திருப்பலி முன்னுரை
ஆண்டின்
பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு தூய்மையான பார்வை கொண்டு வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. புறப்பார்வை நம் அறிவை விசாலமாக்குகின்றது. அகப்பார்வை நம் ஆன்மாவையும் உள்ளத்தையும் வளப்படுத்துகின்றது. ‘நான் யார்? எனது நிறை - குறை என்ன?’ என்பதை யார் தெளிவாக அறிந்துள்ளார்களோ, அவர்களே சரியான பார்வை கொண்டுள்ளார்கள். மற்றவர்களின் தவற்றைச் சுட்டிக்காட்டுவதில் நீதிபதிகளாக இருக்கிறோம்; நமது தவற்றை ஏற்றுக்கொள்வதில் வழக்கறிஞர்களைப்போல் வாதாடுகிறோம். பாவம் என்ற சேற்றிலிருந்து எழுந்து, திருவிவிலியம்
வாசித்தல், நற்கருணை ஆராதனை, தினமும் திருப்பலியில் பங்குகொள்ளுதல், குடும்பச் செபம் செபித்தல், ஒப்புரவு இவற்றின்
வழியாக நமது ஆன்மாவைத் தூய்மை செய்து,
சிறந்த கனிகொடுக்கும் மரங்களாக மாறுவோம். இன்றைய நற்செய்தியில் இயேசு ‘உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்’ என்கிறார். நம் உள்ளத்தை நல்ல சிந்தனையால், நேர்மறை எண்ணங்களால், வாழ்வு கொடுக்கும் வார்த்தையால், மற்றவர்களை வாழ்விக்கும் செயல்களால் நிரப்புவோம்.
மற்றவர்களைப் பற்றிய தவறான கருத்துகளை, கண்ணோட்டங்களை முற்றிலும் அகற்றுவோம். நம்மிடமுள்ள அல்லவைகளை எல்லாம் அகற்றி, நல்ல மதிப்பீடுகளில் நாளும் வளர்வோம். இயேசுவைப் போன்று அன்பும் கனிவும் இரக்கமும் கொண்ட பார்வையும், எவரையும் தீர்ப்பிடாத மனநிலையும் கொண்டு வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை
சில
நல்ல வார்த்தைகள் நம்மை வாழ வைக்கின்றன. சில வார்த்தைகள் நம்மை வீழ்ச்சி அடையச் செய்கின்றன. நாம் பயன்படுத்தும் வார்த்தைகள்தான் நாம் யார் என்பதையும், எப்படிப்பட்டவர்கள் என்பதையும், நம்முடைய ஆளுமையையும் வெளிப்படுத்துகின்றன. அன்றாடம் நம் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் மாசின்றி இருக்க வேண்டும் என்ற கருத்தை உணர்த்தும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
நாம்
அனைவரும் கடவுளை அறிந்து அன்பு செய்யப் படைக்கப்பட்டுள்ளோம். கிறித்தவன், கிறித்தவள் என்ற முகவரியைப் பெற்ற நாம், ஆண்டவரின் பணியை அன்றாடம் செய்துகொண்டே இருக்கவேண்டும். துன்பங்கள், இன்னல்கள், இடையூறுகள், அவமானங்கள் என எது வந்தாலும்
துவண்டுவிடாது இறைவனின் பணியைத் துடிப்போடு செய்துகொண்டே செல்ல வேண்டும். ஆண்டவருக்காக
நாம் செய்யும் பணி எப்போதுமே வீண்போகாது. இரட்டிப்பான ஆசிர்வாதத்தையே தரும் என்று கூறும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டு
1) அன்பின்
ஆண்டவரே! எம் திரு அவையை வழிநடத்தி வரும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் அனைவரையும் ஆசிர்வதியும். இவர்கள் அனைவரும் உமது வார்த்தையை அன்றாடம் வாசித்து, அதைத் தங்களுடைய வாழ்க்கையால் அறிவிக்கத் தேவையான ஞானத்தைத் தந்து காத்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2) கருணையின்
இறைவா! எங்கள் அனைவருக்கும் நீர் கொடுத்த இந்த வாழ்வுக்காக நன்றி கூறுகின்றோம். எங்களுடைய வாழ்க்கையில் அன்பு, மன்னிப்பு, இரக்கம், பொறுமை, விட்டுக்கொடுத்தல், அமைதி போன்ற பண்புகளை விதைத்து நூறு மடங்கு பலன் கொடுத்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3) எம்மோடு
வாழும் ஆண்டவரே! எமது நாட்டுத் தலைவர்களை ஆசிர்வதிக்க வேண்டுகின்றோம். மண்ணையும் மக்களையும் பாதுகாக்க எம் தலைவர்களுக்குத் தேவையான ஞானத்தையும் முன்மதியையும் தந்து காத்து வழிநடத்தவும், மக்கள்
அனைவரையும் கொடிய நோய்களினின்று பாதுகாக்கவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. இறைவார்த்தை
வழி எம்மோடு அன்றாடம் பேசும் ஆண்டவரே! எங்கள் குடும்பங்களை, பங்கு
மக்களை உம் பாதம் அர்ப்பணிக்கிறோம். நாங்கள் அனைவரும் வாழ்க்கையை வளப்படுத்தும் மகிழ்ச்சியான வார்த்தைகளைப் பேசவும், புண்படுத்தக் கூடிய வார்த்தைகளைத் தவிர்த்து வாழவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.