எல்லா உயிரினங்களின் இருத்தலுக்கும் இயக்கத்திற்கும் ஆதாரமாய் என்றும் இருப்பது தண்ணீர். ஆகவேதான், ‘நீரின்றி அமையாது உலகு...’ என்று உணர்த்திய ஐயன் வள்ளுவர், ‘உலகிலுள்ள இயற்கை வளங்களுள் தலையாய இடத்தில் இருப்பது நீர்’ என்ற பேருண்மையை உலகிற்கு எடுத்துரைத்தார்.
நீருக்கு
மாற்று என்பது இல்லை. நமது அன்றாட வாழ்வியல் பயன்பாடு, வேளாண் தொழில், மீன் வளர்ப்பு, தொழில் வளர்ச்சி, புனல்மின் உற்பத்தி, பொழுதுபோக்கு இடங்கள் என எங்கும் நீக்கமற
நிறைந்திருப்பது இந்த நீரே!
அதிகரித்து
வரும் தொழில்வளர்ச்சி, மக்கள்தொகைப் பெருக்கம், காலநிலை மாற்றம், வெப்பநிலை ஏற்றம் எனப் பல காரணங்களால் நீரின்
பயன்பாட்டுத் தேவை இன்று அதிகரித்து வருகிறது; நீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஆகவே, குறைந்து வரும் இயற்கை வளங்களில் ஒன்றான நீர் முறையாகச் சேமிக்கப்படவும், பயன்பாட்டிற்கு வழங்கப்படவும் சிறப்பான நீர் மேலாண்மை வழிமுறைகளைக் கண்டறிவது இன்று காலத்தின் கட்டாயம் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்திருக்க வாய்ப்பில்லை.
எனவே,
நீர்வள மேலாண்மை வழிகளைக் கண்டறிவதும், குறைந்து வரும் நன்னீர் வளம் குறையாது நீர்வளத்தைப் பெருக்குவதும் பாதுகாப்பதும், அவற்றைப் பயன்படுத்தி வேளாண் தொழில் சிறக்க முனைவதும் இன்று அவசியமாகிறது. இருப்பினும், கோடை வெயிலிலும் வறட்சியிலும், இடி, மின்னல், மழையிலும், குளிர் வாடையிலும் காணியே கதி என்று காலம் தள்ளும் உழவனின் தலையில் இன்று மற்றோர் இடி விழுந்திருக்கிறது.
வேளாண்
பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரிவிதிக்கும் புதிய திட்டத்தை ஒன்றிய பா.ச.க.
அரசு விரைவில் செயல்படுத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது. அதாவது, இந்தியா முழுவதும் வேளாண்மைக்காகப் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு, வரிவிதிக்கும் முறையை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட இருப்பதாக, அண்மையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல்
தெரிவித்திருக்கிறார்.
நிலத்தடி
நீர் வீணாவதையும், தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் குறைக்கவும் பயனுள்ள நீர் மேலாண்மைக்கான அடிப்படையான திட்டங்களை உருவாக்கவும் ஒன்றிய அரசு முன்வந்திருப்பதாகத் தெரிவிக்கும் நீர்வளத்துறை அமைச்சர், இந்தத் திட்டம் ஏற்கெனவே உள்ள கால்வாய்கள் மற்றும் ஏனைய நீர் ஆதாரங்களிலிருந்து பாசன நீரை வழங்குவதற்காக ‘பாசன நீர் வழங்கும் வலையமைப்பை’ ஏற்படுத்துவதை நோக்கமாகக்
கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
அதாவது,
ஒரு மைய இடத்தில் போதுமான தண்ணீரைச் சேமித்து வைத்து, அங்கிருந்து விவசாயிகளின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப அதைப் பயன்படுத்த இந்தத் திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகவும்,
ஏறக்குறைய ஒரு ஹெக்டேர் வரை விவசாயிகளின் நீர் பாசனத்திற்கு பொது நீர் தேக்கத்திலிருந்து குழாய்கள் மூலம் இந்த நீர் வழங்கப்பட உள்கட்டமைப்பை
ஏற்படுத்தவிருப்பதாகவும், நாடு
முழுவதும் 22 இடங்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகவும், இத்திட்டத்திற்காக ஒன்றிய அரசு ரூ. 1,100 கோடியை ஒதுக்கியுள்ளதாகவும், கூடுதலாக ரூ. 500 கோடி மற்ற திட்டங்களிலிருந்து வழங்கப்படவிருப்பதாகவும் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
‘நிலத்தடி நீர் வீணாவதைத் தடுப்பதற்காக இந்தத் திட்டம்’ என்று ஒன்றிய அரசு தெரிவித்திருந்தாலும், இதன் உண்மையான நோக்கம் உழவனை விவசாய நிலத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுவதற்காகவே
என்பதுபோல தோன்றுகிறது. மிகவும் கடினப்பட்டு நிலத்தடி நீரை மேலே கொண்டு வரும் விவசாயி, அதை வீணாக்க மாட்டார் என்பதை ஏனோ இந்த அரசு அறியாமலிருக்கிறது!
இன்றைய
சூழலில், இந்தியாவில் விவசாயத் தொழில் மிகவும் நலிவடைந்ததொரு தொழிலாகவே பார்க்கப்படுகிறது. தொடர்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வேளாண் திட்டங்கள், பயிர் பாதுகாப்புத் திட்டங்கள் என்னும் போர்வையில் மோசடிகள், நதிநீர் ஒப்பந்தம் என்னும் தொடரும் ஏமாற்று வேலைகள், பற்றாக்குறையாக வழங்கப்படும் இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்கப்படாமை
எனப் பல வகைகளிலும் உழவர்கள்
இன்று உறிஞ்சி நசுக்கப்படுகிறார்கள்; வஞ்சிக்கப்பட்டுப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
இத்தகைய
சூழலில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வைக் கொடுப்பதற்குப் பதிலாக, ஒன்றிய அரசு அவர்களின் வயிற்றில் அடிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
குடிநீர்,
வேளாண் பாசன நீர் என்று அடிப்படைத் தேவைகளுக்கான பொருள்களின்மீது
பா.ச.க. ஆட்சியின்
வரிவிதிப்பு என்பது விவசாயியின் வாழ்க்கையில் ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது’ போல்
இருக்கிறது.
