news-details
தலையங்கம்
சங்கம் கண்ட மறைத்தளத்தில்-நீவிர் சாதனை படைக்க வருக!

தமிழ் மணம் கமழும் மதுரை மண்ணுக்கு, உலக வரலாற்றின் பக்கங்களில் தனிச்சிறப்பு உண்டு. தமிழினத்தின் மொழி, கலை, கலாச்சாரம், நாகரிகம் எனும் பண்பாட்டுக் கூறுகளின் வளர்ச்சியில் மதுரையின் மாண்பு மேலோங்கியிருக்கிறது. அங்குதான், ‘கீழடி நம் தாய்மடிஎனத் தமிழ் ஆதிக்குடியின் நாகரிக வாழ்வை வைகைக் கரை வசந்தமாய் எடுத்துக்கூறுகிறது. அகத்திய முனிவர் வாழ்ந்த பொதிகை மலையில் பிறந்து, மதுரையில் தவழ்ந்து, வைகையில் வளர்ந்து உலகெங்கும் பெருமை கூறும் இளமைக் குன்றாக் கன்னித் தமிழாம் செம்மொழி தமிழ் - முதல், இடை, கடை என்று முச்சங்கம் கண்ட மூத்த நகரமிது; தமிழ் பண்பாட்டின் தலைநகரம் இது!

பண்டைய தமிழ் இலக்கியப் படைப்புகளில் ஒன்றான பத்துப்பாட்டுத் தொகுப்பில் இடம் பெற்றமதுரைக்காஞ்சிபடைத்த மாங்குடி மருதனார், மதுரையின் பேரழகை வர்ணிக்கின்றபோது...

மழைஆடும் மலையின் நிவந்த மாடமொடு

வையை அன்ன வழக்குடை வாயில்

வகைபெற எழுந்து வானம் மூழ்கி

சில்காற்று இசைக்கும் பல்புழை நல்இல்

ஆறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்

பல்வேறு குழாஅத்து இசைஎழுந்து ஒலிப்ப

மாகால் எடுத்த முந்நீர் போல

முழங்கிசை நன்பணை அறைவனர் நுவல

கயம் குடைந்தன்ன இயம்தொட்டு இமிழிசை

மகிழ்ந்தோர் ஆடும் கலிகொள் சும்மை

ஓவுக் கண்டன்ன இருபெரு நியமத்து!’

(அடிகள் 355-365)

என்னும் பாடல் வரிகளில், மதுரையில் தெளிந்த நீர் உடைய அகழி, விண்ணை முட்டும் உயர்ந்து நிற்கும்  கட்டடங்கள், பழமையும் வலிமையும் கலை நுணுக்கமும் தெய்வத்தன்மையும் கொண்ட அழகிய வாயில்கள், மேகங்கள் உலாவும் மாட மாளிகைகள், இடைவிடாது ஓடுகின்ற வைகை ஆறு, தென்றல் காற்று உலா வரும் அகன்ற தெருக்கள், பல்வேறு மொழி பேசும் மக்கள், பெருங்காற்று புகுந்த கடலொலிபோல ஒலிக்கின்ற முரசின் முழக்கம், இன்னிசை சுமந்து வரும் தென்றல், அதனால் ஆர்ப்பரிக்கும் மக்கள்கூட்டம்... எனத் தொன்றுதொட்டு வரும் மதுரை மண்ணின் மண்வாசனையையும் மக்களின் நேசத்தையும் கலை, பண்பாட்டுக் கூறுகளையும் கண்முன்னே அழகுறப் படைக்கிறார்.

மதுரையின் வளமையைக் கூறும்அல்லி அரசாணி மாலைஎன்னும் இலக்கியப் படைப்பு...

மாடு கட்டிப் போரடித்தால்

மாளாது செந்நெல் லென்று

ஆனைகட்டிப் போரடிக்கும்

அழகான தென்மதுரை!’

என்று பாடுகிறது. பரந்து விரிந்த தமிழ்க்குடியின் நிலப்பரப்பை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களில், பாண்டிய நாட்டின் தலைநகராக அமைந்து, வணிகம் செழித்த இம்மாமதுரைகிழக்கின் ஏதென்ஸ்என்றே வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது. கடம்ப வனம், கடம்பக்காடு, கடம்ப நாடு என கம்பனின் கவி கண்ட இந் நிலம், வரலாற்றுச் சிறப்புமிக்கக் கோவில்களையும் நினைவுச் சின்னங்களையும் ஆலயங்களையும் மசூதிகளையும் கொண்டு மதநல்லிணக்கத்தின் சிறப்பான தளமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய மொழி, பண்பாடு, சமயத் தளங்களில் தனித்துவம் கண்டு உலக வரலாற்றில் சிறப்பிடம் கொண்ட இம்மாமதுரை, உலகத் திரு அவை வரலாற்றிலும் மிகச் சிறப்புக்குரிய இடம்பெற்றிருக்கிறது.

