news-details
சிறப்புக்கட்டுரை
விருட்சம் கண்டு வியக்கிறேன்!

மதுரை மறைத்தளம் தன்னில் மங்கலத் திலகம் கண்ட நாள் 2025, ஜூலை 5.  பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயரும், எமது மதுரை உயர்மறை மாவட்டத்தின் திருத்தூது நிர்வாகியாகக் கடந்த எட்டு மாதங்களாகப் பணியாற்றி வருபவருமான மேதகு ஆயர் முனைவர் அந்தோனிசாமி சவரிமுத்து அவர்களை மதுரை உயர்மறைமாவட்டத்தின் ஏழாவது பேராயராக, திருத்தந்தை லியோ அவர்கள் நியமித்த மகிழ்ச்சியான தருணம் அது. மாமதுரை மறைப்பணித்தளம்  பேருவகை கொண்ட நன்னாள் அது!

இறையருளும் அருள்வளமும் ஆழமான நம்பிக்கையும் கொண்ட மறைப்பணித்தளம் மதுரை உயர்மறைமாவட்டம். சேசு சபையாரின் மறைப்பணித்தளமாகப் பண்படுத்தப்பட்டு, விதையிடப்பட்டு, நம்பிக்கையின் விளைச்சலை மிகுதியாகக் கண்ட புண்ணிய பூமி இது.

தமிழ் மரபு, சமய வழிபாடு, அரசாட்சி, வணிகம், ஆன்மிகம்... என நீளும் மதுரைக்கான வரலாற்றுச் சிறப்பில், கிறித்தவத்தின் பங்களிப்புத் தவிர்க்க முடியாதது. சாதி, மத, இன வேறுபாடு இன்றி, அனைவருக்குமான கல்வி, பொருளாதாரம், மருத்துவம், சமூக மேம்பாடு எனப் பல்வேறு தளங்களில் பன்முக வளர்ச்சியை இம்மண்ணில் முன்னெடுத்தது கிறித்தவம்.

மறைப்பணியில் ஆழமாக வேரூன்றி இம்மண்ணின் குறியீடாக, அடையாளமாக, முகவரியாக இருப்பவர் இராபர்ட் தெ நொபிலி எனும் சேசு சபை மறைப்பணியாளர். அதன் நீட்சியாக இன்றும் மதுரை மண்ணின் அடையாளமாக இருப்பது நொபிலி மறைப்பணி நிலையம். அன்றும் இன்றும்நொபிலிமதுரை உயர்மறைமாவட்டத்தின் அருள்பணிகளை ஒருங்கிணைக்கும், பணிக்குழுக்களை வழிநடத்தும் தளமாக, குறியீடாக அறியப்படுகிறது. நொபிலி மறைப்பணித்தளத்தின் இயக்குநர் என்ற முறையில் பேராயர் வளாகத்தில் பணிகளை முன்னெடுக்கும் சூழலில் பேராயரோடும், பேராயர் இல்லத்தில் பணிபுரியும் சக குருக்களோடும் நெருங்கி உறவாடும் வாய்ப்புக் கிட்டுவதால், பல கருத்துகளைப் பெறவும், திட்டங்களைத் தீட்டவும் முன்னெடுப்புகளைப் பகிர்ந்துகொள்ளவும் பெரும் வாய்ப்பாக அமைகிறது.

அதன் அடிப்படையில், கடந்த எட்டு மாதங்களாக உயர்மறைமாவட்டத்தின் திருத்தூது நிர்வாகியாகப் பணியாற்றிய மேதகு ஆயர் அந்தோனிசாமி அவர்களுடன் பணித்திட்டங்கள் சார்பாகவும், மேய்ப்புப் பணி சார்ந்த பல நிர்வாகக் காரணங்களுக்காகவும், மேய்ப்புப்பணி நிலையம் முன்னெடுக்கும் பல விழாக்களுக்காகவும் அவரைச் சந்திக்க வாய்ப்புக் கிட்டியபோதெல்லாம் அவருடைய கருத்துப் பரிமாற்றத்தையும் அறிவுக்கூர்மையையும் தெளிவான ஞானச் சிந்தனைகளையும், திரு அவைச் சட்டம் குறித்த கூர்மையான விளக்கங்களையும், அன்பும் கண்டிப்பும் நிறைந்த நிர்வாகத் திறனையும், மனம் திறந்த கலந்துரையாடலையும், பிறரின் கருத்துக்குச் செவி கொடுக்கும் நல்லெண்ணத்தையும், தீர்க்கமான முடிவெடுக்கும் தன்மையையும் கண்டு வியந்து நின்றேன்!

ஆலமரம்போல விருட்சம் கொண்டு, பன்முகத் தன்மையில் சிறந்த ஆளுமையாய் விளங்கும் எம் திருத்தூது நிர்வாகியே, எமது உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமனம் பெற்றிருப்பது எமக்குக் கிடைத்த பெரும்பேறு!

தனது சொந்த மறைமாவட்டமான பாளையங்கோட்டை மறைமாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டு காலம் மேய்ப்புப்பணியில் புடமிடப்பட்டவர் இவர். தொய்வில்லாது தீவிர ஈடுபாட்டுடன் மேற்கொண்ட பல்வேறு பணிகளால் மறைமாவட்டம் மலர்ந்து உயர்ந்திருப்பது இவரது நிர்வாகத்தின் தனிச் சிறப்பினைப் பறைசாற்றுகிறது.

இவரது ஆயர் பணியின் நீட்சியாகப் பணி உயர்வு பெற்று, மதுரை உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணிப்பொறுப்பேற்பது இவரது ஆளுமைப் பண்பின் கூறுகளை இன்னும் இம்மண்ணில் விரவிடச்செய்யும்.

அஞ்சாதே, நம்பிக்கையோடு மட்டும் இரும் (லூக் 8:50) என்னும் விருதுவாக்கோடு ஆயர் பணியேற்ற எம் புதிய பேராயர், அதே விருதுவாக்கில் இன்னும் ஆழமாக வேருன்றி, இம்மறைத்தளத்தில் தூய ஆவியாரின் துணைகொண்டு துணிவோடும் தெளிவோடும் பல பணிகளை முன்னெடுக்க வாழ்த்துகிறோம்!

என் ஆடுகளைப் பேணிவளர் (யோவா 21: 17) என பேதுருவுக்கு உயிர்த்த நம் ஆண்டவர் இயேசு விடுத்த அழைப்பினைப்போல, ஆண்டவர் விடுத்திருக்கும் இந்த அழைப்பினை ஏற்று, மதுரை உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பொறுப்பேற்கும் எம் புதிய பேராயர் ஆடுகளை அரவணைத்துச் சென்று, மந்தையை மாண்புடன் வழிநடத்தவும், மந்தைக்குரிய மாண்பினைப் பேணவும் முன்னெடுக்கும் அனைத்துப் பணிகளுக்கும் துணை இருப்பதையும், செபத்தில் நினைவுகூருவதையும் உறுதியளிக்கிறோம்!