news-details
ஆன்மிகம்
புனித நீர் (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 19)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமசின் உரையாடல் தொடர்கிறது)

அருள்பணி:நாம் ஒவ்வொருவருமே பல அடுக்குச் சுரங்கத்தை நம்மில் தாங்கியுள்ளோம். பல்வேறு வகையான புதையல்களும் பொக்கிஷங்களும் நம்முள்ளே புதைந்து கிடக்கின்றன. இத்தகைய புதையல்களை வெளிக்கொணர நாம் முயற்சி எடுக்கும்போது அது நமக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதோடு, சுற்றியுள்ள உலகையும் வளமிக்கதாக மாற்றுகிறது. இதுவே வாழ்வின் நிறைவையும் மகிழ்வையும் கண்டுகொள்வதற்கான சரியான வழி முறையாகும். இத்தகைய நிலையை அடைவதற்கு ஏராளமான விழிப்புணர்வும் முயற்சிகளும் தேவைப்படுகின்றன. புதையலைக் கண்டுபிடிக்க விழிப்புணர்வும், கண்டுபிடித்த புதையலை வெளிக்கொணர முயற்சியும் தேவைப்படுகின்றன. அருளடையாளங்கள் தங்களுக்கே உரிய முறையில் செயல்பட்டு, நமக்குள் புதைந்திருக்கின்ற பொக்கிஷங்களை வெளிக்கொணர்ந்து, வாழ்வை முழுமையாக வாழ நமக்கு உதவுகின்றன.”

அன்புச்செல்வன்:தந்தையே, திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் ஒரு முறை இவ்வாறு கூறினார்: ‘திருமுழுக்கு வழியாக நாம் கடவுளின் புனிதத்திலும் முழுமையிலும் நுழைகின்றோம். எனவே, திருமுழுக்கு வாங்கியவர்கள் மேலோட்டமாகவும் ஏனோதானோவென்றும், அரை குறை மனநிலையோடும் வாழும்போது, தாங்கள் பெற்ற திருமுழுக்கிற்கு முரண்பாடான வாழ்வை வாழ்கிறார்கள்.”

அருள்பணி: திருமுழுக்கு அருளடையாளம் நம் உயர் நிலை ஆற்றல் மையங்களைச் செயல்படுத்துவதன் மூலம், நாம் முழுமையான வாழ்வு வாழ நமக்கு உதவி செய்கிறது என்று கடந்த கட்டுரையில் நாம் பார்த்தோம். இப்போது சென்றமுறை அகஸ்டின் கேட்ட கேள்விக்கு நாம் வருவோம். புனித நீரை ஊற்றுவதாலும், புனிதப்படுத்தப்பட்ட எண்ணெயைப் பூசுவதாலும், ஆற்றல் மையங்கள் செயல்படுத்தப்படுமா என்பதே அக்கேள்வி! முதலில் புனித நீர் குறித்து, திருவிவிலியம் கூறுவதை நாம் சிந்திக்கலாம்.”

மார்த்தா:தந்தையே, எனக்குத் தெரிந்தவரை நீரானது நம்மை உடல் ரீதியாக மட்டுமல்ல, ஆன்ம ரீதியாகவும் தூய்மைப்படுத்த வல்லது என்பதைத் திருவிவிலியம் எடுத்துரைக்கிறது: ‘நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் துய்மையாவீர்கள்; என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன் (எசே 36: 26:27) என்றும், ‘என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும் (திபா 51:2) என்றும், ‘ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன் (திபா 51:7) என்றும் திருவிவிலியத்தில் நாம் வாசிக்கின்றோம். இந்த வசனங்கள் கடவுளுக்கும் நமக்கும் இடையில் தடையாக வருகின்றவற்றை புனித நீர் கழுவ வல்லது என்ற உண்மையை எடுத்துரைக்கின்றன.”

