இந்திய மண்ணில் சுதந்திரம் கண்விழித்து 78 ஆண்டுகள் கடந்த பின்னும், எழுத்தறிவின்மை என்பது முற்றிலும் ஒழிக்க முடியாத பெரும் சவாலாகவே நீடிக்கிறது. அறியாமை இருள் சமூகத்தைச் சூழ்ந்திருக்கும் அவலம் இன்றும் தொடர் கதையாகிக் கொண்டே இருக்கிறது.
இந்திய
அரசமைப்புச் சட்டத்தின் 86-வது திருத்தம், கல்வியை அடிப்படை உரிமைகளில் ஒன்றாகச் சேர்த்திருந்தாலும், அனைவருக்கும் தரமான கல்வி என்பது இன்றளவும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. கல்வி அமைப்பின் இரட்டைத் தன்மையே இதற்குக் காரணsம் என்கிறது ஆச்சாரியார் இராமமூர்த்தி கமிட்டியின் அறிக்கை. அதாவது, பணம் படைத்தவருக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியும், அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு அறிவும் திறனும் வளர்க்க ஆதாரமற்றக் கல்வியும் வழங்கப்படுவதுதான் ‘சமூக நீதி’ என்று இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
ஆயினும்,
விடுதலை அடைந்ததிலிருந்து இன்றுவரை, இந்தியாவில் கல்வி வளர்ச்சியே இல்லை என்றும் எவராலும் கூறிவிட முடியாது. கல்விநிலையங்கள் எண்ணிக்கைகளில் அதிகரித்திருப்பதும், அங்கே பாடத்திட்டங்களில் அதன் உள்பிரிவுகளில் பல்வேறு நுண்துறைகள் வளர்ச்சி கண்டிருப்பதும் வெள்ளிடைமலை. ஆயினும், கற்றறிந்த அறிவுச் சமூகத்தை முற்றிலும் நம்மால் காண இயலவில்லையே? என்பதுதான் இங்குக் கவலையளிக்கிறது.
ஆரம்பக்கல்வியில்
அடியெடுத்துவைக்கும்
100 குழந்தைகளில் 10 பேர் ஐந்தாம் வகுப்பிற்கு மேல் படிப்பதில்லை; எட்டாம் வகுப்பிற்கு மேல் 30 குழந்தைகள் நின்று விடுகின்றனர்; உயர்கல்வி நிலையங்களின் உள்ளே வெறும் 20 பேர் மட்டுமே நுழைகின்றனர்! அந்த 20 பேரிலும் பெரும்பான்மையினர், பணம் படைத்தோரின் வாரிசுகள். இத்தகைய சூழலில், ‘எல்லாருக்கும் கல்வி’ என்ற யுனெஸ்கோ அமைப்பின் கனவு எப்போது இங்கு நனவாகும்? என்பதே நமது கேள்வி.
ஆரம்பக்
கல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஒன்றிய-மாநில அரசுகள் உயர்கல்வியைத் தனியாரிடம் தாரை வார்த்து விட்டன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புது டெல்லி ஆகிய மாநிலங்கள் தவிர்த்து பல்வேறு மாநிலங்களில் அரசுப் பொறுப்பில் நடக்கும் தொடக்கப் பள்ளிகள் பலவற்றில் அடிப்படை வசதிகள்கூட இல்லை என்பது வருத்தமளிக்கும் செய்தி. இந்தியா முழுவதும் 75 ஆயிரம் பள்ளிகளில் வகுப்பறைகளே கிடையாது என்பது அதிர்ச்சி அளிக்கும் செய்தி.
