தமிழ்நாடு-பாண்டிச்சேரி அருள்பணிப் பேரவை ஆண்டுக் கூட்டம், பூண்டியில் அமைந்துள்ள பூண்டி மாதா தியான இல்லத்தில் ஜூலை 6, 2025 அன்று தமிழ்நாடு ஆயர் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தின் முதல் நாளில் ‘கூட்டொருங்கியக்கத் திரு அவையில் பெண்களின் பங்கேற்பும் பங்களிப்பும்’ என்னும் தலைப்பில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவர் மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில், திருச்சி மறைமாவட்டத்தைச் சேர்ந்த திருமதி. தனசீலி திவ்யநாதன் அவர்கள் சிறப்புக் கருத்தூட்டாளராக அழைக்கப்பட்டிருந்தார். பெண்களின் தலைமைத்துவம், சமஉரிமை, முடிவெடுப்பதில் பங்கேற்பு, திரு அவையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அமைப்புசார் சீர்திருத்தங்கள், விரிவான பங்கேற்பு, முழுமையான பங்களிப்பு என்னும் தலைப்புகளில் சிந்தனைகள் வழங்கப்பட்டன. மேலும், 16-வது ஆயர் மாமன்றத்தின் பொது அமர்வு அறிக்கையின் வழி நின்று, திரு அவையில் நிகழ்ந்திருக்கும் பெண்களுக்கான பல பங்கேற்பையும் தலைமைத்துவ பணி நியமனத்தையும் சுட்டிக்காட்டிய கருத்தூட்டாளர், திரு அவையில் பெண்கள் சந்திக்கும் சவால்களையும், கூட்டொருங்கியக்கத் திரு அவையாக இணைந்து பயணிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெடுப்புகளையும், அடுத்து இரண்டு, ஐந்து, ஏழு ஆண்டுகளுக்கான குறுகிய மற்றும் நீண்டகாலப் பணித் திட்டங்களையும் முன்னிறுத்திக் கருத்துகளை வழங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து ஆயர்களும், தமிழ்நாடு ஆயர் பேரவையின் அனைத்துப் பணிக்குழுச் செயலர்களும். தமிழ்நாடு-பாண்டிச் சேரி மறைமாவட்டங்களின் மேய்ப்புப்பணி நிலைய இயக்குநர்களும், ஏறக்குறைய 300-க்கும் மேற்பட்ட அருள்பணிப் பேரவைப் பிரதிநிதிகளும், பொதுநிலையினர் பணிக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.