news-details
சிறப்புக்கட்டுரை
பேரழிவின் கடிகாரம்

அணு விஞ்ஞானிகள், உலகமெங்கும் நடக்கும் அணு ஆராய்ச்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளைப் பதிவு செய்ய ஒரு செய்தி இதழைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். அதில்பேரழிவின் கடிகாரம் (Dooms day Clock) என்ற ஒரு முக்கியமான தகவல் இடம் பெறும். மனிதன் தனது சுயநலத்தால், பேராசையால், இன- மதவெறி போன்ற வெறுப்பின் உந்துதலால், அதிகாரப் போட்டிகளால் நடத்தும் மோசமான நடவடிக்கைகளால் இந்த உலகம் முழுமையாக அழிந்துபோவதற்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்பதை அந்தக் கடிகாரம் அறிவித்துக் கொண்டே இருக்கும்.

உலகம் முழுவதும் அணு ஆயுதப் பீதியில் வாழ்ந்திருந்த 1947-ஆம் ஆண்டு இக்கடிகாரம் உருவாக்கப்பட்டது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஜப்பானில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டுகள் அமெரிக்க இராணுவத்தால் முதன்முதலில் வீசப்பட்டன. 1949-இல் சோவியத் இரஷ்யா தனது அணு ஆயுதங்களைத் தயாரித்தது. 1952-இல் பிரிட்டனும், 1960-இல் பிரான்சும், 1964-இல் சீனாவும் தங்களுக்கான அணு ஆயுதங்களைத் தயாரித்துக்கொண்டன. 1974-இல் இந்தியாவும், 1990-இல் பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகளாகத் தங்களை உருவாக்கிக்கொண்டன. தற்போது இஸ்ரயேலிடமும் வடகொரியாவிடமும் அணு ஆயுதங்கள் இருப்பதாகத் தெரிய வருகின்றது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைப் பெற்றிருப்பதாகவும், அந்நாடு விரும்பினால் உடனடியாக அணு ஆயுதங்களைத் தயாரிக்க முடியும் என்றும் கூறப்படுகின்றது.

தற்போது உலகம் முழுவதும் பிரயோகிப்பதற்குத் தயாராக அணு ஆயுத நாடுகளில் சுமார் 20,000 அணு ஆயுதங்கள் தயாராக இருப்பதாகத் தெரியவருகிறது. இந்த அணு ஆயுதங்களால் 800 மில்லியன் மக்களைக் கண்மூடி கண் திறப்பதற்குள் தடயங்களே இல்லாமல் முழுமையாக அழித்துவிட முடியும். அதன் தொடர்ச்சியாகப் பூமிப்பந்து முழுவதும் பேரிருளில் மூழ்கும். உலகின் நிலப்பரப்பு முழுவதும் தாவரங்கள் உள்பட உயிரின் அடையாளங்களே இல்லாமல் உறைபனி மூடி, ஆண்டுகள் கணக்கில் கொடுங்குளிர்காலமாகவே இருக்கும்.

1945-லிருந்து அணு ஆயுதம் பல நாடுகளில் இருந்தாலும், அந்த நாடுகளின் ஆட்சியாளர்களும் இராணுவத் தளபதிகளும் பொதுவெளியில் தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்கள் பற்றிப் பேசுவதில்லை. அப்படிப்பட்ட பேரழிவுக்கான ஆயுதங்கள் தங்களிடம் இருக்கிறது என்று கூறுவதற்குக்கூட பல நாடுகளின் தலைவர்கள் தயங்கிய நாள்களும் உண்டு. இந்த ஆயுதங்களினால் ஏற்படக்கூடிய பேரழிவை அறிந்திருந்த பல நாடுகள், தாங்கள் அணு ஆயுதங்களால் தாக்கப்பட்டால் மட்டுமே தங்களது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்று தங்களுக்குள் ஒப்பந்தமும் செய்துள்ளார்கள் (No first use agreement).

