“என்ன மிஸ் யாழினி, அந்தக் கேன்சர் பேஷண்ட் விசயமாய் எங்கிட்டேயே சொல்லி இருக்கலாமே?” என்றார் சகாதேவன்.
“இல்லை டாக்டர், நீங்க நேரில் சொன்னால் வருத்தப்படுவீங்க. நீங்க இங்கே என்னைவிட சீனியர் டாக்டர். அது மட்டுமில்லே... டாக்டர் இஸ்மாயிலுக்கு மிகவும் நெருக்கமானவர். அதனால்தான், நான் டாக்டர் சேவியரிடம் டிஸ்கஸ் பண்ணினேன்”
என்றாள் யாழினி.
‘சேவியர் என்னைக் கூப்பிட்டு இதுபற்றி பேசினார். நானும் நீங்க இப்ப சொன்னதைத்தான் அவர்ட்டே சொன்னேன்’
என்றார் சகாதேவன்.
“நீங்க நரம்பியல் மருத்துவர், நான் கேன்சர் ஸ்பெசலிஸ்ட். அப்ப கேன்சர் பேஷண்ட் பற்றி இந்த மருத்துவமனையில் நான்தானே முடிவெடுக்கணும். இதுதானே நார்மல் டூட்டி” என்றாள் யாழினி.
“அதனால்தான் நீங்க ஹீமோதெரபி கொடுத்தபோது நான் அப்படியே விட்டுட்டேன். நமக்குள்ளே ஒத்துப்போறதுதானே எதிர்காலத்துக்கு நல்லது” என்று சிரித்தார் டாக்டர் சகாதேவன்.
“இதிலே எந்த மாறுபாடும் கிடையாது டாக்டர். நான் என் கடமையைச் செய்றேன், அவ்வளவுதான்” என்று
சிரித்தாள் யாழினி.
“அதை விடுங்க, இந்த பிரபாகரன் பேஷண்டுக்கு நெற்றியிலே நரம்பு விட்ருச்சு; அதை நீங்க பார்க்கிறதாச் சொன்னாங்க. அவருக்கு என்ன மாதிரி ட்ரீட்மெண்ட் குடுக்குறீங்க?” என்றார் சிரித்தபடி.
“டாக்டர் இஸ்மாயில்தான் அதைக் கவனமாய்ப் பார்க்கச் சொன்னார். நெற்றியிலே இருக்கிற பிரிஞ்ச நரம்பைச் சேர்க்கிறதுக்கான மருந்தைக் குளுக்கோசில் ஏத்துறோம். அதற்கான மெடிசனைச் சாப்பிடச் சொல்றோம்”
என்றாள் யாழினி.
“கரெக்ட் யாழினி. வெரிகுட்! நீங்க சரியா அந்தப் பேஷண்டைப் பார்க்குறீங்க. இதிலே நரம்பு ரெண்டும் சேருவதற்கான டெவலப்மெண்ட் இருக்கா?” என்றார் சகாதேவன்.
“நிச்சயம் இருக்கு டாக்டர்! முன்பைவிட இப்ப ரெண்டு நரம்பும் நெருங்கி வருது. ஒன் வீக்ல கட்டாயம் சேருவதற்கான நல்ல சான்ஸ் இருக்கு” என்றாள் யாழினி.
“உங்களுடைய அணுகுமுறை எனக்குப் பிடிச்சிருக்கு. நாம் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு செயல்பட்டால் பேஷண்ட்களுக்கு நல்ல குணம் கிடைக்கும், இல்லையா யாழினி” என்று சிரித்தார் சகாதேவன்.
“எங்கே சார், நமக்கு ஓய்வு இருக்கு? தொடர்ந்து பேஷண்ட்களைப் பார்த்துக்கிட்டே இருக்கோம்! இதிலே ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் டாக்டர் சுகுமார் அடிக்கடி பெங்களூரு போயிட்றார். அவங்களையும், இஸ்மாயில் என்னைப் பார்க்கச் சொல்லி விடுகிறார். எப்படியோ நாள்கள் பரபரப்பாய் போகிறது” என்று சிரித்தாள் யாழினி.
“ஒருநாள் எங்க வீட்டுக்கு நீங்க வரணும். எங்க அம்மா, அப்பா உங்களைப் பார்த்துப் பேச விரும்புறாங்க” என்றார்
சகாதேவன்.
“உங்க வீடு எங்கே டாக்டர்”?
என்றாள் யாழினி.
“நான் சாந்தோமில் இருக்கேன்”
என்றார் சகாதேவன்.
“என்னோட வீடு ட்ரஸ்ட்புரத்தில் இருக்கு. இங்கே இருந்து அவ்வளவு தூரம் வர வாய்ப்பில்லை டாக்டர்” என்றாள்
யாழினி.
“உங்க வீட்டு முகவரி சொல்லுங்க. அவங்களை உங்க வீட்டுக்கு வந்து பார்க்கச் சொல்றேன். ஒரு சண்டேயில வருவாங்க”
என்று புன்னகைத்தார் சகாதேவன்.
‘எதற்கு வரச்சொல்கிறார்? இவரின் பெற்றோர்கள் ஏன் வீட்டிற்கு வரவேண்டும்?’ யாழினி மனதிற்குள் சரியான பதில் கிடைத்துவிட்டது.