பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கிடந்தார் ஆவுடையப்பன் தாத்தா. ஒரு நாளுக்குக் காலை-மாலையென்று சோமனூருக்கு இரண்டு பேருந்துகள்தான். காலை ஒன்பது மணிக்கெல்லாம் வரவேண்டிய வண்டி இன்னும் வரவில்லை. காலையிலேயே களத்துல பறிச்ச தக்காளிகளை ஒரு கோணிப்பையில் கட்டி சூலூர்ல போய் விற்று வரவேண்டி நின்றுகொண்டிருந்தார் ஆவுடையப்பன் தாத்தா. பத்தரை மணிக்கெல்லாம் சூலூர் சந்தைக்குச் சரக்கை கொண்டுபோனாதான் தக்காளி வியாபாரமாகும்.
நேரம்
ஆக ஆக ஆவுடையப்பன் தாத்தாவிற்கு
ஏதோபோலிருந்தது. “தாத்தா! வரும்போது சிவப்பு கலர்ல பெரிய பலூன் ஒண்ணு வாங்கிட்டு வாங்கோ”
- வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது தன் பேரன் சொன்னது ஞாபகம் வந்தது.
“என்ன பெருசு சூலூருக்கா?” தன் மிடுக்கான சோடாபுட்டிக் கண்ணாடியைச் சரிசெய்துகொண்டே குரல் வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தார் தாத்தா.
“யாரது? இராணியா?”
“ஆமா! நானேதான்”
சிரித்துக்கொண்டே
பதிலளித்தாள் அவள்.
இராணிக்கு
இப்போது நாற்பது வயதிற்குமேலிருக்கும். அவள் பிறந்து வளர்ந்த ஊர் கோம்பக்காடு. இளம்வயதில் பள்ளி படிக்கும்போதே சோமனூர்க்காரர் ஒருவரைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டாள்.
“எங்க புறப்பட்டீக? சோமனூர் இராணி” ஆவுடையப்பன் தாத்தாவின் கேள்வியில் கோயம்புத்தூர் குசும்பு கொஞ்சம் ஒளிந்திருந்தது.
“அத ஏன்பு கேட்டுக்கிட்டு?
ஆத்தா சூலூர் சர்கார் ஆஸ்பத்திரில சாகக்கிடக்கிறானு செய்தி வந்துச்சு. அதான் ஓர் எட்டுபோய் பார்த்துக்கிட்டு வந்திடலாமுனு போறேன். அவுக என்ன ஏத்துக்காட்டாலும், அவுக எனக்கு ஆத்தா இல்லாம போகுமா!” பொங்கிவரும் உணர்வை முந்தானையால் பொத்திக்கொண்டு அருகிலிருந்த வேப்பமர நிழலில் அமர்ந்துகொண்டாள் இராணி.
இன்னும்
வேறு சிலரும் பேருந்துக்காக முனங்கியபடியே
காத்துக்கிடந்தனர். காலையிலேயே வெயில் உயிரை உறிஞ்சுவதுபோலிருந்தது. அந்தப் பொத்தல் சாலையில் அவ்வப்போது சைக்கிள்களும் பைக்குகளும் அணிவகுப்பு நடத்தின. ஆனால், ஒன்பது மணி பேருந்து பத்தாகியும் இன்னும் வரவில்லை. ஒருசிலர் திட்டியபடியே வீடு திரும்பினர். ஆவுடையப்பன் தாத்தாவுக்கு மூட்டையில் இருக்கும் தக்காளிகளும், பேரன் கேட்ட சிவப்பு கலர் பலூனும் நினைவுக்கு வந்து தலைக்கிறக்கத்தை ஏற்படுத்தியது. தன் தாயின் சாவுக்கு முன்பாக அவரை ஒருமுறை பார்த்துப் பேசிவிடவேண்டும் என்ற தவிப்பு இராணியின் கண்கள் வழியாக எட்டிப்பார்த்தது. அந்தப் பேருந்து நிறுத்தத்தில் நின்றவர்களின் கண்கள் அந்த ஒற்றைப் பேருந்துக்காய் எதிர்நோக்கி இருந்தன. ஒரு பேருந்து எவ்வளவு கனவுகளைச் சுமக்கிறது? ஒரு பேருந்து எத்தனை உறவுகளுக்குப் பாலமாகிறது? என்பதைப் போன்று, ஓர் இணையம் எத்தனை இதயங்களை இணைக்கிறது! எத்தனை மாணவர்களுக்குப் பல்கலைக்கழகமாகிறது! எத்தனை நாடுகளுக்குப் பாலமாகிறது! எத்தனை வியாபாரங்களுக்குத் தளமாகிறது!
