news-details
சிறப்புக்கட்டுரை
அம்மா வருவாள்! (வலையும் வாழ்வும் – 21)

இரயிலுக்கு நேரமாகிவிட்டது. 1948-ஆம் ஆண்டு ஆகஸ்டு 25-ஆம் நாள் தன் இரு பிள்ளைகளையும் இரு கைகளால் இறுகப் பற்றிக் கொண்டு ஒன்றாம் நம்பர் பிளாட்பார்மிலே வேகமாக நடந்தாள் காயத்திரி. அவளின் பெற்றோர் பிள்ளைகளைக் கூட்டிச்செல்ல வந்திருந்தார்கள். என்றும் இல்லாத வகையில் அன்று சென்ட்ரல் இரயில் நிலையம் மௌனத்தில் மயங்கிக்கிடந்தது.

காயத்திரி ஒரு சிங்கிள் பேரன்ட்! காலரா நோயினால் தன் கணவனை இரண்டாண்டுகளுக்கு முன் இழந்திருந்தாள். மயிலாப்பூரில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை. ஓரளவிற்குச் சம்பளம். தன் இரு பிள்ளைகளையும் தானே வீட்டில் ஒரு வேலைக்காரப் பெண்ணை உதவிக்கு வைத்துக் கொண்டு கவனித்து வந்தாள். அவளின் நெருங்கிய தோழிகளும், அவ்வப்போது வயதான அவள் பெற்றோரும் வந்துசெல்வர். இந்நிலையில் திடீரென்று அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. “காயத்திரி! ஆம் சாரி! உங்களுக்குச் செகண்ட் ஸ்டேஜ் கேன்சர்.” அனைத்து ரிப்போர்ட்களையும் சரிபார்த்துக்கொண்டு மூத்த மருத்துவர் ஒருவர் கூறியது காயத்ரியின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது.

மாத்திரை, மருந்துகள், டிரீட்மெண்ட் செலவுகள்... இதற்கிடையில் தன் பிள்ளைகளின் படிப்பு. காயத்திரிக்கு இது பெரும் மனச்சோர்வைக் கொடுத்தது. “நம்ம நாட்டுல இதற்கு டீரீட்மெண்ட் இல்ல. வெளிநாட்டுல புதுசா கீமியோதெரபி மருந்துகள் கண்டுபிடிச்சிருக்காங்க. இந்த வருசத்துல வந்திடும்என்றார் மருத்துவர்.

சில நாள்களிலேயே பாதி எடை குறைந்திருந்தாள். தன் பெற்றோரை வரவழைத்துத் தன் பிள்ளைகளை அழைத்துப்போகச் சொன்னாள். அவளின் உடலில் ஏற்பட்ட மாற்றம் பிள்ளைகளுக்குத் தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். “நீயும் எங்களோடு வந்திடு! உன்ன நாங்க பாத்துகிறோம்என்று பலமுறை அவளின் தாய் கூறியபோதும், அவள் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. “இது செகண்ட் ஸ்டேஜ்தான்மா! சரியாகிடும். ஆபீஸ்ல வேல வேற இருக்கு. இங்கேயே டிரீட்மெண்ட் போய்க்கிறேன். பார்த்துக்க. என் பிரண்ட்ஸ்செல்லாம் இங்க இருக்கிறாங்க. நீங்க கவலைப்படாதீங்கஎன்பாள். கீமியோதெரபி மருந்துகள் மயிலாப்பூருக்கு வரும், தனக்கு மறு வாழ்வு கிடைக்கும் என்று காத்திருந்தாள் காயத்திரி.

தள்ளாடும் வயதில் பேரப்பிள்ளைகளின் பெட்டிகளையும், தங்கள் பைகளையும் இழுத்துக்கொண்டு இரயிலேறி அமர்ந்தனர் காயத்திரியின் பெற்றோர். பைகளை இருக்கைகளின் கீழ் பத்திரப்படுத்திய தன் தாயைப் பார்த்து மூத்த மகள் அபிராமி, “அம்மா! நீயும் வாமா! ஜாலியா இருக்குமுலஎன்று தாத்தாவின் தோளில் சாய்ந்துகொண்டே கூப்பிட்டாள். அபிராமிக்கு ஐந்து வயதுதான் ஆகிறது என்று யாரிடம் சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அந்தளவிற்குப் பேச்சிலும் நடத்தையிலும் அவள் அப்பாவைப்போல கெட்டிக்காரி.

