news-details
ஞாயிறு தோழன்
பிப்ரவரி 9, 2025, ஆண்டின் பொதுக்காலம் 5-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) எசா 6:1-8; 1கொரி 15:1-11; லூக் 5:1-11

திருப்பலி முன்னுரை

நம்பிக்கையோடு ஆண்டவரின் கரம் பற்றி வாழ  ஆண்டின் பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும் ஆண்டவருக்குள் வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய நற்செய்தியில் சீமோன் பேதுரு இயேசுவிடம்ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறோம்என்கிறார். அப்படியே செய்து பெருந்திரளான மீன்களைப் பிடிக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் வரும் துன்பங்கள், துயரங்கள், நோய்கள், கடன் தொல்லைகள், புரிந்துகொள்ளாத நிலைகள் போன்ற நேரங்களில் நாம் தனியாக இல்லை; இறைவன் நம்மோடு இருக்கிறார் என்று பயணிப்போம்; அப்போது  நம்முடைய வாழ்க்கையிலும் ஏராளமான அற்புதங்களைக் காண்போம். அன்றாடம் அளவற்ற நன்மைகளைப் பெற்றுக்கொண்டே இருக்கிறோம். மனநிறைவோடு ஆண்டவருக்கு நன்றி சொல்வோம்சீமோன் பேதுரு இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய் விடும்என்கிறார். சீமோன் பேதுரு அறிக்கையிட்டது போல நமது இயலாமையை நினைத்துஆண்டவரின் பாதத்தில் அறிக்கையிட்டுச் சரணடைவோம். நல்ல நேரம், கெட்ட நேரம் பார்ப்பதையெல்லாம் விடுத்து அனைத்தையும் நல்லதெனக் காண்போம்.   உலகச் செல்வங்களைவிட உன்னதச் செல்வமாகிய இயேசுவைச் சிக்கெனப் பிடித்துக்கொள்வோம். அளவில்லாத  அருள்வரங்களைக் கொடுக்க நமக்காகக் காத்துக்கொண்டிருக்கும் இறைவனிடம் நம்மையும், நம் பங்கிலுள்ள குடும்பங்களையும் ஒப்புக்கொடுத்து செபிப்போம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

எலியா தன்னுடைய குறையை உணர்கின்றார். ஆண்டவரால் ஆசிர்வதிக்கப்படுகின்றார். தன்னை முழுமையாக அர்ப்பணிக்கின்றார். ‘இதோ என்னை அனுப்பும்என்று சரணடைகின்றார். அழைப்பு என்பது குருக்கள், துறவியருக்கு மட்டுமல்ல; மாறாக, ஆண்டவரின் பிள்ளைகளாகிய நம் அனைவருக்குமே உரியதுஅழைப்பின், அர்ப்பணிப்பின் மகத்துவத்தைக் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

தூய பவுல், ‘நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப் பெறத் தகுதியற்றவன்என்கிறார். இந்த மனநிலை நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். நம்முடைய அறிவால், ஆற்றலால் அல்ல; மாறாக, இறைவன் கொடுத்த அருளால்தான் வாழ்கிறோம். அவரின் அருளில் நிலைத்து, திளைத்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. நல்ல ஆயனே ஆண்டவரே! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரையும் ஆசிர்வதியும். உம் பணிக்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட இவர்கள் ஒவ்வொரு நாளும் உம்மீது கொண்ட நம்பிக்கையில் வளரவும், அழைத்தலின் மகத்துவம் அறிந்து காலத்தின் தேவைக்கேற்ப கருத்தாய் பணிபுரிய தேவையான ஞானத்தைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஞானத்தின் ஊற்றான ஆண்டவரே! எம் நாட்டுத் தலைவர்களை ஆசிர்வதியும். ஏழை மக்களின் நல்வாழ்வுக்காகத் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து, மக்கள் நலனைக் கண்முன் கொண்டு வாழவும், போர், வறுமை, பஞ்சம் ஆகியவற்றிலிருந்து மக்களைக் காக்கவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எங்களோடு பயணிக்கும் ஆண்டவரே! ஒவ்வொரு நாளும் நாங்கள் உம்மீது கொண்ட நம்பிக்கையில் வளரவும், அன்பும், மன்னிப்பும், மனிதநேயமும் கொண்ட வார்த்தைகளைப் பேசவும், எம் வாழ்வுக்கு ஒளியாக இருக்கும் இறைவார்த்தையைப் படித்து, சிந்தித்து அதனை வாழ்வாக்கவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அளவின்றி எம்மை அன்பு செய்யும் ஆண்டவரே! நீர் கொடுத்த இந்த வாழ்க்கைக்காக நன்றிகூர்கின்றோம். ஆலயத்தில் மட்டும் உம்மைத் தேடாமல் அடுத்தவரிலும் உம் முகம் கண்டு மகிழவும், ‘நான், ‘எனது, ‘எனக்குஎன்பதிலிருந்து விடுபடவும், இருப்பதில் நிறைவு காணவும் தேவையான வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.