(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமசின் உரையாடல் தொடர்கிறது)
அன்புச் செல்வன்:
“தந்தையே! கடந்த வாரம் முழுவதும் நம் உடலில் உள்ள ஆற்றல் மையங்களுக்கும், நம் வாழ்விற்குமான தொடர்பு குறித்துதான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். நம் ஒட்டுமொத்த மானிட வாழ்வே ஹார்மோன் சுரப்பிகளின் விளையாட்டுதான் என்று கூறினால் அது மிகையல்ல. நம் உடலில் எத்தகைய ஹார்மோன்கள் சுரக்கின்றன என்பதற்கு ஏற்ப நம் உடலும் நம் செயல்பாடுகளும் நம் வாழ்வியல் அணுகுமுறைகளும் அமைகின்றன என்பதை இன்றைய அறிவியலும் மருத்துவத்துறையும் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இத்தகைய பின்னணியில் பார்க்கும்போது, நம் வாழ்வு சீராகவும் முழுமையாகவும் அமைய வேண்டுமெனில், உடலில் உள்ள ஏழு ஹார்மோன் சுரப்பிகளும் சீராகச் செயல்பட வேண்டியிருக்கிறது. அவற்றைச் சீராக்குவதற்கான வழிமுறையே அவற்றோடு தொடர்புடைய ஆற்றல் மையங்களைச் செயல்படுத்துவது.”
அருள்பணி: “நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. எனினும், பிரச்சினை என்னவென்றால் பல மனிதர்களுக்கு உடலின்
மேல்பகுதியில் உள்ள ஆற்றல் மையங்களும், அவற்றோடு தொடர்புடைய சுரப்பிகளும் சிறப்பாகச் செயல்படுவதில்லை என்பதுதான். நம் உடல் எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றால், உடல் சார்ந்த செயல்பாடுகளான நடத்தல், வேலைகள் செய்தல், ஓடுதல், உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றின்போது உடலின் கீழ்ப்பகுதியில் உள்ள ஆற்றல் மையங்கள் தாமாகவே தூண்டப்படுகின்றன. அப்பொழுது அவற்றோடு தொடர்புடைய சுரப்பிகளும் இயல்பாகவே தூண்டப்படுகின்றன. அதாவது, உடல் சார்ந்த செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது அட்ரினல், கணையம், பாலுறவுச் சுரப்பிகள் இயல்பாகவே இயக்கப்படுகின்றன. எனவே, அவற்றோடு தொடர்புடைய செயல்களை நம் உடல் இயல்பாகவே முன்னெடுக்கின்றது.”
அகஸ்டின்:
“நீங்கள் கூறுவதைப் பார்த்தால், உடலின் மேல்பகுதியில் உள்ள பீனியல், பிட்யூட்டரி, தைமஸ் சுரப்பிகளும், அவற்றோடு தொடர்புடைய ஆற்றல் மையங்களும் நம்மில் அதிகமாக இயங்குவதில்லை என்பது போல் தெரிகிறதே?”
அருள்பணி:
“ஆம், அவற்றை இயக்குவதற்கான சில முயற்சிகளைத்தான் நாம் ஆன்மிகப் பயிற்சி என்கிறோம்.”
கிறிஸ்டினா:
“தந்தையே, நீங்கள் கூறுவதைக் கேட்கும்போது, எனது வகுப்பு ஆசிரியர் ஒருவர் அடிக்கடிச் சொல்வது எனக்கு நினைவுக்கு வருகிறது. ‘புருவ மத்தியில் கவனத்தை வைத்து மூச்சுக் காற்றைக் கவனித்தால் மனம் ஒருமுகப்படும், படிப்பு நன்றாக வரும்’ என்று அவர் அடிக்கடி கூறுவார்.”
மார்த்தா:
“தந்தையே! உடலின் கீழ்ப்பகுதியில் உள்ள ஆற்றல் மையங்கள் செயல்படுவதற்கும், நாம் கடந்த கட்டுரையில் சிந்தித்த மனம் புறம்நோக்கி இயங்குவதற்கும் தொடர்பு இருப்பது போல் தெரிகிறதே?”
அருள்பணி:
“ஆம், உடலின் கீழ்ப்பகுதியில் உள்ள ஆற்றல் மையங்கள் செயல்படும்போது தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற வேட்கையும், தனக்குத் தேவையானவற்றை அடையவேண்டும் என்ற வாழ்வாதாரத் தேடலும் ஒரு மனிதரில் இயல்பாகவே முகிழ்க்கின்றன. இது மனத்தைப் புறம்நோக்கி இயக்குகிறது. இது நல்லது என்றாலும், இதில் இருக்கின்ற தீமைகள் குறித்து நாம் ஏற்கெனவே விவாதித்து இருக்கின்றோம்.”
அகஸ்டின்:
“இத்தகைய நிலையைச் சமன் செய்யும் பொருட்டே உடலின் மேற்பகுதியில் உள்ள ஆற்றல் மையங்கள் தூண்டப்பட வேண்டும் என்று கூறுகிறீர்கள்... அப்படித்தானே?”
