“மலர்கள் வேறுபடலாம்; ஆனால், தேன் ஒன்றுதான்” என்றார் கவிக்கோ அப்துல் இரகுமான். இங்கு மலர்கள் ஒன்றுதான்; ஆனால், அவற்றில் சில பொதித்து வைத்திருக்கும் தேனிலோ விஷம் கலந்திருப்பதே அதிர்ச்சியளிக்கிறது.
‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்கிறது முதுமொழி. தாயையும் தந்தையையும் கல்வி கற்றுத்தரும் ஆசானையும் தெய்வங்களாகப் போற்றி மதித்தது இச்சமூகம். அவர்கள் அறநெறியில் மேலோங்கி, வாழ்வியலில் சிறந்தோங்கியதால் அருள்பாவிக்கும் இறைவனுக்கு இணையாகப் போற்றப்பட்டனர். மனிதர்கள் தெய்வங்கள் ஆகலாம் என்பதற்கான சான்றுகள் இவர்கள்.
மனிதன்
என்ற பெயர் எப்படி வந்தது? சமஸ்கிருதத்தில் ‘மன்’ என்றால் மனம் என்று பொருள்; மனம் என்ற ஒன்றைப் பெற்றிருப்பதால் அவன் ‘மனுஷன்’
- மனிதனாகிறான்.
மற்ற
உயிர்களுக்கு மனம் இல்லை. மனம் இருப்பதாலேயே மனிதன் மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபட்டான், மற்ற உயிரினங்களை விட உயர்ந்து நின்றான். ஆக, மனம் மனிதனுக்கு வரமா? என்றால் ஆம், பலருக்கு வரம்; சிலருக்கு அது சாபம். மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டவர்களுக்கு அது வரமே! அது போகின்ற போக்கிலேயே அதை அலைய விடுபவர்களுக்கு அது சாபமே!
எல்லா
உணர்வுகளிலும் உச்சம் தொட்டவன் மனிதன். ஆயினும், அதை நெறிப்படுத்தும் தன்மையையும் ஆற்றலையும் அவன் கொண்டதால்தான் அவன் படைப்பின் சிகரமாக இருக்கிறான். நல்லது-தீயது என ஆய்ந்து அறிகிறான்;
உண்மை-பொய்மை என வேறுபடுத்திப் பார்க்கிறான்;
சரி-தவறு எனத் தெளிவுபடுத்திக் கொள்கிறான். இந்த வேற்றுமை அறியாதவர்களை, இந்த வேறுபாட்டை உணராதவர்களை எந்த வரையறையில் வைப்பது? இவர்கள் மனம் கொண்ட மனிதர்களா? சிந்தனைத் தெளிவு கொண்ட படைப்பின் சிகரங்களா? புனிதத்தின் சாயல் கொண்ட மனிதர்களா? என்னவென்று சொல்வது?
மதிப்பீடு
(Values), உரிமை
(Rights), ஒழுங்குமுறைகள்
(Rules and Regulations), கட்டுப்பாடு
(Discipline) என்பவை
யாவும் மானுட சமூகத்தின், அறநெறிக் கட்டமைப்பின், அதன் நாகரிகத்தின் அளவுகோல்கள். இவற்றுள் ஒன்று பிறழ்ந்தாலும் உன்னதச் சமூகம் படைப்பது அரிது.
உடல்,
மனம், உணர்வு என்பவை சங்கமித்து அறநெறி வரையறைக்குள் தெளிந்த நீர்ப்பரப்பாகப் படைப்பின் மேன்மைகளைச் சுமந்து வந்த மானிடர் என்னும் நதி, கட்டவிழ்த்துவிடப்பட்ட புதிய கலாச்சாரம் கொண்டு வந்து குவித்த காமச் சேறும், பாவச் சகதியும் மனிதனின் மனநிலையை அடியோடு மாற்றிவிட்டன.
இங்கு
ஆசை என்பது வரையறை கடந்து, அதை அடையும் வேட்கை என்பது வெறியாகிவிட்டது. இங்கே காந்தியடிகளின் வார்த்தைகளே நம் நினைவுக்கு வருகின்றன: “கட்டுப்பாடு என்பதே நாகரிகமற்றது என்று நினைத்தால், எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் வாழ்வதே மனிதகுலச் சட்டமாகி விடும். இயற்கையிலேயே மனிதன், மிருகத்தை விட உணர்ச்சிவயப்பட்டவன். கட்டுப்பாடு இல்லையெனில்,
மனிதரின் அடங்காத காமம் முடிவில் மனித இனத்தையே அழித்துவிடும். தன்னைக் கட்டுப்படுத்துவதிலும் பிற நலனுக்காகத் தியாகம் செய்வதிலும் மிருகத்திடம் இல்லாத ஆற்றல் மனிதரிடம் இருப்பதால்தான், உயர் நிலையில் மனித இனம் இருக்கிறது” என்றால்
கண்காணிக்க வேண்டியவர்களே கபளீகரம் செய்யும்போது... “வேலியே பயிரை மேய்கிறது”
என்பார்கள். ஆனால், அண்மைக் காலங்களில் வேலிகளே வேட்டையாடுகின்றன. அன்பும் அறனும் கொண்ட கல்வியைக் கற்றுத் தரும் ஆசான்கள் பள்ளிகளில் குழந்தைகளைப் பாலியல் துன்புறுத்துதலுக்கு
உள்ளாக்குவதை வேறு எப்படிச் சொல்ல முடியும்?
