ஒரு சமூகத்தின் மாண்பு அச்சமூகத்தின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் நாகரிக வாழ்வியலோடு இணைந்திருக்கிறது என்பதே பேருண்மை. இத்தகைய கூறுகளே அச்சமூகத்தின் முகவரியாய், அதன் வளமான அடையாளங்களாய் அமைகின்றன. அவ்வாறே, “உலகில் ஒரு நாட்டினுடைய மனித இனத்தின் சிறப்பையும் செம்மையையும் உயர்வையும் மேன்மையையும் உணர்த்த ‘நாகரிகம்’ மற்றும் ‘பண்பாடு’ என்னும் இரண்டு அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன” என்கிறார் தமிழறிஞர் இரா. நெடுஞ்செழியன்.
இக்கூற்று முற்றிலும் உண்மையே! இவ்விரு தன்மைகள்தான் மனித இனத்தைப் பிற உயிர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. அவ்விதத்தில், மனிதனின் புறநல ஆக்கமாக விளங்கும் உணவு, உடை, உறைவிடம், ஊர்தி, நிலம், புலம், தோட்டம், துரவு, கழனி, காடு, அணி, மணி, மாடமாளிகை, எழிலுடல், ஏற்றநிலை போன்றவற்றின் சிறப்பையும் செம்மையையும் உணர்த்துவதே நாகரிகம் (Civilization) என்பார்கள். அதுபோலவே, மனிதனின் அகநல ஆக்கமாக விளங்கும் அன்பு, அறிவு, ஆற்றல், இன்பம், இயல்பு, உணர்ச்சி, எழுச்சி, வீரம், தீரம், ஈவு, இரக்கம், அமைதி, அடக்கம், ஒப்புரவு, ஒழுக்கம், உண்மை, ஊக்கம், சினம், சீற்றம் போன்றவற்றின் மேன்மையையும் உயர்வையும் உணர்த்துவதே பண்பாடு (Culture).
இவ்விரு படிநிலைகளிலும் தமிழரின் வாழ்வியல் பெருமைகள் வானளாவ உயர்ந்தவை. தமிழரின் மொழி வளம், பண்பாடு, நாகரிகம் கண்டு உலகமே இன்றும் வியந்து நிற்கிறது; என்றும் மகிழ்ந்து போற்றுகிறது.
பண்டைய தமிழ்நாட்டில் தமிழ்ப் பெருங்குடி மக்களின் வாழ்வியலில் நாகரிகச் சிறப்பும் பண்பாட்டு மேன்மையும் சிறப்புற்றிருந்தது என்பதைப் பழம்பெரும் வரலாற்றுச் சின்னங்களும், புராதன காலப் பயன்பாட்டுப் பொருள்களும், சங்ககாலப் பைந்தமிழ் இலக்கியங்களும் சான்று பகர்கின்றன. அவ்வாறே, வைகைக் கரையில் இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியின் ‘கீழடி’ ஆய்வுகள் இன்னுமாய்த் தமிழின் தொன்மையை உணரச் செய்து, ‘கீழடி நம் தாய்மடி’ என்றே பறைசாற்றுகின்றன.
மேலும், தமிழுக்கும் தமிழினத்திற்கும் அதன் வளமையாலும், சிறப்பாலும் சீர்மிகு இலக்கியப் படைப்புகளாலும் உலக அரங்கில் இன்றும் என்றும் மாபெரும் அங்கீகாரமும் சிறப்பும் உண்டு என்றால் அது மிகையல்ல. மேலைநாடுகளில் பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு இருக்கைகள் அமைப்பதும், தமிழ் மொழியின் தொன்மையினை அறிய கல்வியாளர்களும் மொழி ஆர்வலர்களும் ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கைகள் வெளியிடுவதும் தமிழின் வளமையை, தமிழரின் பெருமையை உலகறியச் செய்கின்றன.
‘இலக்கணம் பேசும்
தொல் காப்பியமும்
வாழ்வியல் அறம்தரும்
வள்ளுவன் கூற்றும்
வளமாய் வாய்த்த வான்புகழ்
தமிழே - உந்தன்
இலக்கியச் செழுமை
எங்கேனும் உண்டோ!
அறநெறி வாழ்வியல்
செவ்வழி காட்டிடும்
வான்முகில் தொட்ட
செம்மொழி தமிழே
வளமை கொண்டவுன்
வாசம் எங்கும்
பரவிட உயர்ந்திட
வாழ்க நீ வாழ்கவே!’
என்றே பெருமை கொள்ளும் வகையில் சிறப்பு கொண்டது நம் மொழியும் அதன் இலக்கிய வளமையும்.
‘தமிழுக்கும் அமுதென்று பேர் –
அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்!’
என்றார் பாவேந்தர் பாரதிதாசன். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த இலக்கிய மரபுகளைக் கொண்ட அமுதமொழி நம் தாய்மொழி; அஃது இன்பத் தேன்மொழி; இலக்கியச் செம்மொழி. இது மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. குறிப்பாக, தமிழ் இலக்கியங்கள், வாழ்வின் பல்வேறு கூறுகளை எடுத்து இயம்புகின்ற உலகின் தலைசிறந்த இலக்கியங்களில் ஒன்று. வரையறை கொண்டு எல்லைக்கு உட்பட்ட மனித வாழ்வின் எதார்த்த அனுபவங்களை, பரந்த மனதுடனும், விரிந்த கற்பனை வளத்துடனும், சீர்தூக்கிப் பார்த்து, மொழிவழியாகச் சுவைபடத் தருவதே இலக்கியங்களின் தனிச்சிறப்பு.
