news-details
ஆன்மிகம்
புனித தேவசகாயத்தின் புனிதர் பட்டப் பணியில் திருத்தந்தை பிரான்சிஸ் (நீங்கா நினைவுகள் – 7)

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணை நிலப்பரப்பில் வாழும் மனிதர்கள் அனைவர்மீதும் அளப்பரிய அன்பு கொண்டவர் திருத்தந்தை பிரான்சிஸ். திரு அவையின் வாழ்விலும் பணியிலும் தன்னையே கரைத்துக் கொண்டவர். போர்களாலும் வன்முறைகளாலும் அல்லலுற்று வாழும் இளையோருக்காகக் கண்ணீர் சிந்தியவர். ‘போர்களைக் கைவிடுங்கள்என்று கூறி இரு எதிரெதிர் துருவத் தலைவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்கி அமைதிக்கு அடிக்கல் இட்டவர். கடைக்கோடி மனிதன் மூலம் திரு அவை இயங்க வேண்டுமென்று அளவளாவியவர். ஆலயங்கள் வெறும் கட்டடங்களாக இல்லாமல், ஏழைகளின் இல்லமாக மாற்றப் போராடிய சமூகப் போராளி இவர். ‘திரு அவை திண்ணையில் இருக்க வேண்டும்; மக்களைத் தேடி தெருவிற்கு வரவேண்டும்என்று கனவு கண்டவர்.

அன்பையும் மனிதநேயத்தையும் வாழ்வாக்கியவர் திருத்தந்தை பிரான்சிஸ். ‘இயற்கை நமக்குத் தாய் வீடுஎன்றதோடு, அதைக் காத்திட அனைவருக்கும் அறைகூவல் விடுத்தவர். இறைவழியிலே அன்னை மரியாவுடன் தந்தை யோசேப்பையும் சேர்த்தவர். திரு அவையின் பணியிலும் வாழ்விலும், தூய ஆவியின் கொடையின் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைத்தவர். திருப்பலியும் கொண்டாட்டங்களும் இயேசுவைச் சந்திக்கும் வாய்ப்பு என்பதையும் எடுத்துரைத்தவர். அவரிடம் மன்றாடுவதே நம் முதல் கடமை என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தியவர். நற்கருணைக் கொண்டாட்டமே உயிர்த்த இயேசுவைச் சந்திக்கும் வாய்ப்பு என மனுக்குலத்திற்கு அறைகூவல் விட்டவர். திருமடல்கள் பல தந்து திரு அவைக்குப் புத்துயிரூட்டியவர்.

கொரோனா தொற்று, இயற்கைப் பேரிடர்களெல்லாம் நடந்தபோது, ‘கடவுளே காப்பாற்றும்; எம் மக்களைக் காத்தருளும்என ஆண்டவர் இயேசுவிடமும் அன்னை மரியாவிடமும் கண்ணீர் விட்டு அழுதவர். பெரிய வியாழன் திருச்சடங்கில் மாற்றத்தைக் கொண்டு வந்தவர். பெண்களுக்கும் பாதம் கழுவ வாய்ப்புத் தந்தவர். இதன்மூலம் காலங்காலமாய் இருந்த தடைகளைத் தகர்த்தெறிந்தவர். திரு அவை நிர்வாகப் பணியிலும் அருள்சகோதரிக்கு அரிய வாய்ப்பை அள்ளித் தந்தவர்.    

நவீனக் கலாச்சாரத்திற்கு வெற்றிக்கொடி காட்டி விட்டு உள்ளே புகுந்துள்ள தீய பண்புகளைத் தூக்கி எறிய வழிகாட்டியவர். ஏழைகள், அனாதைகள், ஆதரவற்றோர், கைவிடப்பட்டோர், புலம்பெயர்ந்தோர், அகதிகள், வயது முதிர்ந்தோர் என மனிதகுலத்தில் கடைக்கோடியில் வாழ்வோருக்காக வாழ்நாள் எல்லாம் வருந்தியவர். வாழ்வெல்லாம் எளிமையின் சின்னமாய், அவர்களின் குரலாய் ஓயாது ஒலித்தவர். தன் இறுதிமூச்சுவரை அடுத்தவர் நலனுக்காகவே அயராது உழைத்தவர்.

இந்திய மண்ணின் மறைச்சாட்சியான புனித தேவசகாயத்தின் இறைநம்பிக்கை போன்றே தனது நம்பிக்கையையும் வரித்துக்கொண்டவர். புனித தேவசகாயம் இரத்தச்சாட்சியாய் இறைவனிடம் இணைந்தவர்; நம் திருத்தந்தையோ இரத்தச்சாட்சிகளிடம் மன்றாடி இறையருளும் நிறைவாழ்வும் பெற்றவர். இவர்களின் பரிந்துபேசுதலே தன்னை இறைவனிடம் சேர்க்கும் பாலம் என்பதை அறிந்து கொண்டவர். மறைச்சாட்சி தேவசகாயத்தின் வரலாற்றை முழுமையாக அறிந்துகொண்ட திருத்தந்தை, 28.02.2019-ஆம் ஆண்டு அவரை புனிதராக அறிவிக்கும் ஆவணத்தில் கையொப்பமிட்டார். அருளாளராக வணங்கப்பட்டு வந்த தேவசகாயம் அவர்களை 15.05.2022-ஆம் நாள் உரோமில் நடந்த பிரம்மாண்ட விழாவில், உலக அளவிலான வணக்கத்தைப் பெறும் வகையில் புனிதர் பட்டம் வழங்கினார். வாழும்போதே புனிதத்துவத்தில் வாழ்ந்த திருத்தந்தை, புனிதர்கள் கூட்டத்தில் நிச்சயம் இருக்கின்றார் என்பதை உறுதியோடு நம்புகிறோம். அவரின் அடிச்சுவட்டை நாமும் பின்பற்றுவோம்.