தண்டவாளப் பொந்துகளுக்கிடையில் ஓடிவிளையாடும் பெருச்சாளிக் கூட்டத்தைப்போல பலரும் அந்தப் பெட்டியின் வழிப்பாதையில் போவதும் வருவதுமாக இருந்தனர். “அம்மா! அஜய்க்குச் சுடுதண்ணீர் வச்சிருக்கேன். அத கொடுங்கஎன்று தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தபடியே கூறினாள் காயத்திரி. அஜய் இராகவன் காயத்திரிக்கு இரண்டாம் பிள்ளை. மூன்று வயதுதான் ஆகிறது. ‘தாயைப் பிரிந்து எப்படி இருப்பான்?’ என்ற கேள்விக்கு காயத்திரியிடம் விடையில்லை. “அம்மா! நேரம் ஆச்சு. இப்போ இரயில் கிளம்பும். அபி! அக்கிரமம் பண்ணக்கூடாது. தாத்தா-பாட்டி சொல்லுறதைச் சமத்தா கேட்டு நடக்கணும், சரியா? அம்மா கிளம்புறேன்.”

இதை காயத்திரி சொல்லும்போது ஏதோ அவளின் பெற்றோர் முகம் வெளிச்சமிழந்திருந்தது. ‘அம்மா! எப்போ வருவீங்க?’ என்ற அபிராமியின் கேள்விக்குஅடுத்த மாதம் வருவேன்என்று கூறிக் கொண்டு பிள்ளைகளுக்கு முத்தம் கொடுக்கும்போது, வேகமாக வெளிப்பட்ட கண்ணீரைத் துடைத்துக்கொண்டு விறுவிறுவென விடைபெற்று வெளியேறினாள் காயத்திரி.

இரயில் பெட்டியிலிருந்து வெளியே வந்த காயத்திரி சன்னலோரமாகப் பிளாட்பாரத்தில் நின்று கொண்டு கையசைவுகளில் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தாள். போனில் டிரங்கால் போட்டுத் தூரதேசத்திலிருந்து உரக்கப்பேசுவது போலிருந்தது அது. புறப்படும்போது இரயில் எழுப்பிய ஹார்ன் சத்தமும் கரும்புகையும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது காயத்திரிக்கு. டாட்டா காட்டி, கையசைத்துத் தன் உயிரை வழியனுப்புவதாக உணர்ந்தாள் அவள். கீமியோதெரபி மருந்துகள் ஒருநாள் வரும் என்ற நம்பிக்கையில் காயத்திரி கையசைத்து நின்றாள். ‘அம்மா ஒருநாள் வருவாள்என்ற நம்பிக்கையில் பாட்டியின் மடியில் அஜய் இராகவன் கண்ணயர்ந்திருந்தான்.

அறிவியல் ஒவ்வொரு காலகட்டத்திலும் உலகில் ஒவ்வொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. பூமியைக் கதிரவன் சுற்றி வருகிறது (Geocentric) என்று 14-ஆம் நூற்றாண்டு வரையிருந்த கோட்பாட்டை 1543-இல் போலந்து நாட்டைச் சார்ந்த நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் மாற்றியமைத்து, பூமிதான் கதிரவனைச் சுற்றிவருகிறது (Heliocentric) என்ற அறிவியல் தெளிவைDe revolutionibus orbium coelestiumஎன்னும் தனது ஆராய்ச்சிக் கட்டுரையின் வழியாக உலகிற்கு எடுத்துரைத்தார்.

15-ஆம் நூற்றாண்டில் ஜெர்மானியரான ஜோகன்னஸ் கூட்டன்பெர்க் என்பவர் முதன்முதலில் 1440-களில் அச்சு இயந்திரத்தைக் கண்டு பிடித்தார். இவருடைய கண்டுபிடிப்பால் பல அரிய வகை இலக்கியங்களும் சமயக் கருத்துகளும் வரலாற்றுப் பதிவுகளும் மருத்துவக்குறிப்புகளும் அச்சேறின. சமூக மாற்றத்திற்கும் செய்தி தொடர்புக்கும் இது மிகப்பெரிய அளவில் பங்காற்றியது எனலாம்.

பிரிட்டனில் பிறந்த சார்லஸ் டார்வின் 1859-இல் வெளியிட்டஆன் தி ஆர்ஜின் ஆப் ஸ்பீஃயீஸ் (On the Origin of Species) என்னும் புத்தகம் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவரையில் மிகவும் பிரபலமாக இருந்த படைப்புக் கொள்கையினை ஓரங்கட்டிவிட்டு பரிணாமக்கொள்கைப் பற்றிய விவாதங்களை இது முன்வைத்தது.

