அர்ஜென்டினாவிலிருந்து கர்தினால் ஜார்ஜ் மரியோ பெர்கோலியோ மார்ச் 13, 2013-இல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அருகே அமர்ந்திருந்த அவரது நண்பர் கிளாடியோ ஹீம்மஸ், “நண்பா, ஏழைகளை மறந்துவிடாதே”… என்று வாழ்த்துக் கூறினார். எந்தவொரு தயக்கமுமின்றி, “நான் ஏழைகளின் தோழனாக வாழ்ந்த அசிசி நகர் புனித பிரான்சிஸ் பெயர் கொண்டு அழைக்கப்பட விரும்புகிறேன்” என்று கூறினார். அவர் கூறியபடியே ஏழ்மைக்கும் எளிமைக்கும் பெயர்போன ‘பிரான்சிஸ்’ என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்து, தொடக்கத்திலிருந்தே தனது வாழ்வாலும் வார்த்தையாலும் தானும் ‘ஏழைகளின் தோழன்’, ‘எளியவர்களின் காவலன்’… என்பதை உறுதிப்படுத்தினார்.
இறைவனுக்கு அர்ச்சனையான
மலர்:
இவர் குருவாக, பேராயராக, கர்தினாலாக வாழ்ந்த காலத்தில் சேரிகளுக்குச் சென்று, சேரிவாழ் மக்களின் ஆன்மிகத் தேவைகளுடன் அடிப்படைத் தேவைகளையும், மிக்க ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் செய்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, வறுமைக்கெல்லாம் வறுமையான, ஆன்மிக வறுமையும் (Spiritual Poverty) நவீன
காலத்து மனிதனிடம் ஆழமாகப் புரையோடிக் கொண்டிருக்கும் நோயாகும் என்கிறார்.
ஏழைகளின் குரலான
திருத்தந்தை
பிரான்சிஸ்:
2015, நவம்பர் மாதம் ஆப்பிரிக்கா, கென்யா நாட்டின் தலைநகரான நைரோபிக்குப் பயணமாகிறார். அங்குள்ள பெரிய சேரிக்குச் செல்கின்றார். சேறும் சகதியும் நிறைந்த தெருக்களைக் கடக்கிறார். பசியும் பட்டினியுமாக உள்ள சிறார் மற்றும் எலும்பும் தோலுமாக நின்ற ஆண்-பெண்களிடம் உரையாடுகிறார். அவர்களின் சோகக் கதைகளைக் கேட்டு வேதனை அடைகிறார். பாழடைந்த குடிசைகளில் உள்ள பெண்களின் மாண்பினைக் கெடுக்கும் சாராய முதலாளிகளைப் பார்த்து, “இந்தச் சேரிகள் உங்களால் உருவாக்கப்பட்ட புண்கள்”…
என்று அவர்களைச் சாடுகின்றார். எனவே, இவர் ‘சேரிகளின் பேராயர்’ என அழைக்கப்பெற்றார்.
அதேபோல,
2019-இல் ஐரோப்பாவில் உள்ள ரொமேனியா நாட்டிற்குப் பயணம் செய்தபோது, உடைமை, உரிமை, வேலையின்மை, தீண்டாமையினால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர்களைப் பார்த்து, “நான் கனத்த இதயத்துடன் உங்களைச் சந்திக்கிறேன். இந்த அரக்கத்தனமான சமுதாயமும், அதில் அடங்கியுள்ள கத்தோலிக்கர்களும் இழைத்த அநீதிகளுக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்”……என்றார்.
அடுத்த நாள் பல ஊடகங்களும், “பாவமன்னிப்பு
வழங்கும் திருத்தந்தையே, பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்”…என்று
வியந்தனர்.
இன்னும்
இறைவன் முன் ஆணும்-பெண்ணும் சமம் என்பதை வலியுறுத்தும் விதமாக, 2024-இல் புனித வியாழனன்று குற்றங்கள் (பாவங்கள்) செய்து, உரோமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆண்-பெண் பாதங்களைக் கழுவி முத்தமிட்டு, இயேசு விலைமகளிடம் “இனி பாவம் செய்யாதீர்” (யோவா
8:11) என்று இயேசு காட்டிய மன்னிக்கும் அன்பைத் தன் இரக்கத்தின் பார்வையால் உணர்த்தினார்.
இவ்வாறாக,
திருத்தந்தையின் அரிய பண்புகளால் மக்களைக் காந்தம் போல் தன்பால் ஈர்த்து, எதிர்மறையான சிந்தனைகளுக்குப் பதில், நேர்மறையான சிந்தனைகளையும், அலகையின் பாவத்திற்குப் பதில், ஆண்டவரின் தெய்வீக அன்பையும் விதைத்தார். தான் மேற்கொண்ட விருதுவாக்கான ‘இறைவனின் இரக்கப் பெருக்கால் மந்தையின் மணத்தை உணரும் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்’ என்ற
கூற்றுக்குச் செயல்வடிவம் கொடுத்து விட்டுச் சென்றதால், திருத்தந்தை பிரான்சிஸ் ‘மக்களின் திருத்தந்தை’, ‘நலிந்தோரின்
திருத்தந்தை’, ‘ஏழைகளின்
திருத்தந்தை’ என்று
போற்றப் பெற்றார்.
இறுதியாக,
‘எல்லாருக்கும் எல்லாமுமான திருத்தந்தை’ என்ற
தனிச் சிறப்பு முத்திரையைப் பெற்றார்.
ஒரு
நேர்காணலில் ‘நீங்கள் எவ்வாறு நினைவுகூரப்பட வேண்டும்?’ என்ற கேள்விக்கு, “இந்த மனிதன் ஒரு நல்ல ஆள் - இவர் நல்லது செய்ய முயன்றார்”
என்று அவர் பதிலளித்தார்.
மனிதர்களின்
புனிதராக வாழ்ந்த திருத்தந்தை, இறந்தும் இறவாது நம்முடன் வாழ்கிறார்.