சிறுவயது முதலே இறைமகன் இயேசுவின் இவ்வுலகத் தந்தை புனித யோசேப்புமீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். இதை எண்பிக்கும் வகையில் திருத்தந்தை பிரான்சிஸ் தலைமைப் பணி ஏற்ற நாள் 2013, மார்ச் 19 புனித யோசேப்பு பெருவிழா நாள் அவர் மனத்துக்கு ஏற்றபடி அழகாகவும் பொருத்தமாகவும் அமைந்தது. ஒரு திருத்தந்தையாகப் பின்னாள்களில் புனித யோசேப்பு பக்தி முயற்சிகளை அனைத்துலகுக்கும் வளர்த்தெடுக்கும் செயல்பாடுகளுக்கு முன்னோட்டமாகவும், புனித யோசேப்புக்கும் அவருக்கும் உள்ள நெருக்கத்தைக் கட்டியம் கூறும் சாட்சியமாகவும் திருத்தந்தை பிரான்சிசின் தலைமைப் பணி ஏற்பு நாள் அமைந்தது.
பாதுகாப்பதில்
புனித
யோசேப்பின்
பங்கு
புனித
பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற தலைமைப் பணி ஏற்பு விழாவை எளிமையான விதத்தில் கொண்டாடிய திருத்தந்தை, விழாவின் மையப்பொருளாகத் தேர்வு செய்தது ‘புனித யோசேப்பு திருக்குடும்பத்தின் பாதுகாவலர், திரு அவையின் பாதுகாவலர்’ என்பதாகும்.
அன்றைய திருப்பலியில் ‘பாதுகாத்தல்’ என்பதை
மையக்கருத்தாகக் கொண்டு திருத்தந்தை ஆற்றிய மறையுரை, அவர் புதிதாக ஏற்றுக்கொண்ட மிகப்பெரும் பொறுப்புக்கு, புனித யோசேப்பின் பாதுகாவலையும் துணையையும் நாடுவதாக அமைந்தது.
தனது
மறையுரையில் புனித யோசேப்பின் விழா நாளன்று பணி ஏற்பு நடப்பதன் பொருத்தத்தைக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், “இறை இயேசுவுக்கும் அன்னை மரியாவுக்கும் பாதுகாப்பளித்து அவர்களைப் பேணிக் காத்தவர் புனித யோசேப்பு; எனவே ‘பாதுகாத்தல்’ என்பது
திரு அவைக்கும் கிறித்தவர்களுக்கும் மிக முக்கியமானது” எனத்
தெரிவித்தார். மேலும், “உலக நாடுகளின் ஆட்சியாளர்கள் புனித யோசேப்பைப் போன்று மக்களைப் பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும்”
என்றும் அறிவுறுத்தினார்.
உலகில்
அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பொறுப்பு மிக்க பதவியில் இருப்பவர்கள் கடவுளின் படைப்புலகு குறித்து அக்கறை கொண்டிருக்கவேண்டும், உலக மக்களும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் ஆர்வம் மிக்கவர்களாக விளங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உலகத் தலைவர்களும் குழந்தைகளை, முதியோர்களை, துன்பத்தில் உழல்வோரைப் பாதுகாக்கக் கடமை கொண்டுள்ளார்கள் என்பதை வலியுறுத்தினார். திருத்தந்தையின் இறையியல் பார்வையில் திரு அவை மற்றும் மனிதர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் புனித யோசேப்பின் பாதுகாப்பு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என்று தெளிவுபடுத்தினார். உறங்கும் நிலையிலும் ஓர் அமைதியான புனிதராக யோசேப்பு திருக்குடும்பத்துக்கும் திரு அவைக்கும் பாதுகாவலராகத் திகழ்கிறார் எனத் தெரிவித்தார்.
