news-details
ஆன்மிகம்
புனித எண்ணெய் (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 20)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமசின் உரையாடல் தொடர்கிறது)

அகஸ்டின்:தந்தையே, சென்றமுறை நாம் சந்தித்தபோது, எவ்வாறு சாதாரண நீர் புனிதப்படுத்தப்படுகின்றபோது ஆற்றல் வாய்ந்ததாக மாறுகிறது என்பதை திருவிவிலியப் பின்னணியிலும் அறிவியலின் பின்னணியிலும் நீங்கள் சுட்டிக்காட்டினீர்கள். இது என் சிந்தனையை இன்னும் அதிகமாக்கியது. மனிதர்களாகிய நம் எண்ணங்களும் வார்த்தைகளும் எவ்வளவு ஆற்றல் வாய்ந்தவை என்பதை என்னால் உணர முடிந்தது. உதாரணமாக, நம் மனம் கூட நேர்மறையான வார்த்தைகளைக் கேட்கும்போதும், நல்ல எண்ணங்களிலிருந்து உருவாகும் அதிர்வுகளை உணரும்போதும் உற்சாகமடைகிறது. உயரமடைகிறது, உருவாக்கம் கொள்கிறது. எதிர்மறை வார்த்தைகளாலும் எண்ணங்களாலும் சிதைக்கப்படுகிறது, சீரழிக்கப்படுகிறது, சிக்கலாகின்றது. இதுதான் தண்ணீருக்கும் நடக்கிறது. ‘ஆசிர்வதித்தல், ‘புனிதப்படுத்தப்படுதல்,’ ‘மந்திரித்தல்என்றாலே ஆற்றல்மிக்க நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்துவதுதானே! இப்பொழுது ஆற்றல் மையங்கள்மீது எண்ணெய் பூசப்படுவது குறித்துச் சொல்லுங்கள் தந்தையே!”

மார்த்தா:எனக்குத் தெரிந்தவரையில், நம் அன்றாடச் செயல்பாடுகளில் எண்ணெயின் பங்களிப்பு மிகவும் அதிகம். மிதிவண்டி உள்பட எல்லா வகையான இயந்திரங்களும் சிறப்பாகச் செயல்படுவதற்கு எண்ணெயின் பங்களிப்பு இன்றியமையாதது. நம் உடல்கூட ஒருவகையான இயந்திரம்தான். அதன் சிறப்பான செயல்பாடுகளுக்கு எண்ணெய் மிகவும் முக்கியமானது. எண்ணெயின் முக்கியத்துவம் என்ன என்பதை திருவிவிலியமும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சுவையான உணவிற்கு எண்ணெயின் பங்களிப்பு மிகவும் அவசியம் (எண் 11: 8); விளக்கு எரிவதற்கு மிகவும் அவசியமானது எண்ணெய் (மத் 25:1-9); உடல்நோய்க்கான மருத்துவத்தில் எண்ணெய் முக்கியம் இடம்பெறுகிறது (எசா 1:6, லூக் 10:34); உடலின் நலனை மட்டுமல்ல, நறுமணத்தைக் கூட்டுவதற்கும் எண்ணெய் பயன்படுகிறது (ரூத் 3:3); யூத பாரம்பரியத்தில், ஒரு விருந்தினர் வீட்டிற்கு வரும் போது அவரை எண்ணெய் பூசி வரவேற்பது வழக்கம் (லூக் 7:46); வாழும்போது மட்டுமல்ல, வாழ்ந்து இறந்தபின்பு உடலைப் பதப்படுத்துவதற்கு எண்ணெய் தேவைப்படுகிறது (மாற் 16:1).”