அறிவுக்
கண் கொண்டிருக்கும் ஆசான்கள், காமவெறி கொண்ட கயவர்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்று தோன்றத் தொடங்கிவிட்டார்கள். ‘நுகர்வு வெறிகொண்டவர்க்கு நாணமுமில்லை; மானமும் இல்லை’ என்பார்கள். இவர்களும் அப்படித்தான் போல!
வாழும்போதே
முழுமையாக வாழ்ந்திட வேண்டும்; எத்தனை வருடங்கள் வாழ்ந்தோம் என்பதைவிட, எப்படி வாழ்ந்தோம் என்பதுதான் முக்கியம் என்பார்கள். ஒவ்வொரு கணப்பொழுதும் நாம் சிறப்புடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். ‘சிறப்பு’ என்பது பொருள் அல்ல; பதவியல்ல; பணமும் அல்ல; மாறாக, அது ஒழுக்கநெறி பிறழாத வாழ்வியல்!
ஒவ்வொரு
மனிதருக்கும் தனிமனிதக் கட்டுப்பாடு அவசியம்; அதையும் கடந்த
சமூகக் கட்டுப்பாடு என்பது இன்னும் மேலோங்கியிருக்க வேண்டும். “சமூகக் கட்டுப்பாடுகளில்தான் சுகமும், அமைதியும் பிறக்கின்றன” என்கிறார்
வால்டேர். இன்று காம வெறியர்களால் கட்டற்ற சமுதாயம் நம் கண்முன்னே கட்டமைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில்
அண்மைக் காலங்களில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கிருஷ்ணகிரியில் எட்டாம் வகுப்பு மாணவி மூன்று ஆசிரியர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியான செய்தி ஏற்படுத்திய அதிர்வுகள் அடங்குவதற்குள், மணப்பாறையில் தனியார் பள்ளி மாணவியிடம் அப்பள்ளியின் அறங்காவலர் வகுப்பறையிலேயே பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வெளியான செய்திகள் நம்மைப் பெரிதும் பதைபதைக்க வைக்கின்றன.
இத்தகைய
பள்ளி மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் சூழலில், இப்புகார்களில் உண்மைத் தன்மை உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கல்வித் தகுதி இரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து மாநிலம் முழுவதும் பாலியல் புகார்களில் சிக்கிய ஆசிரியர்கள் பட்டியலையும் அவர்கள் மீதான நடவடிக்கை விவரங்களையும் அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டுமெனத் துறை இயக்குநருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டிருப்பதும்,
அதன் தொடர்ச்சியாக “மருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு இரட்டிப்புத் தண்டனை வழங்கப்படும்” எனத்
தமிழ்நாடு முதல்வர் அறிவித்திருப்பதும் சற்றே ஆறுதல் தந்தாலும், கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே இச்சமூகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
இச்சம்பவங்கள்
தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கான அரசாணை - 121, 2012-ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டிருப்பதும், ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதி 12 (2) கீழ் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புகள் இருந்தபோதும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கும் வகையில் ‘போக்சோ’ சட்டத்தில் அண்மையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோதும் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படாதது கவலையளிக்கிறது.
ஆயினும்,
இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், மாநிலம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் மாணவ-மாணவிகளிடம் தவறான செயல்களில் ஈடுபட்ட ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதன்படி தொடக்கக் கல்வித் துறையில் 80, பள்ளிக் கல்வித்துறையில் 175 என மொத்தம் 255 ஆசிரியர்களின்
பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது; இவர்கள்மீது மார்ச் மாதமே நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதே!
இத்தகைய
சூழலில் ஒன்று, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியருக்குப் பாலியல் கல்வி, பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் அரசின் சட்ட நடவடிக்கைகள் பற்றிய தெளிவு முறையாக வழங்கப்பட வேண்டும்.
இரண்டு,
வீட்டிலும் பள்ளியிலும் பொதுவெளியிலும் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழ்வதை உறுதிப்படுத்தும் வகையில், அரசும் சமூகமும் இன்னும் தீவிரக் கவனம் கொண்டிருக்க வேண்டும். போதிய பாதுகாப்புச் சட்டங்களும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகளும் உறுதி செய்யப்பட்ட போதிலும், சமூகத்தில் எதிர்வரும் தலைமுறையினரிடமும் மனித மாண்பு, பாலியல் சமத்துவம், அறநெறி மதிப்பீடுகள் பற்றி முறையாகக் கற்றுக்
கொடுக்கப்பட வேண்டும். இத்தகைய மதிப்பீட்டுக் கல்வி நம் குடும்பங்களிலிருந்து தொடங்கப்பட வேண்டுமென வலியுறுத்த விரும்புகிறோம்!
மூன்று,
தாயாக, தந்தையாக, நல்வழி காட்டும் ஆசானாகப் பயணிக்க வேண்டிய மேன்மக்கள் தங்கள் சமூகக் கடமைகளை, பொறுப்பு மிக்க செயல்பாடுகளை அறநெறி பிறழாது பின்பற்ற வேண்டும். “வேலிகள் பயிர்களைக் காப்பதற்காகவே அன்றி, அவற்றை வேட்டையாடுவதற்காக அல்ல” என்பதை உணர்ந்தாக வேண்டும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்