காளான்
குடைகள் போல் அங்குமிங்கும் பெருகிக் கிடக்கும் மழலையர் பள்ளிகளும், ஆங்கில வழிப் (மெட்ரிக்குலேஷன்) பள்ளிகளும் நிர்ணயித்திருக்கும் கல்விக் கட்டணத் தொகை சாமானியரை விழிபிதுங்க வைக்கிறது. ‘இந்தியாவில் பல்கலைக்கழகங்களில் படிப்பதைவிட, தொடக்கப் பள்ளிகளில் படிப்பதற்கு அதிகம் செலவாகிறது’ என்கிறது
புள்ளிவிவரம். சற்றே விழித்துக் கொண்ட மாநில அரசுகள் சிறிது உறக்கம் கலைந்து, பள்ளிக் கட்டணத்துக்கு உச்சவரம்பு விதித்திருப்பது பாராட்டத்தக்கது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக இன்று அரசுப் பள்ளிகள் தமிழ்நாட்டில் உயர்ந்திருப்பதும் வரவேற்கத்தக்கது. ஆயினும், அண்மையில் வெளிவந்திருக்கும் கல்வியின் வருடாந்திர நிலை அறிக்கை - 2024 (ASER - Annual Status of Education Report - 2024) பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.
29 மாநிலங்கள்
மற்றும் யூனியன் பிரதேசங்களில், 65 மாவட்டங்களில், 17,997 கிராமங்களில், 15,728 பள்ளிகளில், 3,52,028 குடும்பங்களில், 6,49,491 குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த வருடாந்திரக் கல்விநிலை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
இது
குழந்தைகளின் பள்ளிப் படிப்பு மற்றும் கற்றல் நிலை குறித்த நாடு தழுவிய தரவுகளாகும். நாட்டின் கிட்டத்தட்ட அனைத்துக் கிராமப்புற மாவட்டங்களுக்கும் சென்று குழந்தைகளின் பள்ளிப் படிப்பு நிலை, அடிப்படை வாசிப்பு மற்றும் எண்கணித நிலைகள் குறித்த அறிக்கையை இது வெளிப்படுத்துகிறது. இவ்வறிக்கையில்,
3 முதல் 16 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளின் பள்ளிப் படிப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது; 5 முதல் 16 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளின் எளிய உரையைப் படிக்கும் திறனும் அடிப்படை எண்கணிதத்தைச் செய்யும் திறனும் சோதிக்கப்பட்டிருக்கிறது.
14 முதல் 16 வயதுடைய மூத்த குழந்தைகளின் எண்ணிமத் தொழில்நுட்ப (டிஜிட்டல்) அணுகல் மற்றும் தனித் திறன்களின் மதிப்பீடுகளும் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன.
இதில்,
மூன்றாம் வகுப்பில் கல்வி பயிலும் 76 விழுக்காடு மாணவர்கள் மற்றும் ஐந்தாம் வகுப்பு பயிலும் 55 விழுக்காடு மாணவர்களால் இரண்டாம் வகுப்புப் பாடப்புத்தகங்கள் தங்கள் தாய்மொழியில் இருந்தபோதும், அதைப் படிக்க முடியவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த வகுப்புகளில் உள்ள 66 விழுக்காடு மாணவர்களால் சாதாரண இரண்டு இலக்கக் கூட்டல், கழித்தல், வகுத்தல் கணக்குகளைப் புரிந்துகொள்ளவும் விடை காணவும் முடியவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
2022-ஆம் ஆண்டு
அறிக்கை, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இரண்டிலுமே வாசிப்பதில் உள்ள பெரிய கற்றல் இழப்புகளைச் சுட்டிக்காட்டியது. ஆயினும், 2024-ஆம் ஆண்டு அறிக்கை மூன்று மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடையே காணப்படும் கற்றல் இழப்பு கல்வியின் தரத்தைப் பெரிய அளவில் பின்னடையச் செய்திருப்பதாகக் குறிப்பிடுகிறது. எண்கணிதத்தைப் பொறுத்த வரையில் அகில இந்திய அளவில் இழப்பு இருந்தபோதிலும், வாசிப்பில் ஏற்பட்ட இழப்புடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவாகவே இருக்கிறது.