அறிவியலின் வளர்ச்சியால் பல தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பெரும் திருப்பத்தையும் உலகளாவிய மாற்றத்தையும் ஏற்படுத்தின. அதில் மிக முக்கியமானது நீராவி இயந்திரம். 1712-இல் தாமஸ் நியூகம்மேன் உருவாக்கிய நீராவி இயந்திரத்தை, 1765-இல் ஸ்காட்லாந்தைச் சார்ந்த ஜேம்ஸ் வாட் என்பவர் மறுசீரமைப்பு செய்து போக்குவரத்து, ஜவுளி உற்பத்தி போன்றவைகளுக்கு அதனைப் பயன்படுத்தி தொழில்புரட்சிக்கு வித்திட்டார்.

தொலைத்தொடர்பிலும் தொழில்நுட்பம் ஊடுருவத் தொடங்கியது 19-ஆம் நூற்றாண்டில்தான். மனிதன் புறாக்களையும் பிற விலங்குகளையும் தொலைத்தொடர்புக்காகப் பயன்படுத்திக் கொண்டிருந்தபோது, அமெரிக்காவில் 1844-ஆம் ஆண்டு சாமுவேல் மூர்ஸ் என்பவர் மின்சாரத்தால் இயக்கப்படும்டெலிகிராப்என்னும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். மூர்ஸ் குறியீட்டைப் (Morse Code) பயன்படுத்தி டெலிகிராப் உதவியால் செய்திகளைக் கேபிள் வழியாகக் குறியீடாக அனுப்பினார். முதன்முதலில்எத்துணை அரியன ஆற்றியுள்ளார் கடவுள்!” (WHAT HATH GOD WROUGHT!) (எண்ணிக்கை 23:23) என்னும் திருவிவிலிய வாக்கியமே டெலிகிராப் மூலமாக அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு கண்டுப்பிடிப்பும் மற்றுமோர் அறிவியல் கண்டுபிடிப்புக்கு அடித்தளமிடுகிறது. அதிலும் குறிப்பாக, மின்சாரம் மற்றும் டெலிகிராப் தொழில்நுட்பம் இன்றைய கணினிக்கு அடிப்படை எனலாம். அன்றைய டெலிகிராப்பில் பயன்படுத்தப்பட்ட மூர்ஸ் குறியீடான ‘.’ (dotமற்றும் ‘- (dashஇன்று கணினியின் பைனரி குறியீடான ‘0’ மற்றும் ‘1’ ஆக உருமாறியிருக்கின்றது. 21-ஆம் நூற்றாண்டில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இணையம் மற்றும் செயற்கை நுண்ணறிவிற்கும் அடிப்படை மின்சாரப் பயன்பாடும் மூர்ஸ் குறியீடும் எனலாம்.

அண்மையில் ஓப்பன் ஏஐ-யினுடைய தலைவர் சாம் ஆல்ட்மேன், சாட் ஜிபிடி பயனர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அதில்யாரும்தயவுசெய்து (please) மற்றும்நன்றி (thankyou) என்ற வார்த்தைகளைச் சாட் ஜிபிடில் பதிவேற்ற வேண்டாம். ஏனெனில் அது ஏராளமான மின்சாரத்தைக் கணக்கீட்டிற்குப் பயன்படுத்துவதனால் (Computation) பல இலட்சம் டாலர் செலவாகிறதுஎன்றார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு வார்த்தையும் டோக்கன் என்னும் குறியீட்டில் கணினியால் புரிந்துகொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக, ஒவ்வொரு கண்டுபிடிப்பிற்குப் பின்னாலும் வெவ்வேறு காலகட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் அடிப்படையாகவும் அடித்தளமாகவும் இருக்கின்றன. இதுவே தொலைத்தொடர்பு, தொழில், கல்வி, கலை, கலாச்சாரம், மொழி, மருத்துவம் போன்ற துறைகளில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கி வருகின்றன.

மாற்றம் ஒருநாளில் நிகழ்வதல்ல; ஓராயிரம் தடைகளைக் கடந்துவருவது. மாற்றம் நடைமுறைகளை உருமாற்றும், கேள்விக்குள்ளாக்கும், விவாதத்திற்குள் தள்ளும். மாற்றத்தை முத்தமிட்டு ஏற்பதும் மறுதலிப்பதும், மாற்றியமைப்பதும் முழு மனித நலனை மையப்படுத்தியே இருக்கவேண்டும். இவ்வுலகில் மாற்றத்தை ஏற்படுத்தும் அறிவியல் கண்டுபிடிப்புகள் அணுகுண்டுகளாகவும் இருந்திருக்கின்றன, ஆற்றுப்படுத்தும் கருவியாகவும் இருந்திருக்கின்றன.

மனித அறிவு அன்பிலிருந்து பிறக்கும்போது மாற்றம் ஏமாற்றம் தராது!