இரண்டாவது, உலக யுத்தத்திற்கு பின் ஒரு நாடு மற்றொரு நாட்டின்மீது தாக்குதல் நடத்துவதற்கு முன், ஐக்கிய நாடுகள் சபைக்குத் தாக்குதலுக்கான காரணங்களைத் தெரிவித்து, பாதுகாப்புக் கவுன்சிலின் அனுமதி பெறவேண்டும் என்றெல்லாம் விதிகளை நிறைவேற்றி வைத்துள்ளார்கள். ஆனால், அண்மையில் இப்படிப்பட்ட நடைமுறைகளையெல்லாம் எந்த நாடும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள் தாங்கள் நினைத்தால், தேவைப்பட்டால் தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயங்கமாட்டோம் என்று இப்போதெல்லாம் தங்களது எதிரி நாடுகளை மிரட்டுவது சாதாரணமாகிவிட்டது. சில நாள்களுக்கு முன்னர் பாகிஸ்தானிய இராணுவ செனரல் இப்படிப் பகிரங்கமாய்ப் பேசியதை உலகம் முழுவதும் பார்த்தது. தான் சரியான நேரத்தில் தலையிட்டிராவிட்டால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு பெரிய அணு ஆயுதப் போர் நடந்திருக்கும் அன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறிவருவதை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. வடகொரிய அதிபர் வாரத்திற்கு ஒருமுறை தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களைத் தென்கொரியாவின் மீது ஏவ எப்போதும் தயார் என்று கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இரஷ்ய அதிபர் புட்டின்கூட, உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி உதவி செய்யும் ஐரோப்பிய நாடுகள்மீது அணு ஆயுதங்கள் உள்பட அனைத்துவிதமான தாக்குதல்களையும் தொடர இரஷ்யா தயங்காது எனப் பகிரங்கமாகப் பேசினார்.

1991-இல் சோவியத் இரஷ்யா பல நாடுகளாகச் சிதறுண்டபோது, பேரழிவின் கடிகாரம் பேரழிவுக்கு 17 நிமிடங்கள் இருப்பதாகக் காட்டியது. கடிகாரம் தோற்றுவிக்கப்பட்ட பின்னர், பேரழிவுக்கான இடைவெளி இவ்வளவு அதிகமாக அதற்கு முன்பும் பின்பும் என்றும் இருந்ததில்லை. தற்போது இக்கடிகாரத்தின் நேரத்தைக் கணக்கிடும் பணியில் உலகம் முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 18 விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர். டெல்லி ..டி. பேராசிரியர் உள்பட தெற்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள் மூன்றுபேர் தற்போது பேரழிவுக்கான நேரத்தைக் கணக்கிடும்போது புவி வெப்பமயமாகி வருவதால் அதனால் ஏற்படும் பருவநிலை மாற்றங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்கின்றனர். மேலும், தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்படுகின்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (Artificial Intelligent) மற்றும் உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology) ஆகியவற்றின் தாக்கங்களையும் கருத்தில் கொள்கின்றனர். இந்தப் புதிய தொழில்நுட்பங்கள் யுத்தங்களின் அத்தனை பரிணாமங்களையும் தலைகீழாக மாற்றியுள்ளன. இவற்றையெல்லாம் ஆராய்ந்து தற்போதைய சூழ்நிலைகளின் அடிப்படையில் உலகின் பேரழிவுக்கு இன்னும் 89 வினாடிகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 2024-இல் 90 வினாடிகளாக இருந்ததை 2025-இல் 89 வினாடிகளாக மாற்றியுள்ளனர். கடிகாரம் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து இதுதான் நமக்கும் பேரழிவுக்கும் இடையே மிகக்குறைந்த நேரம். பேரழிவுக்கான கடிகாரத்தின் மூலம் விஞ்ஞானிகள் தருகின்ற எச்சரிக்கை அறிவிப்பின் அபாயத்தை உலக நாடுகள் இன்னும் முழுமையாக உணரவில்லை என்பதே உண்மை.