உலகையே
உலுக்கிய ‘கொரோனா’ பெருந்தொற்றுக் காலகட்டத்திற்கு முன்பிருந்த நிலையை விட, மாணவர்களின் கல்வித்தரம் தற்போது சற்றே உயர்ந்திருந்தாலும், அது சொற்ப அளவிலேயே உள்ளது. ஐந்தாம் வகுப்பு மாணவர்களைப் பொருத்தமட்டில் 30 விழுக்காடு மாணவர்களால் மட்டுமே எளிமையான கணிதங்களுக்கு விடை காண முடிகிறது; மீதம், 70 விழுக்காடு மாணவர்கள் கணித விடைகளைக் கண்டறிய திணறுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இத்தரவுகளில் வட மாநிலங்களின் நிலை
மிகவும் மோசமாக இருக்கிறது.
குழந்தைகளிடம்
குறைந்து வரும் எண்கணித அறிவுத்திறனும் கற்றல் இழப்பும் வாசிப்புக் குறைவும் கடந்த 10 ஆண்டுகளில் இருந்த நிலையை விட மிக அதிகமாகத் தற்போது இருக்கிறது. மேலும், வாசிப்புப் பின்னடைவு எல்லாப் பள்ளிகளிலும் பின்தங்கி இருப்பதாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆயினும், எண்கணிதத்தில் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் அதிக முன்னேற்றம் இருப்பதாகவும் கணக்கிடப்பட்டிருக்கிறது.
மற்ற
மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட் டில் தொடக்கக் கல்வி முதலே குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது. இருப்பினும், அடிப்படைக் கல்வியின் தரம் நாடு முழுவதும் சரி செய்யப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது என்பதை இந்த ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. எட்டாம் வகுப்பு வரையிலான கட்டாயத் தேர்ச்சி முறை மீண்டும் விவாதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன. நாட்டின் இதர மாநிலங்களின் புள்ளிவிவரங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாடு சற்று முன்னேற்றம் கண்டிருந்தாலும், தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பைக் கடந்து உயர்நிலைக் கல்விக்குச் செல்லும் மாணவர்களைச் சமாளிக்க முடியவில்லை என்று புலம்பும் ஆசிரியர்களும் நம் கண்முன் வருகின்றனர்.
1990-களில் தமிழ்நாட்டின்
எழுத்தறிவு விகிதம் 62 விழுக்காடு; இன்றைக்கு அது, 80 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது. அதேநேரம் பள்ளி செல்லும் குழந்தைகளின் வாசிப்புத் திறன் சரிந்துகொண்டே வருவதைத் தேசிய அளவிலான ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. நமது குழந்தைகள் தாய்மொழியில் வாசிக்கவே திணறுகிறார்கள். மேலும், பள்ளிக் குழந்தைகள் புத்தகத்தைக் கையில் எடுத்து சுயமாக வாசிக்க உருவானதுதான் ‘வாசிப்பு இயக்கம்.’ அத்தகைய செயல்பாடுகள் இன்று ஊக்குவிக்கப்பட வேண்டும்.
தன்னை
அறியவும் தன் ஆற்றலை வெளிப்படுத்தவும் ஒழுக்கம் செறிந்த நெறிகளைப் பேணிப் பராமரிக்கவும் உதவுவதற்குப் பெயர்தான் ‘கல்வி.’ கல்வியின் பயன் அறிவு; அறிவின் பயன் ‘பண்பாடு’ என்ற புரிதல் நமக்கும் நம் குழந்தைகளுக்கும் வர வேண்டும். கல்வியின்
நோக்கம் வாழ்க்கையில் வெற்றி பெறுவது அன்று; மாறாக, நாம் வாழும் வாழ்க்கையைப் பலப்படுத்துவது என்பதை உணர்ந்து, குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியை வளமான கல்வியாக மாற்ற முயலுவோம்.
நாளையத்
தலைவர்கள் தோன்றும் நாற்றங்கால் தொடக்கக்கல்விக் கூடங்கள். நாட்டின் எதிர்காலச் சிற்பிகளுக்குச் சிறப்பான கல்வி தருவோம்! நானிலம் போற்றிடும் நன்மக்களாய் வளர்த்தெடுப்போம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்