புனித யோசேப்புடன்
நெருக்கமானவர்
திரு
அவையின் வரலாற்றில் குழப்பம் மிகுந்த ஒரு காலகட்டத்தில் திருத்தந்தை 9-ஆம் பத்திநாதர் திரு அவையைப் புனித யோசேப்பின் பாதுகாவலில் வைக்க விரும்பினார். எனவே, 1870-ஆம்
ஆண்டு டிசம்பர் 8-ஆம் நாள் புனித யோசேப்பை ‘கத்தோலிக்கத் திரு அவையின் பாதுகாவலர்’ என
அறிவிப்பு செய்தார். எப்பொழுதும் கன்னியான மரியாவின் மிகத் தூய்மையான கணவராகவும், இறைமகனைச் சிறந்த முறையில் வளர்ப்பவராகவும், திருக்குடும்பத்தின் தலைவராகவும் தேர்ந்துகொள்ளப்பட்டதன் காரணமாக இயேசுவால் கட்டியெழுப்பப்பட்ட திரு அவைக்குப் புனித யோசேப்பு பாதுகாவலராகக் கிறிஸ்துவின் பிரதிநிதியான திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டார்.
இவ்வாறு
புனித யோசேப்பு உலகளாவிய திரு அவையின் பாதுகாவலர் என்று அறிவிக்கப்பட்டதன் 150-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் புனித யோசேப்பு யூபிலி ஆண்டினை 2020, டிசம்பர் 08 அன்று துவக்கினார். அன்று அவர் வெளியிட்ட ‘Patris corde’அதாவது
‘ஒரு தந்தையின் இதயத்தோடு’
என்ற தலைப்பில் அமைந்த திருத்தூது மடல் மூலமாக, அவரும் புனித யோசேப்பும் திரு அவையின் திருத்தந்தை மற்றும் திரு அவையின் பாதுகாவலர் என்ற முறையில் ஒருவருக்கொருவர் நெருக்கத்தில் இருப்பது வெளிப்பட்டது. புனித
யோசேப்பின் யூபிலி ஆண்டில் சிறப்புப் பேறுபலன்களை அறிவித்த திருத்தந்தை “புனித யோசேப்பே, ஒரு தந்தையாக வாழும் வாழ்வுப் பாதையை எமக்குக் காட்டியருளும். இரக்கமும் துணிவும் நிறைந்த அருளை எமக்குப் பெற்றுத்தாரும்” என்ற
செபத்துடன் தன் மடலை நிறைவு செய்தார்.
புனித யோசேப்பிடம்
பக்திப்
பற்றுதல்
இறைவனின்
தாய் மரியாவிடமும், புனித யோசேப்பிடமும் திருத்தந்தை பிரான்சிஸ் குழந்தைத்தனமான பாசம் கொண்டிருந்தார். அந்தப் பாசமே துன்ப முடிச்சுகளை அகற்றும் அன்னை மற்றும் உறங்கும் நிலை யோசேப்பு ஆகியோரின் பக்தியைத் திரு அவையில் வளர்க்கச் செய்தது.
19-ஆம்
நூற்றாண்டில் இயேசு-மரியா துறவு சபை பிரெஞ்சு மொழியில் வெளியிட்ட ‘புனித யோசேப்பு பக்தி முயற்சிகள்’ என்ற
பழமையான நூலிலுள்ள செபத்தைத் திருத்தந்தை பிரான்சிஸ் ஒவ்வொரு நாளும் தவறாமல் செபித்து புனிதரிடம் தனக்குள்ள நேசத்தில் நிலைத்தார். மேலும், தன்னுடைய ஆட்சி
முத்திரையில் புனித யோசேப்பைக் குறிக்கும் லீலி மலரை இடம்பெறச் செய்தார். அவர் தலைமைப் பணியேற்ற அதே ஆண்டிலேயே புனித யோசேப்பின் பரிந்துரையை நாடும் விதத்தில் அனைத்து நற்கருணை மன்றாட்டுகளிலும் புனிதரின் பெயரையும் இணைத்தார். உறங்கும் நிலை புனித யோசேப்பின் பக்தி உலகம் முழுக்கப் பரவுவதற்குத் திருத்தந்தையின் இந்த அனுபவமே காரணமாயிற்று.