சுருங்கக்கூறின், பல்லாயிரம் நபர்களின் வாழ்வியல் அனுபவங்களை ஓரிடத்தில் குவியலாக்கி அள்ளிக் கொடுப்பதே அழகுத் தமிழ் இலக்கியங்கள்.
இந்தப் பிப்ரவரி மாதத்தில் நம் இலக்கியத்தின் பெருமை அறிவோம்! கடந்துபோன வாழ்க்கையை அசைபோட்டுப் பார்க்கவும், நாளைய வாழ்க்கை நிகழ்வுகளை அறத்தின் வழிநின்று சீர்தூக்கிச் செம்மைப்படுத்திக்கொள்ளவும் வழிகாட்டுவதே நம் இலக்கியங்கள். நேற்றைய அறநெறி வழியில் நின்று, இன்றைய சமூகத்தைச் செம்மைப்படுத்தி, நாளைய உலகைப் புதிதாய்ப் படைக்க வழிகாட்டும் ஒளிவிளக்கே நம் தமிழ் இலக்கியங்கள்.
தமிழ் இலக்கிய உலகம் ஆழிப்பெருங்கடல் போன்றது.
குறிப்பாக, தமிழ் மொழியில் மரபுரீதியாக 96 சிற்றிலக்கிய நூல் வகைகள் இருப்பினும், இன்று பல புதிய இலக்கிய வகைகள் உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியங்கள் விரிந்து செல்கின்றன. சங்க இலக்கியம், நீதி இலக்கியம் எனப் பழங்காலத்தில் வகைப்படுத்தப்பட்டவை, இடைக்காலத்தில் பக்தி இலக்கியம், காப்பிய இலக்கியம், உரை நூல்கள், புராண இலக்கியம், இஸ்லாமிய தமிழ் இலக்கியம் என அடையாளப்படுத்தப்பட்டன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில், இவை கிறித்தவ தமிழ் இலக்கியம் மற்றும் புதினம் எனவும், இருபதாம் நூற்றாண்டில் கட்டுரை, சிறுகதை, புதுக்கவிதை மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரை எனவும் இக்காலத்தில் வகைப்படுத்தப்படுகின்றன.
மனித வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கொடுப்பதே அம்மொழியின் வளமையான இலக்கியப் படைப்பே! பண்டையகாலத் தமிழ்ப் புலவர்கள் என்றும் அழியாத தமிழ் இலக்கியங்களைப் படைத்து, அதில் நல்ல பல கருத்துகளை இழையோட விட்டிருக்கின்றனர். அத்தகைய தமிழ் மொழியின் இலக்கியங்கள் சங்க இலக்கியம், சங்கம் மருவிய கால இலக்கியம், தற்கால இலக்கியம் எனப் பிரித்தறியப்பட்டு காலத்தால் அழியாத கருத்துப் பெட்டகமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய தமிழர் இலக்கியங்கள், வாழ்வியல் அறநெறிப் பெட்டகங்கள். எல்லாச் சூழல்களிலும் மனிதன் அறம் சார்ந்து வாழ்வதற்கான வழிமுறைகளை, வாழ்வியல் நெறிகளைச் சுட்டிக்காட்டுகின்றன.
தமிழர் இலக்கியங்கள் மெய்யியல் நூலகங்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதன் அடைந்த வாழ்வியல் மெய்மைகள் அனைத்தும் ஒருசேரக் கோர்க்கப்பட்ட அழகுப் பாமாலையே தமிழர் இலக்கியங்கள்.
நம் தாய்மொழி இமயம் தொடும் இலக்கியச் செழுமை கொண்டது! தமிழ்மொழியின் இனிமையையும் அழகையும் அளந்துகாட்ட முடியாது. தமிழ் மொழிக்கென்று தனியழகு இருப்பது உலகம் அறிந்த பேருண்மை!
நம் தாய்மொழி தமிழ், இலக்கியச் செழுமை கொண்ட செம்மொழி. இம்மொழியில் இலக்கியங்களுக்குப் பஞ்சமில்லை; அதன் இனிமைக்கும் எல்லை இல்லை. தமிழ் இலக்கியங்களும் இலக்கணமும்தான் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கின்றன.
இலக்கியம் தாய் என்றால் இலக்கணம் சேய்;
இலக்கியம் தேமாங்கனி என்றால், இலக்கணம் தீஞ்சுவைச்சாறு; இலக்கியம் பெருவிளக்கு என்றால், இலக்கணம் அதன் ஒளி; இலக்கியம் எள் என்றால், இலக்கணம் எண்ணெய். இந்த உறவு முறையை அறிந்த நம் முன்னோர்…
‘இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே
எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே
எள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல
இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம்’
எனக் கூறி வியந்தனர். இத்தகைய வளம் செறிந்த இலக்கியக் கருவூலத்தை நமது இளையத் தலைமுறையினரே நாளைய உலகிற்குச் சுமந்து செல்ல வேண்டியவர்கள். ஆகவே, நாம் மொழியை இறுகப் பற்றிக்கொள்வோம்! அதன் சிறப்பை உலகறியச் செய்வோம்! தமிழினத்தின் வளமை அறிவோம்! தமிழர் எனப் பெருமை கொள்வோம்!
வாழ்க தமிழ்! வளர்க அதன் இலக்கியப் பண்பாட்டுப் பெருமை!
அன்புத் தோழமையில்,
அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்
முதன்மை ஆசிரியர்