மதுரை மிஷன்என சேசு சபையார் மறைப்பணி மேற்கொண்ட மையத் தளமிது. ‘தத்துவ போதகர்என்று அழைக்கப்படும் அருள்பணியாளர் இராபர்ட் தெ நொபிலி, ‘தேம்பாவணிகாப்பியம் படைத்த வீரமாமுனிவர், மறவ நாட்டின் மாணிக்கமாகச் செந்நீர் சிந்தியஓரியூரின் ஒளிவிளக்குஅருளானந்தர் என நீண்டதொரு மறைப்பணியாளர்களின் பாதம் கண்ட புண்ணிய பூமி இது.

500 ஆண்டுகளுக்கும் மேலாக, கிறித்தவத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட இம்மறைத்தளம் தமிழ் வளர்த்தது; மறை வளர்த்தது; மக்களின் மாண்பினைக் காத்தது. ஏறக்குறைய 80 ஆண்டுகளாக உயர்மறைமாவட்ட நிர்வாகக் கட்டமைப்பைக் கண்டிருக்கும் மதுரை உயர்மறைமாவட்டம் பேராயர் ஜான்பீட்டர் லியோனார்டு, பேராயர் ஜஸ்டின் திரவியம், பேராயர் கஷ்மீர் ஞானாதிக்கம், பேராயர் மரியானுஸ் ஆரோக்கியசாமி, பேராயர் பீட்டர் பெர்னாண்டோ, பேராயர் அந்தோனி பாப்புசாமி என ஆறு பேராளுமைகளைக் கண்டிருக்கிறது.

அந்த வரிசையில் ஏழைகளின் பங்காளனாய், எளியோரின் பேராதரவாய், உண்மையின் சுடரொளியாய், அன்பின் அமுதமாய், நீதியின் போராளியாய், நிர்வாகத்தில் தனித்துவமாய், திரு அவைச் சட்டத்தில் தலைசிறந்தவராய், இறைஞானத்தில் தீங்கனியாய், இறைநம்பிக்கையில் பெரும் ஆழியாய் அறியப்படும் பாளை மறைமாவட்ட ஆயரும், இம்மதுரை உயர்மறைமாவட்டத்தின் தற்போதைய திருத்தூது நிர்வாகியுமான மேதகு முனைவர் அந்தோனி சாமி சவரிமுத்து அவர்கள் நல்லாயன் இயேசுவின் வழித் தோன்றலாய், இம்மறைத்தளத்தின் தலைமகனாய்ஏழாவது பேராயராகப் பணிப்பொறுப்பேற்பது திரு அவைக்குக் கிடைத்த பெரும்பேறு!

2025 ஜூலை 5, அதிகாலைப் பொழுதில் வைகறையின் வசந்தம் வளமாக வீசியபோது எவ்விதச் சலனமும் இன்றி, அந்த நாள் தமிழ்நாடு திரு அவைக்கும் மதுரை உயர்மறைமாவட்டத்திற்கும் மகிழ்ச்சியான நற்செய்தியைக் கொண்டு வந்தது. வத்திக்கான், பாளையங்கோட்டை, மதுரை என முத்தலங்களில் முழங்கப்பட்ட அந்த நற்செய்தி, இந்த எளிய பணியாளரை இறைவன் உன்னதப் பணிக்கு உயர்த்திய மாண்பினைக் கூறியது.

கல்விப் பணி, மருத்துவப் பணி, சமூகப்பணி, தமிழ் வளர்த்த இலக்கியப் பணி, நல்மனம் கொண்டோர் ஒன்றிணையும் மத நல்லிணக்கப் பணி... எனப் பல பணிகளில் வளர்நிலை கண்டு வரும் இம்மறைத்தளம், இப்புதிய பேராயரின் சீரிய சிந்தனையாலும் பெரும் உழைப்பாலும் பார் போற்றிட, பணிகள் பல கண்டிட, மக்களின் சமூக, ஆன்மிக, வாழ்வியல் தளங்களில் ஏற்றம் கொண்டு வரும் என்பதே எம் நம்பிக்கைஎல்லாரும் மாண்புடன் வாழ, மக்கள் மையப் பணிகளை முன்னெடுக்க வரும் புதிய பேராயரை வாழ்த்துகிறோம்! வணங்குகிறோம்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்