புனித
யோசேப்பு குறித்த சிந்தனைகளை அடிக்கடிப் பகிர்ந்துகொள்ளும் வழக்கம் உள்ளவராகத் திருத்தந்தை
விளங்கினார். புனித யோசேப்பை ஒரு தந்தையாகவும், இயேசுவின் வளர்ப்பாளராகவும், மரியாவிடம் பக்தி செலுத்துபவராகவும் போற்றிய திருத்தந்தை, திரு அவையில் புனித யோசேப்பு ஒரு முக்கியப் பங்கு வகிப்பதாக நம்பிக்கை கொண்டிருந்தார். மக்களால் அதிகம் கவனிக்கப்படாதவராய், அதேவேளை காலமறிந்து செயல்படுகிறவராய் மறைவாழ்வு வாழ்ந்தாலும், மீட்பு வரலாற்றில் எவரோடும் ஒப்பிட முடியாத செயல் வீரராக அவர் விளங்கினார் என்றும், இதனாலேயே கிறித்தவ மக்களால் புனித யோசேப்பு எப்போதும் அதிகம் நினைவுகூரப்படுகிறார் என்பதிலும் உறுதியாக இருந்தார்.
புனித யோசேப்பிடம்
பெற்ற
படிப்பினைகள்
புனித
யோசேப்பிடமிருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்வதற்குப் பல படிப்பினைகள் உள்ளன
என்று திருத்தந்தை பிரான்சிஸ் கருதினார். நாசரேத் தச்சர் யோசேப்பு தனது மனைவி மரியாவை ஏற்றுக்கொண்டது மற்றும் இறைவனின் மீட்புத் திட்டத்தில் நம்பிக்கைகொண்டது போன்ற தன் செயல்களால் உலகம் வேண்டுமென்றே புறக்கணிக்கும் விசயங்களைக் கவனிக்கவேண்டும் என்பதைத் திரு அவைக்கு நினைவூட்டுகிறார். மற்றவர்கள் நிராகரிப்பதை நாம் மதிக்கவேண்டும் என்பதை நம் ஒவ் வொருவருக்கும் அவர் அறிவுறுத்துகிறார். உலகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களைக் கவனிக்கவும், அவர்களைப் பராமரிக்கவும் நமக்கெல்லாம் கற்பிக்கிறார். இவ்வுலகில் ஒருவர் தந்தையாகப் பிறப்பதில்லை; அவர் ஒரு குழந்தையின் வாழ்வுமீது பொறுப்பேற்கும்போதே தந்தையாக மாறுகின்றார். தந்தையரால் கைவிடப்பட்ட அனாதைக் குழந்தைகள் நிறைந்துள்ள இன்றைய உலகிற்கு புனித யோசேப்பு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். இப்படிப்பினைகளோடு இயேசுவின் பணி வாழ்விற்குமுன் அவர் வாழ்ந்த இடமான நாசரேத், கடவுளால் முன்னரே புனித யோசேப்பின் பிறப்பிடமாகத் தேர்வு செய்யப்பட்டது என்பது அதிகம் அறியப்படாத பகுதிகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் மீதுள்ள இறைவனின் விருப்பத்தைக் காட்டுவதாக அமைவதாகவும் திருத்தந்தை குறிப்பிடுகிறார்.
ஒரு
மனிதனின் தனிப்பெரும் மாண்பும் மகத்துவமும், அந்த மனிதர் பெற்றுள்ள அரும்பெரும் பண்புகளாலும், அந்த மனிதர் ஏற்றுள்ள பதவிப் பொறுப்புகளாலும் அவருக்குக் கிடைக்கிறது. அந்த வகையில் இறைவனின் இதயத்துக்கு ஏற்றவராக விளங்கிய புனித யோசேப்பு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நெஞ்சத்துக்கு நெருக்கமானவராக விளங்கினார்.