அருள்பணி:நம்பிக்கையோடு பயன்படுத்தப்படுகின்றபோது நீர் நம் புறத்தை மட்டுமல்ல, நம் அகத்தையும் கழுவ வல்லது. காரணம், அதன்மீது தூய ஆவியானவர் அசைவாடினார் (தொநூ 1:2, எசா 44:3). மேலும், தண்ணீர் நம் அகத்தைத் தூய்மைப்படுத்தவல்லது என்பதை எண்ணிக்கை நூல் 19:2-20 பகுதியிலும் நாம் வாசிக்கிறோம். புனித அவிலா தெரசா பல்வேறு விதமான எதிர்மறைச் சக்திகளை எதிர்கொள்ள புனித நீரைப் பயன்படுத்தும்படி தன் சபைச் சகோதரிகளுக்கும் மற்றவர்களுக்கும் ஆலோசனை கூறியிருக்கிறார்.”

அன்புச் செல்வன்: சென்ற நூற்றாண்டில் அமெரிக்காவில் புகழ்பெற்ற பேராயராக விளங்கியவர் புல்டன் ஷீன். தொலைத்தொடர்புக் கருவிகளை நற்செய்தி அறிவிக்கின்ற பணிக்காக அதிகம் பயன்படுத்தியவர். அவர் வாழ்ந்தபோது தொலைக்காட்சிப் பெட்டி இன்னும் எல்லாரையும் சென்றடையவில்லை. ஆனால், வீடுகளில் வானொலிப் பெட்டி இருந்தது. வானொலி வழியாக இவர் ஆற்றிய நற்செய்திப்பணி ஏராளமான உள்ளங்களைக் கடவுளிடம் கொண்டு வந்தது. இத்தகைய புகழ்பெற்ற பேராயர் திருமுழுக்கில் பயன்படுத்தப்படும் புனித நீர் குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘சிறிது நீரை ஒரு குழந்தையின் உச்சந்தலையில் ஊற்றுவதால் என்ன நன்மை நடந்துவிடப் போகிறது?’ என்று சிலருக்குச் சந்தேகம் எழலாம். ஒரு கொதிகலனில் இருக்கிற தண்ணீர் சாதாரண நிலையில் ஆற்றல் இல்லாததுதான்! ஆனால், அது சூடேற்றப்பட்டு நீராவியாக மாற்றப்படும்போது, அது தொடர்வண்டிகள் நாடுவிட்டு நாடு செல்ல உதவுகின்றது; கப்பல்கள் கண்டம் விட்டுக் கண்டம் பயணிக்கக் காரணமாக இருக்கிறது. அதேபோல தண்ணீர் சாதாரண நிலையில் ஒன்றுமில்லாததுதான். ஆனால், தூய ஆவியால் நிரப்பப்படும்போது, அது ஒரு சாதாரண மனித உயிரைக் கடவுளின் பிள்ளையாகவே மாற்றவல்லது.”

அகஸ்டின்:என்ன அற்புதமான உதாரணம்!”

அருள்பணி:புனித நீரின் ஆற்றல் என்ன என்பது குறித்து மேற்கண்ட செய்திகள் ஆன்மிகம் தொடர்புடையவை. இவை ஒருபுறம் இருக்க, புனிதப்படுத்தப்பட்ட நீரின் தன்மை என்ன என்பதை ஓர் அறிவியல் ஆய்வே நமக்கு எடுத்துரைக்கிறது.”

கிறிஸ்டினா:புனிதப்படுத்தப்பட்ட தண்ணீர் குறித்து அறிவியல் ஆய்வா? ஆச்சரியமாக இருக்கிறதே!”