இரஷ்யா-உக்ரைன் போர், பாலஸ்தீனம்- காசாவின் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் இன அழிப்புத் தாக்குதல்கள், ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடத்தும் கூட்டுத் தாக்குதல்கள், தன் இருப்பினைத் தக்கவைக்க ஈரான் ஏவுகணைகள் மூலம் நடத்தும் பதில் தாக்குதல்கள், ஐந்து நாள்கள் மட்டுமே நடந்த இந்தியா-பாகிஸ்தான் மோதல்கள், சீனாவுக்கும்-தைவானுக்கும் இடையே எந்த நேரத்திலும் வெடிக்க இருக்கும் யுத்தம், சீனப் பெருங்கடலில் கடல் எல்லைகளை நிர்ணயிப்பதில் சீனாவுக்கும்-ஜப்பானுக்கும், சீனாவுக்கும்-பிலிப்பைன்ஸ் நாட்டுக்கும் இடையே தினசரி நிகழ்வாக நடக்கும் மோதல்கள், அண்டை நாடுகளை அன்றாடம் அச்சுறுத்தும் வடகொரிய நாட்டின் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைப் பரிசோதனைகள், மோதல்கள் என்று உலகம் முழுவதும் இருக்கின்ற யுத்தப் பதற்றம் எந்த நேரத்திலும் மூன்றாம் உலகப்போராக வெடிக்கும் அபாயம் இருப்பதாகச் சர்வதேச புவி அரசியல் ஆய்வாளர்களும் அரசியல் நோக்கர்களும் கருதுகின்றனர். அப்படி ஒரு பெரும்போர் ஏற்படும்போது, அணு ஆயுத யுத்தம் தவிர்க்கமுடியாத பேரழிவாக உருவாகும் என்பதில் ஐயமில்லை. இதுவரை யுத்தங்களைப் பற்றிச் சிந்தித்திராத நாடுகள்கூட, அப்படி ஒரு யுத்தம் வந்தால் என்ன செய்வது என்று திட்டமிடத் துவங்கியுள்ளன.

உலக நாடுகள் அனைத்தும் நடப்பு நிதி ஆண்டில் தங்களது பாதுகாப்புக்கான இராணுவப் பட்ஜெட்டை அதிகப்படுத்தியுள்ளன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடே தேவையில்லை என்று முடிவெடுத்திருந்த ஜப்பான், கடந்த வாரம் ஓர் ஏவுகணைப் பரிசோதனையை வெற்றிகரமாக நடத்திமுடித்துள்ளது. அண்மையில் நடந்தநேட்டோநாடுகளின் உச்சி மாநாட்டில் அனைத்து உறுப்பினர் நாடுகளும் இராணுவப் பாதுகாப்பு நிதிக்காகத் தங்களது ஒட்டுமொத்தத் தேசிய உற்பத்தியில் கூடுதலாக ஐந்து விழுக்காட்டினை ஒதுக்குவதாக அறிவித்துள்ளன. அணு ஆயுதங்களைத் தாங்கிச்சென்று தாக்கும் 12 அமெரிக்கத் தயாரிப்புஎஃப்-35’ விமானங்களை உடனடியாக வாங்கப்போவதாகநேட்டோஉச்சி மாநாட்டில் பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

எரிகிற வீட்டில் அள்ளியது அனைத்தும் ஆதாயம் என்ற நிலையில் இந்தியாவையும் உலகின் ஆயுதத் தொழிற்சாலைகளில் ஒன்றாக மாற்றுவதற்கு மோடி அரசு பெரும் முயற்சிகளை முன்னெடுக்கிறது. கடந்த நிதி ஆண்டில் இந்தியா 50,000 கோடி பெறுமான ஆயுதங்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்துள்ளது என்றும், வரும் நாள்களில் அதனை இலட்சம் கோடியாக உயர்த்த இருப்பதாகவும் நமது பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் பெருமைப்பட்டுக்கொள்கிறார்.