அருள்பணி:
“ஆம், உடலின் மேற்பகுதியில் உள்ள ஆற்றல் மையங்கள் இயக்கப்படும்போது மனம் அகம் நோக்கித் திரும்புவது இயல்பாகவே நடக்கும். அதாவது, மனத்தை அகம் நோக்கித் திருப்புவதற்கும், உடலின் மேற்பகுதியில் உள்ள ஆற்றல் மையங்கள் செயல்படுவதற்கும் நேரடித் தொடர்பு உண்டு. இத்தகைய செயல்பாடுதான் திருமுழுக்கு அருளடையாளத்தின்போது நிகழ்கிறது. இந்திய ஆன்மிகத்தின் பின்னணியில் உச்சந்தலை ஆற்றல்மையமே (crown chakra) மனிதர்களுக்கும் கடவுளுக்கும் இடையேயான
பாலமாகத் திகழ்கிறது என்று கடந்த கட்டுரையில் நாம் பார்த்தோம். உச்சந்தலை ஆற்றல் மையமானது ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று காரணிகளால் அடைபடும்போது, நமக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவில் பிளவு ஏற்படுகிறது. பாலமாக இருக்க வேண்டிய இடம் பாவத்திற்கான காரணமாகி விடுகிறது. உச்சந்தலை ஆற்றல் மையத்தைத் தூய்மையாக்கி, கடவுளுக்கும் நமக்குமிடையேயான உறவுப் பிணைப்பைக் கொண்டு வருவதே திருமுழுக்கு.”
அகஸ்டின்:
“இது மிகவும் வித்தியாசமான விளக்கமாக இருக்கிறது தந்தையே! உச்சந்தலையில் ஏன் கிறிஸ்மா தைலம் பூசப்படுகிறது? ஏன் அங்கு புனித நீர் ஊற்றப்படுகிறது? என்பதன் அர்த்தம் இப்போது எனக்குத் தெளிவாகப் புரிகிறது.”
அருள்பணி: “ஆம்! கிறிஸ்மா தைலம் பூசப்பட்டு, புனித நீர் (தீர்த்தம்) ஊற்றப்படும்போது ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றையும், இதற்குப் பின்புலமாக இருக்கின்ற மனத்தின் புறம்நோக்கிய அதீத வேட்கையையும் வெற்றி கொள்வதற்கான சிறப்பு அருள், திருமுழுக்கைப் பெறுபவருக்கு வழங்கப்படுகிறது. அதேபோல திருமுழுக்கின்போது செயல்படுத்தப்படும் மற்றோர் ஆற்றல் மையம் இதயம் (heart center)! ஏழு ஆற்றல்
மையங்களில் நடுவில் இருக்கும் இது சமநிலை வாய்ந்ததாக இருக்கின்றது. அகம்நோக்கிய தன்மையையும், புறம்நோக்கிய தன்மையையும் சமமாக வைத்திருப்பதற்கான ஆற்றல் பெற்றதாக இருக்கிறது. எந்த ஒரு மனிதர் தன் இதயத்தில் கவனத்தை வைத்து வாழ்கிறாரோ, அந்த மனிதரது வாழ்வு எத்தகைய பதற்றத்திற்கும் ஆளாகாமல் சமநிலையில் இருக்கும் வாழ்வாக இருக்கும். மேலும், இது தைமஸ் சுரப்பியைச் சுரக்க வைத்து, ஒரு மனிதரது அன்பு செய்யும் தன்மையையும் அதிகப்படுத்துகிறது.”
கிறிஸ்டினா:
“ஒரு குழந்தையின் நெஞ்சில் எண்ணெய் பூசப்படுவது இதற்காகத்தானா?”
அருள்பணி:
“ஆம், இதையே இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சிந்திக்கும்போது, எல்லா ஆன்மிக மரபுகளிலும் ‘இதயக்
குகை’ (cave
of the heart) என்றொரு சொற்றொடர் காணப்படுகிறது. ‘இதயக் குகை’ என்பது ஒரு மனிதர் தன்னை அமைதிப்படுத்தி, தனக்குள் இருக்கின்ற இறைத்தன்மையை உணர்வதற்கான இடமாக இருக்கிறது. உலகப் புகழ்பெற்ற ஆன்மிக ஞானியான இரமண மகரிஷி, ‘இதயக் குகையில் கடவுள் நம்மை தம் இயல்பாக உருமாற்றித் தருகிறார்’
என்கின்றார். அவர் கற்றுக்கொடுத்த தியானம், இதய ஆற்றல் மையத்தில் நம் கவனத்தை வைத்து ‘நான் யார்?’ என்கின்ற கேள்வியைக் கேட்பதாகும். இந்தக் கேள்வியின் நோக்கம் அறிவுப்பூர்வமான பதிலைக் கண்டுபிடிப்பதல்ல; மாறாக, நமக்குள்ளே பயணிப்பதாகும். இராம்தாஸ் என்ற மற்றொரு ஞானி, ‘இதயக் குகையில் வாழத் தெரிந்தவருக்கு எல்லையுமில்லை, காலமுமில்லை’ என்கின்றார்.”
அகஸ்டின்:
“தந்தையே, ஆற்றல் மையங்களையும், அவற்றோடு தொடர்புடைய சுரப்பிகளையும் செயல்படுத்துவது முழுமையான வாழ்விற்கு அவசியம் என்கின்ற உண்மையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இக்கருத்து இன்றைய அறிவியலோடு இணைந்து செல்வது இன்னும் சிறப்பானது. எனினும், இந்த ஆற்றல் மையங்கள்மீது புனித நீர் ஊற்றப்படுவதாலும், எண்ணெய் பூசப்படுவதாலும் அவை செயல்படுத்தப்படுகின்றன என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள என் மனம் தயங்குகிறது.”
அருள்பணி:
“இது குறித்து நாம் அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.”
(தொடரும்)