அருள்பணி:எண்ணெயினால் நம் புறவாழ்விற்கு நிறைய பயன்கள் உண்டு என்றாலும், அருளடையாளத்தில் நாம் எண்ணெயைப் பயன்படுத்துவது ஆன்மிகக் காரணங்களுக்காக! மூன்றுவிதமான எண்ணெய்களைத் திரு அவை அருளடையாளக் கொண்டாட்டங்களுக்குப் பயன்படுத்துகிறது. ) கிறிஸ்மா தைலம் (SC), ) ஆயத்தக்கார எண்ணெய் (GS) மற்றும் நோயாளர் திருஎண்ணெய் (GI). வழக்கமாக இம்மூன்று எண்ணெய்களுமே ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் புனித வாரத்தில் மறைமாவட்ட ஆயரின் தலைமையில் அனைத்து குருக்களும் பங்கெடுக்கும் சிறப்புத் திருப்பலியில் புனிதப்படுத்தப்படுகின்றன. எனினும், அவசரச் சூழ்நிலையில் ஆயத்தக்கார எண்ணெயும், நோயாளர் திரு எண்ணெயும் அருள்பணியாளர்களாலேயே புனிதப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படலாம்.

ஆயத்தக்கார எண்ணெயானது ஒரு நபர் கடவுளின் அருளைப் பெறுவதற்கான தயாரிப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. திரு அவையின் மரபின்படி, ஒரு நபரைப் பீடித்திருக்கும் எதிர்மறைத் தன்மைகளிலிருந்தும் தீயோனின் செயல்பாடுகளிலிருந்தும் விடுவிப்பதற்காக ஆயத்தக்கார எண்ணெயானது குழந்தைகளின் நெஞ்சில் பூசப்படுகிறது. தீமைக்கு எதிரான போராட்டத்தில், எண்ணெயால் அருள்பொழிவு செய்யப்படுவது ஒருவருக்கு வலிமையளிக்கிறது என்கின்ற கருத்தை திருவிவிலியம் சுட்டிக்காட்டுகிறது (திபா 23:5, திபா 45:8, எபி 1:9). மேலும், அருள்பொழிவு ஒருவரைப் பொய்மையிலிருந்து காக்கிறது என்பதையும் திருவிவிலியத்தில் பார்க்கிறோம் (1யோவா 2:27). புனித ஹிப்போலித்துஸ் (St. Hippolytus) தனதுThe Apostolic Tradition’ (கி.பி. 210) என்ற நூலில் இந்த எண்ணெயைபேயோட்டுவதற்கான எண்ணெய் (The oil of exorcism) என்று அழைக்கிறார். இந்த மரபானது திரு அவையில் இன்றுவரை பின்பற்றப்படுகிறதுபேயோட்டுவதற்கான இறைவேண்டல் முன்னெடுக்கப்படுகின்ற வேளையிலே இந்த எண்ணெய் குழந்தையின் நெஞ்சின்மீது பூசப்படுகிறது.

நோயாளர் திரு எண்ணெய் குறித்து நாம் நோயில்பூசுதல் அருளடையாளம் குறித்துப் பேசும்போது கவனம் செலுத்தலாம். கிறிஸ்மா தைலமானது நாம் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள் என்பதன் அடையாளமாக நம்மீது பூசப்படுவது. கிறிஸ்மா தைலத் திருப்பலியின்போது, மந்திரிக்கப்பட இருக்கின்ற ஒலிவ எண்ணெயோடு நறுமணத் தைலமானது கலக்கப்படுகின்றது. இது கடவுளே நம் வாழ்வின் நறுமணமாக இருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டும் அடையாளமாகவும் இருக்கிறது (2கொரி 2:15,16). திருமுழுக்கு, உறுதிபூசுதல், குருத்துவம் ஆகிய மூன்று அருளடையாளக் கொண்டாட்டங்களுக்கு இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.”

கிறிஸ்டினா:கிறிஸ்மா எண்ணெயின் சிறப்பம்சம் என்ன தந்தையே?”