இப்போதெல்லாம் யுத்தங்களை நடத்துவதற்குப் போர்வீரர்களும், பீரங்கிகளைத் தாங்கிச் செல்லும் டேங்குகளும் தேவையில்லை; தற்போது நடப்பது நட்சத்திர யுத்தம் (Stars wars). ‘ட்ரோன்ஸ்என்றழைக்கப்படும் ஆளில்லாத விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் தாண்டி ஆயிரக்கணக்கான மைல் தூரங்களை, ஒலியைவிட வேகமாகச் சென்று எதிரியின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள், எதிரி நாட்டின் ரேடார்களின் திரைகளிலேயே தெரியாமல் தங்களையே மறைத்துக் கொண்டு பறக்கும் நவீன ஜெட் விமானங்கள், 35 மணி நேரம் இடைவிடாமல் பறக்கும் விமானங்கள், நடுவானிலேயே எரிபொருளை மற்றொரு விமானம் மூலம் நிரப்பும் வசதி, அணு ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு கடலுக்கடியில் எதிரிகளின் கண்களில் படாமல் ஆயிரக்கணக்கான மைல் பயணம் செய்யக் கூடிய நீர்மூழ்கி கப்பல்கள்... என்று கற்பனையில்கூட எண்ணிப்பார்த்திராத அதிசயங்களையெல்லாம் சாத்தியமாக்கிக் கொடுத்திருக்கும் நவீனத் தொழில்நுட்பங்களால் உலகம் அழிவின் விளிம்பில் நிற்கிறது. எதிரி நாட்டின் இராணுவத் தளங்களை அழித்து, அந்நாட்டின் இராணுவ வீரர்களைச் சரணடையச் செய்வது என்பதெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம் எதிரிநாட்டு அரசின் தலைவர்களை, அந்நாட்டின் முக்கிய இராணுவத் தளபதிகளை, யுத்தத் தளவாடங்களைத் தயார் செய்து தரும் நிபுணர்களைக் குறிவைத்து, அவர்கள் இருக்கும் இடங்களிலேயே ஏவுகணைகளை வீசி அழிப்பது சாதாரணமாகிவிட்டது. ஈரான் நாட்டின் முக்கியமான தளபதிகளையும் அணு விஞ்ஞானிகளையும் குறிவைத்துக் கொலை செய்த இஸ்ரேல் பிரதமர், அந்நாட்டின் அதிகார உச்சமானகாமினியைக் கொலை செய்வதோடுதான் யுத்தம் முடியும்என்று கொக்கரித்ததை நாம் எல்லாரும் கேட்டுக் கொண்டுதானே இருந்தோம்!

காமினி எங்கே ஒளிந்திருக்கிறார்? என்று எனக்குத் தெரியும். அவரைக் கொல்ல இஸ்ரேலை தான் அனுமதிக்கவில்லைஎன்று பேசிய டிரம்பின் ஆணவத்தை யாரும் மறக்கமுடியுமா? இதைப் போன்ற ஒரு நிலைமை எல்லா நாடுகளின் தலைவர்களுக்கும் நாளை வரலாம் அல்லவா?!

ஒரு நாட்டின் பூகோள நிலப்பரப்பு, அதன் மக்கள்தொகை, அந்நாட்டின் இயற்கை வளங்கள், அதன் தொன்மையான நாகரிகம், பாரம்பரியமான கலாச்சாரம் ஆகியவை அந்நாட்டின் தகுதியினையும் பலத்தையும் நிர்ணயிப்பதில்லை. அதனுடைய விஞ்ஞான வளர்ச்சியும் தொழில்நுட்ப மேன்மை மட்டுமே அந்நாட்டின் மேலாண்மை உயர்வுக்குக் காரணம் என்பதே இன்றைய உலகின் எதார்த்தம். ஈரானுடைய இராணுவப் பலத்துக்கும் இயற்கை வளத்துக்கும், அதன் நீண்ட நெடிய வரலாற்றுப் பெருமைக்கும் முன்னால் இஸ்ரேல் ஒப்பிடவே தகுதியில்லாத நாடு. ஆனால், இஸ்ரேல் தன்னிடம் இருக்கும் விஞ்ஞானத் தொழில்நுட்ப வசதிகளால் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள ஈரானை ஆட்டிப்படைக்கின்றது. பொருளாதாரப் பலம் மிக்க சக இசுலாமிய நாடுகள்கூட அமெரிக்காவுக்கும்-இஸ்ரேலுக்கும் பயந்து ஈரானுக்கு உதவிட முன்வரவில்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை? இந்தப் பயங்கரத்தாக்குதல்கள் நடைபெற்றபோது டிரம்பினுடைய பெயரைச் சமாதானத்திற்கான நோபல் பரிசுக்கு ஈரானின் அண்டை நாடான பாகிஸ்தான் பரிந்துரைப்பது காலத்தின் கொடுமை என்பதைத் தவிர்த்து, வேறென்ன கூறுவது?

