொடுத்தல்பகிர்ந்து கொள்ளாமையார் எப்படிப் போனால் நமக்கென்ன? என்று வாழும் மந்த உள்ளம் போன்ற குணங்களைக் கொண்டோர் பேறுபெற்ற மக்களாக வாழும் தகுதியை இழந்துவிட்டனர் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. நம் மனம் கோவிலானால் அது நமக்கு நல்லது; நம் குணம் கோவிலானால் அது அனைவருக்கும் நல்லது. நமது மனத்தையும், குணத்தையும் பலருக்கு மன அமைதி கொடுக்கும் கோவிலாக மாற்றுவோம். நாமும் பேறுபெற்றவர்களாக, இறைவனின் ஆசி பெற்ற மக்களாக வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

நம்பிக்கை என்ற சொல் மட்டுமே மனிதனின் வாழ்வை நகர்த்திக்கொண்டு இருக்கிறது. சிலர் மனிதர்கள் மீது அளவுகடந்த நம்பிக்கை வைக்கிறார்கள். ஏமாற்றம் அடையும்போது மிகுந்த வருத்தம் அடைந்து வாழ்வையே இழக்கிறார்கள். இமைப்பொழுதும் நம்மை விட்டு நீங்காமல் காத்து வரும் இறைவன் மீது நம்பிக்கை வைக்கும்போது, நாம் ஏமாற்றம் அடைய மாட்டோம்ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர். ஆண்டவரே அவர்களது நம்பிக்கை என்று ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகம் கொரிந்து நகர மக்களை அழிவுக்குரிய உடலின்மேல் நம்பிக்கை வைக்காமல், கிறிஸ்துவின் உயிர்ப்பின்மீது நம்பிக்கை கொண்டு வாழ அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப் பெற்ற நாமும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் அன்றாடம் வளர வேண்டும். இறந்து உயிருடன் எழுப்பப்பட்டு இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இயேசுவோடு வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்கு நாம் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1) எங்களோடு வாழும் ஆண்டவரே! எம் திரு அவைத் தலைவர்களை ஆசிர்வதியும். நீர் அவர்களுக்கு இலவசமாகக் கொடுத்த அழைத்தல் வாழ்வில் உம்மை அனுதினமும் அனுபவித்து வாழவும், இயேசுவின் மதிப்பீடுகளை விதைத்து வாழவும் தேவையான வரத்தைத் தந்து காத்து வழிநடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2) ‘நான் உங்களோடு இருக்கிறேன்என்று மொழிந்த ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் உலகச் செல்வங்களின் மீது நம்பிக்கை வைக்காமல், உண்மைச் செல்வமாகிய உம்மில் நம்பிக்கை வைத்து வாழவும், அனைத்து நிலைகளிலும் உம்மீது கொண்ட நம்பிக்கையில் தளர்ந்துவிடாமல் வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3) ‘உங்களைக் கைவிடமாட்டேன்என்று மொழிந்த ஆண்டவரே! இந்த யூபிலி ஆண்டில் எங்களிடம் உள்ள அன்பு, கருணை, இரக்கம், உடனிருத்தல் போன்ற பண்புகளை மற்றவர்களோடு பகிர்ந்து வாழவும், இந்த உலகில் வாழும் அனைத்து மக்களும் இறைவனின் சாயல் என்பதை உணர்ந்து, துன்பப்படும் அனைவருக்கும் துணை நிற்கவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4) அன்பின் ஆண்டவரே! எம் நாட்டுத் தலைவர்களை ஆசிர்வதியும். எம் தலைவர்கள் தன்னலம் மறந்து மக்கள் நலனில் அக்கறை கொண்டு வாழவும்மக்கள் என்ற சொத்தைப் பேணிக்காக்கவும், நாட்டில் வன்முறை ஒழிந்து மக்கள் அனைவரும் மகிழ்வோடு வாழவும், விவசாயமும், விவசாய மக்களின் வாழ்வும்  செழிக்கவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.