அருள்பணி:தூய ஆவியின் பிரசன்னத்தையும் ஆற்றலையும் நாம் பெறுவதற்கான அடையாளமாக கிறிஸ்மா எண்ணெய் நம்மீது பூசப்படுகிறது. எண்ணெய் பூசப்படுகின்ற வேளையில், தூய ஆவி இறங்கி வருவதைப் பற்றிய குறிப்பு திருவிவிலியம் முழுவதும் காணப்படுகிறது. சவுல், தாவீது ஆகியோர் எண்ணெயால் அருள்பொழிவு செய்யப்பட்ட பின்பு, கடவுளின் ஆவியார் அவர்கள் மீது தங்கி அவர்களை ஆட்கொண்டார். எலியாவால் அருள்பொழிவு செய்யப்பட்ட பின்பு, கடவுளின் ஆவி எலிசா மீது தங்கியது. இயேசுவும் கடவுளின் ஆவியால் அருள்பொழிவு செய்யப்பட்டது குறித்துக் குறிப்பிடுகிறார். திரு அவை வரலாற்றிற்கு வருகின்றபோது, திரு அவைத் தந்தையர்களில் முக்கியமாகக் கருதப்படுகிறவர் எருசலேம் நகரத்து புனித சிரில். அவர், ‘எண்ணெய் பூசுவது என்பது உடன்படிக்கையின் முத்திரை ஆகும். தூய ஆவியார் நம்மீது பொழியப்படுகிறார் என்பதன் அடையாளம் ஆகும்என்கின்றார். இக்கருத்தைச் சொல்லிவிட்டு அவரே நமக்கு ஓர் அழைப்பையும் தருகிறார். எனவே, எண்ணெய் பூசுதலை ஒரு வெற்றுச் சடங்காக மட்டும் எண்ணி விடாதீர்கள். திருப்பலியின்போது தூய ஆவியார் சாதாரண ரொட்டியை இயேசுவின் உடலாக மாற்றுவதுபோல, எண்ணெய் பூசுதல் வழியாக உங்கள்மீது இறங்கி வரும் தூய ஆவியார் உங்களைக் கடவுளின் சாயலாக மாற்றுகிறார்.”

மார்த்தா:தந்தையே, நீங்கள் இக்கருத்தைக் கூறும்போது, புனித பவுலின் கீழ்க்காணும் வார்த்தைகள் என் நினைவிற்கு வருகின்றன: ‘அவரே (கடவுளே) நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார். அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையைப் பதித்தார் (2கொரி 1:21, 22).”

அருள்பணி: “திருமுழுக்குக் குறித்து நாம் மற்றொரு கருத்தையும் மனத்திலிருத்துவது அவசியம். திருமுழுக்கைத் திருவிவிலியம் பாவமன்னிப்போடு தொடர்புபடுத்துவதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ‘பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்திற்கும் சென்று அவர் (திருமுழுக்கு யோவான்) பறைசாற்றி வந்தார் (லூக் 3: 3) என்றும், ‘நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள் (திப 2: 38) என்றும் நாம் வாசிக்கிறோம். கடந்த கட்டுரைகளில் நாம் வாசித்ததுபோல, புறம் நோக்கிய மனம் தன்னைத் தக்கவைப்பதற்காக எத்தகைய தீமையையும் செய்ய துணிந்து விடுகிறது. இதுவே பாவம் என்பது! எனவே, புறம் நோக்கிய மனத்தை அகம் நோக்கித் திருப்புவது என்பது பாவத்திலிருந்து மீண்டெழுவதே! பாவத்திலிருந்து மன்னிப்புப் பெறுவதே! இவ்வாறு பாவத்திலிருந்து மீண்டெழும் மனம் குற்றமற்றதாக மாறுகிறது என புனித பேதுரு எடுத்துரைக்கிறார்: ‘திருமுழுக்கு உடலின் அழுக்கைப் போக்கும் செயல் அல்ல; அது குற்றமற்ற மனச்சான்றுடன் கடவுளுக்குத் தரும் வாக்குறுதியாகும்; இது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வழியாக இப்போது உங்களுக்கு மீட்பளிக்கிறது (1பேது 3: 21). மேலும் கிறிஸ்துவோடு இணைந்து அவரைப்போல வாழ்வதற்கான வழியையும் திருமுழுக்கு நமக்குத் திறந்து வைக்கிறது என்பதை புனித பவுல் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள் (கலா 3:27).

மார்த்தா:தந்தையே! மேலோட்டமாகப் பார்க்கும்போது ஒரு சில செயல்பாடுகளின் தொகுப்பாகத் தெரியும் திருமுழுக்கு அருளடையாளம் எவ்வாறு புது வாழ்விற்கான வழிமுறையாக இருக்கிறது என்பதைத் தெளிவாக விளக்கினீர்கள்! நன்றி தந்தையே!”      

தொடரும்