news-details
சிறப்புக்கட்டுரை
“அஞ்சாதீர்! நம்பிக்கையோடு மட்டும் இரும்” (லூக் 8:50)

அஞ்சாதீர்! நம்பிக்கையோடு மட்டும் இரும் (லூக் 8: 50) என்பது பேராயரின் ஆயத்துவ விருதுவாக்கு! அச்சம் தவிர்த்து நம்பிக்கையில் ஆழப்படவும், மக்களின் வாழ்க்கையில் அச்சத்தைப் போக்கி நம்பிக்கையில் அவர்களை உறுதிப்படுத்தவும் இவ்விருதுவாக்கை முன்னெடுத்து வருகிறார் நம் பேராயர்.

பேராயரின் இலட்சினையில் நான்கு அடையாளங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. முதலாவதாக, திருவிவிலியம்! நமது இறைநம்பிக்கையின் அடித்தளமாக இருப்பது திருவிவிலியம். அத்தகைய அடித்தளத்தில் மக்களின் நம்பிக்கையைக் கட்டி எழுப்பவும், அதையே மறைப்பணியின் ஊற்றாகக் கொண்டிருக்கவும் திருவிவிலியத்தின்மீது கட்டப்பட்ட திரு அவையை முன்னெடுக்கவும் வருகிறார் பேராயர்.

இரண்டாவதாக, பாதுகாப்பான ஒரு கரத்தில் இளைப்பாறும் குழந்தையின் அடையாளம். இறைவன் நம்மைப் பராமரிக்கிறார், பாதுகாக்கிறார், நம்மை அரவணைத்துக்கொள்கிறார், நம் பெயரைத் தம் உள்ளங்கையில் பொறித்து வைத்திருக்கிறார் என்னும் பேருண்மைகளைத் தியானிக்கும் வகையில் இறைவனின் பாதுகாப்பை, பராமரிப்பை நாமனைவரும் பெற்றுக்கொள்கிறோம் என்ற பேருண்மையை எடுத்துக்கூறுகிறது இந்த அடையாளம்.

மூன்றாவதாக, இடம்பெற்றிருக்கும் நங்கூரம், நமது நம்பிக்கையை உறுதிப்படுத்தும் குறியீடாக முன்வைக்கப்படுகிறது. உறுதியான நம்பிக்கையில் நாம் ஆழமாக வேரூன்றி இருக்கிறோம் என்பதை இது அடையாளப்படுத்துகிறது. வாழ்வின் எதார்த்தச் சூழலில் நாம் சந்திக்கும் துன்ப துயரங்கள், வேதனைகள், போராட்டங்கள் காற்றாகமழையாக, புயலாக, அலையாக, பேரிரைச்சலாக நம்மைத் தாக்கினாலும், நம்பிக்கையில் ஆழமாக நாம் வேரூன்றி இருக்கும்போது, எளிதில் நாம் வெற்றிகொள்கிறோம் என்பதை எடுத்துக்கூறுகிறது.

நான்காவதாக, இடம்பெற்றிருக்கும் லில்லி மலர், பேராயர் அவர்கள் தனது பாதுகாவலர் தூய அந்தோனியாரின்மீது கொண்ட பற்றுதலின் வெளிப்பாடாக தூய அந்தோனியாரின் கரங்களில் இருக்கும் லில்லி மலர்போல, தன் பணியும் வாழ்வும் புனிதம் கொண்டதாக அமைய தன்னையே அர்ப்பணிக்கும் அடையாளமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. தன்னையும், தன்னைச் சார்ந்த இறைச்சமூகத்தையும் இறைவார்த்தையின் அடிப்படையில் நம்பிக்கையில் ஆழமாக வேரூன்றி தூய வாழ்வு வாழ அழைக்கும் பேராயரின் பணிவாழ்வு சிறக்க வாழ்த்துவோம், இறைவேண்டல் செய்வோம் !