ஏற்கெனவே
காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் கடந்த 2012-ஆம் ஆண்டில் ‘தண்ணீர் கொள்கை’ என்ற பெயரில் விவசாயிகளின் பயன்பாட்டிலிருக்கும் நிலத்தடி நீருக்குக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருந்தபோது,
அதற்கு நாடெங்கும் விவசாயிகளிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியதும் அதனால் அத்திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் போனதையும் ஏனோ இந்த ஒன்றிய பா.ச.க.
அரசு அறியாமலிருக்கிறது.
முதல்
கட்டமாக இந்தத் திட்டமானது நிலத்தடி நீரை மையப்படுத்தி ஓர் இடத்தில் சேமித்துவைத்து, அங்கிருந்து விவசாயிகளுக்குத் தேவையான நீரை அவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும், அப்படிப் பெறக்கூடிய விவசாய நீருக்கு அளவு அடிப்படையிலே வரிவிதிக்கப்படும் என்றும் இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டாலும், காலப்போக்கில் தனிநபர் ஒவ்வொருவரும் தங்களுடைய விவசாய நிலத்தில் பயன்படுத்தப்படும் நீருக்கான அளவிடும் இயந்திரம் பொருத்தப்பட்டுக் கணக்கிடப்படும் என்பதும் இத்திட்டத்தில் மறைந்திருக்கும் அதிர்ச்சி தரும் செய்தியாகிறது. ஆகவே, உழவனை வஞ்சிக்கும் இந்தத் திட்டத்தை ஒன்றிய பா.ச.க.
அரசு உடனே கைவிடவேண்டும்.
இன்றைய
சூழலில், உழவர்கள் தங்கள் வாழ்வியல் சூழலில் சந்திக்கும் எதிர்வினைகள் ஏராளம். வேளாண் பொருள்களுக்குரிய விலை இல்லை; உரங்கள் கிடைப்பதில்லை; கிடைக்கும் உரங்களுக்கு உயர்ந்து கொண்டே செல்லும் விலைகள்; விவசாயத் தொழிலுக்குத் தேவையான இடுபொருள்கள் வழங்கப்படாமை; தரமற்ற விதைகளை வழங்குவது... என அவர்கள் சந்திக்கும்
பிரச்சினைகள் ஏராளம்.
அதிக
மழை பொழிந்தால் வெள்ளத்தில் விவசாயம் அழிந்துபோவதும், மழையே பெய்யவில்லை என்றால் வறட்சியில் ஏமாந்து போவதும் உழவர்களின் அன்றாடக் காட்சியாகிப் போனது.
உழவர்களின்
நெருக்கடியையும் அன்றாட வாழ்வியல் போராட்டங்களையும் புரிந்துகொள்ளாத இந்த அரசை என்னவென்று சொல்வது? எல்லாவற்றிற்கும் வரி செலுத்தவேண்டும் என நிர்ணயித்துவிட்டு, உழவனின் வேளாண்
பொருளுக்கு ஏற்ற விலையை நிர்ணயிக்க முடியாத இந்த அரசு, உழவனை உயிரோடு மண்ணில் புதைப்பதாகவே இருக்கிறது.
விளைபொருள்களுக்குச்
சரியான விலை கிடைப்பதில்லை, வேலையாள்கள் கிடைப்பதில்லை, போதிய கடனுதவி கிடைப்பதில்லை எனப் புலம்பலுடன் விவசாயத்தைவிட்டு உழவர்கள்
வெளியேறிக் கொண்டிருக்கும் சூழலில், ஒன்றிய அரசின் இத்தகைய செயல்பாடுகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. மேலும், கிணற்றுப் பாசனத்தை முழுமையாக நம்பியிருக்கும் தென் மாநிலங்களில் இத்திட்டத்தை அரசு முன்னெடுத்து வருவது, இங்கு வேளாண் தொழிலைத் திட்டமிட்டே நசுக்குவதாகக் கணிக்கப்படுகிறது.
நதிகளை
இணைக்கவும், மழைநீரை முறையாகச் சேமிக்கவும் முனைப்புக் காட்டாத இந்த அரசின் இத்திட்டம், பசுத்தோல் போத்திய புலியாகவே தோன்றுகிறது.
ஒரு
சிறந்த நாட்டிற்கான வரையறையை முன்வைக்கும் வள்ளுவர்,
‘தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும்
சேர்வது நாடு’
(குறள் - 731)
என்று
குறிப்பிடுகிறார். அதாவது, குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடி பொருந்தியுள்ள நாடே நாடாகும் என்று கூறும் வள்ளுவர், குறையில்லாத விளைபொருளையே நாட்டின் வளர்ச்சிக்கான முதல் குறியீடாக முன்வைக்கிறார். எனவே, குறையில்லாத விளைச்சலே ஒரு நாட்டின் வளர்ச்சியின் மூல வேராக அமைகிறது.
ஆகவே,
‘ஆணிவேர் அறுபட்டால் மரம் தழைக்காது; வேளாண்தொழில் தடைபட்டால் நாடு செழிக்காது’ என்னும்
பேருண்மையை இனியாவது ஒன்றிய அரசு உணர்ந்திடட்டும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்