அருள்பணி:இதைச் செய்தவர் மசாரு எமோட்டோ (Masaru Emoto) என்ற ஜப்பானைச் சேர்ந்த அறிவியலாளர். இவர் மாற்று மருத்துவத் துறையில் (Alternative medicines) நிபுணத்துவம் பெற்றவர். இவரது Messages from Water என்ற நூல் புகழ்பெற்றது. அவர் செய்த ஓர் ஆய்வை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன். ஒரே நீரூற்றிலிருந்து ஒரே நேரத்தில் பெறப்பட்ட நீரை மூன்று பாத்திரங்களில் எமொட்டோ அடைத்தார். முதல் பாத்திரத்தில் இருந்த நீரை அவர் அப்படியே விட்டுவிட்டார். புனிதமான வாழ்க்கை வாழ்ந்த ஒருசிலரை அழைத்து, இரண்டாம் பாத்திரத்தில் இருந்த நீரை ஆசிர்வதிக்கக் கூறினார்; அதைப் பாராட்டக் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அடுத்தபடியாக, எதிர்மறையான மனநிலை கொண்ட சிலரை அழைத்து, மூன்றாவது பாத்திரத்தில் இருந்த நீரைத் திட்டவும் சபிக்கவும் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தனர். பின்பு மூன்று பாத்திரங்களையும் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துப் பனிக்கட்டியாக்கினார். பனிக்கட்டியாக்கப்பட்ட நீரை நுண்ணோக்கியில் வைத்து, அவற்றின் மூலக்கூறு அமைப்பை ஆராய்ந்தார். அவரால் அவரது கண்களையே நம்ப முடியவில்லை. இச்செய்தியை மக்களுக்குக் கூறினால், அவர்கள் நம்ப மாட்டார்கள் என்பதையும் அறிந்திருந்தார். எனவே, அவற்றைப் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டார். அவர் கண்டறிந்தது இதுதான்: முதல் பாத்திரத்தில் இருந்த நீரின் மூலக்கூறு அமைப்பு வழக்கமான நீரின் தன்மையுடையதாக இருந்தது; அறுங்கோணம் கொண்டதாக (Hexagonal structure) இருந்தது. இரண்டாவது பாத்திரத்தில் இருந்த நீர், அதாவது ஆசிர்வதிக்கப்பட்ட நீர், அறுங்கோண அமைப்போடு இருந்தது; அதன் அமைப்புமுறை சீரானதாகவும் சிறப்பானதாகவும் இருந்தன. மூலக்கூறுகள் ஒன்றன்மேல் ஒன்றாக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததுபோல இருந்தன. புதிதாகப் பூத்த மலரில் காணப்படும் புத்துணர்வும்  ஈர்ப்பும் அதில் இருந்தன. மேலும், அதன் மூலக்கூறுகள் பெரிய அளவில் வளர்ந்திருந்ததோடு, மூலக்கூறுகளுக்கு இடையேயான இணைப்பும் (dendrites) அதிகமாயிருந்ததைக் கண்டார். மூன்றாவது பாத்திரத்தில் இருந்த, அதாவது சபிக்கப்பட்ட நீரின் மூலக்கூறு அமைப்பு மிகவும் சிதைந்த நிலையிலும் சீரற்ற நிலையிலும் இருப்பதைக் கண்டார். மேலும், அவற்றின் மூலக்கூறிலும் மூலக்கூறு அமைப்பிலும் எந்தவித ஒழுங்கமைவும் இல்லாததைக் கண்டார்.”

மார்த்தா:தந்தையே, நம்ப முடியாத உண்மையாக இருக்கிறதே!”

அருள்பணி:அது மட்டுமல்ல! அவர் ஆலயங்களிலும் புனித இடங்களிலும் வைக்கப்பட்டிருந்த புனித நீரை எடுத்துத் தனது ஆய்வுகளை மேற்கொண்டார். அவற்றின் மூலக்கூறு அமைப்புகள் முற்றிலும் சீரானவையாகவும் சிறப்பானவையாகவும், இரண்டாவது பாத்திரத்தில் இருந்த நீரின் தன்மைகளைப் பெற்றவையாக இருப்பதைக் கண்டு கொண்டார்.”                          

(தொடரும்)