ஒரு சாதாரண கிராமப் பஞ்சாயத்துக்கு இருக்கும் அதிகாரமும் செல்வாக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கு இல்லாமல் போனது மிகப்பெரிய துரதிருஷ்டம்! நேரு, குருசேவ், கென்னடி, டிட்டோ, நாசர் போன்ற உலகம் அறிந்த தலைவர்கள் இன்று இல்லை என்பது நம் தலைமுறைக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு. தவறு செய்கின்ற நாடுகளைக் கண்டிக்கவும், அதன் தலைவர்களின் குற்றங்களைச் சுட்டிக்காட்டவும், மோதல்களில் இருக்கும் நாடுகளின் தலைவர்களை அழைத்து சமரசம் பேசி சமாதானத்திற்கு வழிகாணவும் உலகம் முழுவதும் எந்த அமைப்பும் தலைவர்களும் இல்லை என்பது எவ்வளவு பெரிய சோகம்!

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் (Security council) இருக்கின்ற அதிகாரம் மிக்க உறுப்பினர்களில் பெரும்பாலோர் ஆயுதத் தயாரிப்பாளர்களாகவும் விற்பனையாளர்களாகவும் இருக்கிறார்களே... இந்தக் கொடுமையை எங்கே போய் கூறுவது? அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுவது அனைத்துமே அப்பட்டமான பொய் என்று தெரிந்த பின்னரும் கூட அதனைப் பொய் என்று தைரியமாகக் கூறும் பேராண்மை உலகில் எந்தத் தலைவருக்கும் இல்லையே!

காசாவில் குண்டடிபட்டுச் சிதைந்துகிடக்கும் பிஞ்சுக் குழந்தைகளையும், ஒரு நேர உணவுக்காகச் செத்துமடியும் மக்களையும் ஆயிரக்கணக்கில் பார்த்த பின்னரும்கூட உலக மனச்சாட்சியின் குரல் ஓங்கி ஒலிக்கவில்லையே! பேரழிவை ஏற்படுத்தும் ஏவுகணைத் தாக்குதல்களைச் சினிமாவில் வரும் சண்டைக் காட்சிகள்போல காண்பித்து, அந்த ஏவுகணைகளின் தொழில்நுட்பச் சிறப்புகளை விவாதப் பொருளாக்கி மக்களின் மனத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பரிதாப நிலைகுறித்துக்கூட சிந்திக்கவிடாமல், ஒட்டுமொத்தச் சமூகத்தின் மனச்சாட்சியையும் மழுங்கடிக்கும் வேலையைத் தினசரி அரங்கேற்றும் ஊடகங்கள் செய்வது வேசித்தனம்தானே!

கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளாமல் மேலும் மேலும் தவறுகளைச் செய்துகொண்டிருப்பது அறிவீனம் அல்லவா! ஒவ்வொரு காலத்திலும் பேரழிவுகளை ஏற்படுத்திய யுத்தங்களால் ஏதாவது நன்மை ஏற்பட்டது உண்டா? இன்று ஈரான் மீது கொடுமையானÀ2குண்டுகளை வீசிவிட்டு ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் முழுமையும் அழித்துவிட்டோம் என்று அறிவித்த டிரம்பின் குரல் அடங்குவதற்குள், கத்தாரில் அமெரிக்க இராணுவத்தளங்களை ஈரான் தாக்கியது. தங்களது அணு ஆராய்ச்சிச் சொத்துகள் அனைத்தும் பத்திரமாகப் பாதுகாப்பாக இருக்கின்றன என அறிவிக்கின்றது. இப்படித்தான் 2001-இல் ஆப்கானிஸ்தானைத் தாக்கி தாலிபன்களை ஒழித்துவிட்டோம் என்று அறிவித்தது. இருபது வருடங்களுக்குப் பின்னர் அதே தாலிபன்களிடம் அந்நாட்டை அமெரிக்கா ஒப்படைத்தது. 2003-இல் ஈராக்கில் பேரழிவுக்கான ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி அதன்மேல் போர் தொடுத்தது. அதைப்போல லிபியாவைக் காப்பாற்றி, அங்கே சனநாயக ஆட்சியை உருவாக்கப்போகிறோம் என்று போர்தொடுத்தது. ஆனால், அமெரிக்கா நடத்திய போர்களால் (வியட்நாம் உள்பட) அவர்கள் விரும்பியதை எங்கேயும் சாதிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

இந்த நிதி ஆண்டில் மட்டும் உலக நாடுகள் யுத்தங்களில் செலவுசெய்த பணம் சுமார் மூன்று டிரில்லியன் டாலர். தற்போது நடந்த தாக்குதலில் இஸ்ரேல் அனுப்பிய ஓர் ஏவுகணைக்கான செலவு இரண்டு மில்லியன் டாலர். இப்போது நடந்த ஐந்து நாள் சண்டைக்கு நாம் செலவுசெய்த பணம் 50,000 கோடி. இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் வரக்கூடிய நாள்களில் இந்தியாவின் இராணுவச் செலவு 20 பில்லியன் டாலராக இருக்கும் என்று அரசு மதிப்பிட்டுள்ளது.

நாம் இப்போது பாகிஸ்தானை மட்டும் எதிர்கொள்ளவில்லை. பாகிஸ்தானுக்குச் சீனா வாரி வழங்கும் ஆயுத உதவிகளையும் தொழில்நுட்பங்களையும் சீன விண்கோள்கள் தரும் இரகசியத் தகவல்களையும் சேர்த்துச் சமாளிக்கவேண்டும். சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஏற்பட்டுள்ள புதிய நெருக்கமும் உறவும் நமக்கிருக்கின்ற மிகப்பெரிய சவால். பத்து பில்லியன் டாலருக்கு நாம் வாங்கிய பிரான்சின் இரபேல் விமானத்தைச் சீனாவின் ஸ்பைட்டர் ஜெட் சுட்டு வீழ்த்தியது சர்வதேச இராணுவத் தாள்வாரங்களில் மிக முக்கியமான பேசும்பொருளாக மாறியுள்ளது.

இரபேலின் பங்கு மதிப்புகள் பங்குச் சந்தையில் வேகமாகச் சரிந்துவிட்டது. நாம் எவ்வளவு ஆயுதங்களை வாங்கிக் குவித்தாலும், நாம் நினைத்தபடி பாகிஸ்தானைப் போரிட்டு வெற்றிபெற முடியாது. அது இறுதியில் அணு ஆயுதப்போராகத்தான் முடியும். யுத்தங்களைத் துவங்குவது எளிது. ஆனால், துவங்கிய யுத்தங்கள் முடிவுறுவது கடினம். யுத்தங்களினால் அழிகின்றவர்கள் அனைவரும் பெண்களாய் குழந்தைகளாய் ஏதுமற்ற ஏழைகளாகவே இருப்பதுதான் நிதர்சனம்!

புதியதோர் உலகம் செய்வோம்... கெட்ட போரிடும் உலகத்தினை வேரோடு சாய்ப்போம்என்ற புரட்சிக் கவிஞரின் வார்த்தைகளை இந்த உலகம் கவனத்தில் கொள்ளுமா? பேரழிவை நோக்கி வேகமாக நகரும் பேரழிவின் கடிகார முள்களைத் தடுத்து நிறுத்துமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!