news-details
ஞாயிறு தோழன்
ஜூலை 20, 2025, ஆண்டின் பொதுக்காலம் 16-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) தொநூ 18:1-10; கொலோ 1:24-28; லூக் 10:38-42

திருப்பலி முன்னுரை

இயேசுவோடு உடனிருந்து சீடத்துவ வாழ்வில் சிறந்து விளங்க, ஆண்டின் பொதுக்காலம் 16-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய நற்செய்தியானது விருந்தோம்பல் என்பது உணவளித்து மகிழ்வதில் மட்டுமல்ல; மாறாக, விருந்தினர்களோடு உளமார உரையாடி உறவை வளர்ப்பதும், அவர்களின் இன்ப-துன்பங்களைப் பகிர்ந்துகொள்வதும் சிறந்த விருந்தோம்பலாகும் என்பதை நமக்கு அறிவுறுத்துகிறது. மார்த்தா-மரியா இருவரும் இயேசுவின்மீது கொண்டிருந்த நம்பிக்கை அசாத்தியமானது. மார்த்தாவிற்கு இயேசுவுக்குப் பணிவிடை செய்யும் பாக்கியமும், மரியாவிற்கு இயேசுவின் காலடியில் அமர்ந்து அவரது போதனையைக் கேட்கும் பாக்கியமும் கிடைக்கிறது. மார்த்தாவும்-மரியாவும் இயேசுவை அன்புடன் உபசரித்தனர். இருவரும் ஆண்டவரில் மகிழ்ந்திருந்தனர். இயேசுவே இவர்களின் இல்லத்தைத் தேடிச்சென்று மகிழ்ச்சியைக் கொடுக்கின்றார், உறவை வலுப்படுத்துகின்றார். மார்த்தா-மரியா இல்லம் சென்ற இயேசு நம் இல்லத்திற்கு வரவேண்டுமென்றால் அன்றாடம் நமது வாழ்க்கையில் ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டவர்கள் அனைவரிலும் உள்ள இயேசுவைக் கண்டு, அவர்களுக்கு உணவு கொடுப்போம். அன்றாடம் திருப்பலி, இறைவார்த்தை, ஆராதனை இவற்றின் வழியாக அனுபவிக்கும் இயேசுவை உடன் வாழும் அனைவரும் அனுபவிக்கச் செய்வோம். நமது உள்ளத்தை இயேசு தங்கும் ஆலயமாக்குவோம். அன்பிலும் பகிர்விலும் உறவிலும் விருந்தோம்பலிலும் இறைவேண்டலிலும் நாளும் நமது குடும்பங்கள் வளர்ந்திட வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

விருந்தோம்பல் உறவை வளர்க்கும் உன்னதப் பண்பாகும். விருந்தினரைப் போற்றுதல் அறிவுடைமைக்கு அழகு. விருந்து கொடுப்பது பெறக்கூடிய பேறுகளுள் நற்பேறாகும். நமது இல்லத்தைத் தேடிவரும் அனைவருக்கும்  மனமகிழ்ச்சியோடு  அன்பாக உணவிடும்போது இரட்டிப்பான ஆசிகளைப் பெற்றுக்கொள்கிறோம் என்பதை விளக்கிக் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.  

இரண்டாம் வாசகம் முன்னுரை

கிறிஸ்து நமக்காக உலகிற்கு வந்தார். உயிரைக் கொடுத்து உலகத்தை மீட்டார். நாம் அனைவரும் கிறிஸ்துவின் இரத்தத்தால் விலைகொடுத்து மீட்கப்பட்டவர்கள். அவரது சாயலைப் பெற்றுள்ளோம். நமக்குள் வாழும் கிறிஸ்துவை நற்செயல்களின் வழியாக அறிவிப்பது நமது கடமை. கிறிஸ்துவோடு இணைந்து, அவரின் அன்பைச் சுவைத்துப் பலமடங்குப் பலன் கொடுத்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும்  துறவிகள் அனைவரும் உம் குரலுக்குச் செவிசாய்த்து வாழவும், இறையொளியின் பாதையில் வழிநடத்தவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எம்மோடு பயணிக்கும் ஆண்டவரே! நாங்கள் அனைவரும் எம்மைச் சந்திக்கும் மற்றும் நாங்கள் சந்திக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொடுக்கக்கூடிய வகையில் எமது சொற்களும் செயல்களும் அமைந்திடத் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எமக்கு வாழ்வு கொடுக்க வந்த ஆண்டவரே! உம் பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் மரியாவைப் போன்று உம் பாதத்தில் அமர்ந்து ஆசையோடு உம் வார்த்தையைக் கேட்கவும், மார்த்தாவைப் போன்று எங்களை நாடிவரும் அனைவருக்கும் அன்போடு விருந்தளிக்கவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எம்மைப் படைத்துக் காத்துவரும் ஆண்டவரே! எம் பங்கில் உள்ள குழந்தைகள் இறைவார்த்தையை ஆர்வத்தோடு படிக்கவும், மறைக்கல்வி வகுப்பில் தவறாது கலந்து கொண்டு திரு அவை கற்பிக்கும் வழியில் வாழவும் தேவையான ஞானத்தை எம் குழந்தைகளுக்குத் தந்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.