இன்று
இணைய உலகில் பெரும் சக்தியாகவும் இணைப்புப்பாலமாகவும் பேசுபொருளாகவும் இருப்பது ‘கிரிப்டோ கரன்சி’
(crypto currency) ஆகும். கிரிப்டோ
கரன்சி என்பது இணையத்தில் மட்டுமே செல்லுபடியாகும் ஒருவகையான டிஜிட்டல் பணம். எந்த ஓர் அரசின் அல்லது வங்கியின் கட்டுப்பாடு இல்லாமல் இணையம் வழியாக டிஜிட்டல் பணபரிவர்த்தனை செய்ய இயலும். கிரிப்டோ கரன்சி பிளாக்செயின் (block chain) தொழில்நுட்பத்தின் துணைகொண்டு இயங்குகிறது.
பிளாக்செயின் என்பது ஒரு தானியங்கி கணினிப் பதிவேடாகும் (digital ledger). ஒவ்வொரு பரிவர்த்தனையும்
இதில் பதிவு செய்யப்படுகிறது. அனைவரும் இந்தப் பதிவேட்டைப் பார்க்கமுடியும். ஆனால், பதிவேட்டின் தரவுகளை மாற்றமுடியாது.
கிரிப்டோ
கரன்சி இன்று பல பிட்காயின் (bitcoin), எத்தீரியும்
(ethereum), சோலனா (solana), டோஜ்காயின் (Dodgecoin) என்று
பல வகைகளில் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மதிப்பு இருக்கின்றது. இந்த நாணயங்களை வாங்க மற்றும் விற்க பல உலகளாவிய மற்றும்
தேசிய இணையத் தளங்கள் உள்ளன. பைனான்சு (finance), காயின் பேசு (coinbase) போன்ற உலகளாவிய தளங்களிலும், வாஃயீர்எக்ஸ் (wazirX), காயின் டி.சி.எக்ஸ்.
(coin DCX) போன்ற இந்திய தளங்களைப் பயன்படுத்தி கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை செய்யலாம்.
கிரிப்டோ
கரன்சி பரிவர்த்தனையில் இந்தியாவின் நிலைப்பாடு மாறிக்கொண்டே இருக்கின்றது. 2025-இல் உச்ச நீதிமன்றம் ‘கிரிப்டோ கரன்சியைத் தடைசெய்வது என்பது உலக எதார்த்தங்களுக்கு நாம் கண்மூடிக் கொண்டிருப்பதுபோலுள்ளது’ என்று
தனது கருத்தை வெளியிட்டுள்ளது. மெய் நிகர் டிஜிட்டல் சொத்துகள் (Virtual Digital assets)
குறித்த நிலையான வரிக்கொள்கைகள், தெளிவுகள் மற்றும் சட்டங்கள் இந்தியாவில் விரைவில் கொணரப்பட வேண்டும் என்பது அப்பரிவர்த்தனைகளில் ஈடுபடுவோரின் விருப்பமாக உள்ளது. 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் வியாபார முதலீட்டாளர்கள் 6.6 பில்லியன் டாலருக்கும் மேற்பட்ட தொகையைக் கிரிப்டோ சொத்துகளில் முதலீடு செய்துள்ளனர். இது 2030-இல் இன்னும் பல மடங்கு உயரக்கூடும்
என்று கணிக்கப்படுகிறது.
என்னதான்
கிரிப்டோ கரன்சி டிஜிட்டல் உலகில் தவிர்க்க முடியாதது என்று நாம் பேசினாலும், அதில் ஒளிந்திருக்கும் ஆபத்துகளையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும். கிரிப்டோ கரன்சியின் மதிப்பு எப்போது கூடும்? எப்போது குறையும்? என்று கணிப்பது சிரமம். அரசுகளின் கட்டுப்பாடும் கண்காணிப்பும் இல்லாததனால், இதில் ஏமாற்று வேலைகள் நடக்க வாய்ப்புள்ளது. தீவிரவாதம் மற்றும் நாச வேலைகளுக்குக் கிரிப்டோ கரன்சி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இரகசியக் குறியீட்டு எண் (private key) திருடப்பட அல்லது
அது வைக்கப்பட்டுள்ள வாலட் (wallet) தொலைந்துபோக வாய்ப்புள்ளது. இலண்டனைச் சார்ந்த ஜேம்ஸ் ஹோவல் என்பவர் 2013-ஆம் ஆண்டு தொலைத்த இரகசியக் குறியீட்டு எண் இருந்த ஹார்ட் டிரைவை இன்றளவும் தேடிக் கொண்டிருக்கிறார். இன்றைய நாளில் அவர் தொலைத்த பிட்காயினுடைய மதிப்பு 800 மில்லியன் டாலர் என்று கணக்கிடப்படுகிறது.
எத்தனை
டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறைகள் வந்தாலும், எத்தனை புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும் அவை பெரும்பாலும் ஏழை எளியவர்களுக்கு உதவாமல், பணம் படைத்தவர்களையே மையப்படுத்துகின்றது. ஏழை எளியவர்கள் வாழ்வு மேம்படச்செய்யும் தொழில்நுட்பங்கள் என்று வருகின்றதோ, அன்றுதான் தொழில்நுட்பங்களின் புரட்சி எனக் கூறமுடியும். அன்றைய நாள் என்று வருமோ?