திருப்பலி முன்னுரை
செபத்தின்
முக்கியத்துவத்தையும்
மகத்துவத்தையும் பற்றிச் சிந்திக்க ஆண்டின் பொதுக்காலம் 17-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவே செபம். கடவுளோடு தங்குவதும், அவர் பேசுவதைக் கேட்பதும், அவரது உடனிருத்தலை உணர்வதும், கடவுளைச் சுவைப்பதும், நாம் இறைவனோடு இருக்கவேண்டும் என்று விரும்பி நமது எண்ணத்தையும் இதயத்தையும் இறைவன்பக்கம் திருப்புவதும் செபமாகும். புனித ஜான் மரிய வியான்னி, “கடவுள் உலகை ஆள்கின்றார்; செபிக்கத் தெரிந்த மனிதனோ கடவுளையே ஆள்கின்றார்” என்கிறார்.
செபத்தால் ஆகாதது எதுவுமே இல்லை. இயேசு கற்றுக்கொடுத்த ‘விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே’ என்ற செபம் இயேசு கற்றுத்தந்த செபங்களுக்கெல்லாம் முதன்மையான செபமாகக் கருதப்படுகிறது. இச்செபத்தில் நாம் ஒரு குழந்தையைப்போல ‘தந்தை’ என்ற உரிமையுடன் கடவுளிடம் கேட்க வேண்டும் என்றும், கடவுள் கொடுப்பார் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு செபிக்க வேண்டும் என்றும், இறைத்திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து வாழவேண்டும் என்றும் இயேசு கூறுகின்றார். ஆகவே, அவர் நமக்குக் கற்றுத்தந்த செபத்தில் எப்போதும் நிலைத்திருந்து, செபத்தால் வெற்றி காண வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை:
நம் கடவுள் இரக்கமுள்ள தந்தை, பரிவுள்ள கடவுள். நம்முடைய செயல்களின்படி தண்டிக்காமல் தமது பேரிரக்கத்தால் நம்மைக் காப்பவர். நாம் அனைவரும் வாழவேண்டும் என்று விரும்பும் உன்னதர். மன்னிப்பைத் தடையின்றி தாராளமாகத் தருபவர் என்று கூறி இறைவனின் இரக்கத்தை உணர அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை:
கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பினால் நம்முடைய குற்றங்களைப் பெரிதுபடுத்தாமல் தமது இரக்கத்தால் நம்மை வாழ வைக்கிறார். சிலுவையில் தாம் சிந்திய இரத்தத்தால் நம் அனைவரையும் மீட்டு தம் சொந்த பிள்ளைகளாக்கியுள்ளார். அளவில்லாது மன்னித்து, நிபந்தனையின்றி நம்மை அன்பு செய்து காக்கும் இறைவனின் பேரன்பைக் கூறும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. அன்பின்
இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் அழைத்த உம்மில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழவும், செபத்தில் நிலைத்திருந்து உமது பணியைத் துடிப்புடன் செய்யவும், தேவையான மனவலிமையைத் தந்து காத்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. காத்து
வழிநடத்தி வரும் ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் தேவைக்காக மட்டும் செபிப்பவர்களாக இல்லாமல், எங்கள் தேவையே செபமாக மாறவும், எப்போதும் செபத்தில் நிலைத்திருந்து உம் அன்பைச் சுவைக்கவும் தேவையான அருள்வரங்களை எமக்குத் தந்து வழிடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அன்பின்
ஆண்டவரே! நீர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்த செபத்தின் பொருள் உணர்ந்து செபிக்கவும், அந்தச் செபம் உணர்த்தும் கருத்துகளை வாழ்வாக்கவும், மனச்சோர்வு ஏற்படுகின்ற நேரத்தில் நம்பிக்கையோடு தொய்வின்றிச் செபிக்கவும் தேவையான மனவலிமையை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அன்பின்
இலக்கணமே எம் இறைவா! எம் மறைமாவட்டத்திலும் பங்கிலும் குடும்பத்திலும் உள்ள குழந்தைகள் அனைவரும் இளம் வயதிலிருந்தே உம்மீது நம்பிக்கை கொண்டு வாழவும், கடவுளைப் பற்றிய அறிவில் நாளும் வளரவும் தேவையான ஞானத்தை எமது குழந்தைகளுக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.