புனித இஞ்ஞாசியார் தனது நண்பர் புனித சவேரியாரை இந்தியாவிற்கு நற்செய்திப் பணிக்கு அனுப்பியபோது அவர் கூறிய வார்த்தைகள்: “சவேரியாரே செல்லுங்கள், உலகம் முழுவதையும் இறைவன்பால் பற்றியெரியச் செய்யுங்கள்.” புனித சவேரியாரின் நற்செய்தி அறிவிப்புப்பணி எவ்வளவு பெரிய மாற்றத்தை உலகமெங்கிலும் கொணர்ந்தது என்பதையும், அவரது நற்செய்தி அறிவிப்பே ஆயிரக்கணக்கான மறைப்பணியாளர்களைப் பெறுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது என்பதையும் நாம் மறுக்க இயலுமோ? இயேசு கிறிஸ்துவின்மேல் கொண்ட பேரார்வத்தால் வெறும் பத்து ஆண்டுகளில் தனது நற்செய்தி அறிவிப்புப்பணியால் இந்த உலகையே புரட்டிப்போட்டவர் புனித சவேரியார்.
உலகெங்கும்
சென்று நற்செய்தியை அறிவிப்பது நம் கடமை. திருத்தந்தை பிரான்சிஸ், ‘நற்செய்தி அறிவிப்பு என்பது திரு அவையின் அடிப்படை அழைப்பு’ என்றும், ‘திரு அவையின் தனி அடையாளம்’
என்றும், ‘திரு அவையின் அனைத்துப் பணிகளுக்கும் முன்னோடி’
என்றும் கூறுகிறார். மேலும் அவர், “நற்செய்தி அறிவிப்புப்பணியே நம் திரு அவையின் இதயமாக இயங்குகிறது” என்கிறார்.
நற்செய்தி அறிவிப்புப்பணி என்பது நாம் இயேசுவுடன் கொண்டிருக்கும் உறவிலே மலரக்கூடியது. ஆகவே, இயேசுவோடு உறவில் வாழும் நாம் அனைவருமே நற்செய்தி அறிவிக்க அழைக்கப்பட்டிருக்கின்றோம்.
ஆண்டின்
பொதுக்காலத்தின் 14-ஆம் ஞாயிறை இன்று தொடங்குகின்றோம். இயேசு தரும் அழைப்பை ஏற்று, மேற்கொள்ள வேண்டிய நற்செய்தி அறிவிப்புப் பணியைப் பற்றி இன்று சிந்திப்போம்.
நற்செய்தி
அறிவிப்பு என்பது வற்றாத உயிருள்ள ஒரு நீரூற்றாக நம் உள்ளத்தில் பாய்ந்தோடவேண்டும். அது நம் உள்ளத்தைப் பற்றி எரியச் செய்யவேண்டும் (காண். எரே 20:9). இப்பணி கிணற்று நீராய்த் தேங்கிப்போய்விடாமல் ஆற்றுநீராய்ப் பெருக்கெடுத்துப் பாய்ந்தோட வேண்டும்; அதன் பயன் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் இயேசுவின் முழுவிருப்பம். எனவேதான், எல்லா ஊர்களுக்கும் குறிப்பாக, பிற இனத்து மக்களுக்கும் நற்செய்தி பறைசாற்றப்பட வேண்டும் என்பதற்காக 72 பேரை நியமிக்கிறார் (லூக் 10:1). 72 சீடர்களை
நற்செய்தி அறிவிக்க அனுப்புவதற்குமுன் மூன்று மிக முக்கிய அறிவுரைகளை நிபந்தனைகளாக இயேசு வழங்குகிறார்.
முதல்
நிபந்தனையாக, ‘ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதுபோல் தம் சீடர்களை அனுப்புகிறார் இயேசு’
(10:3). இயேசுவின் இவ்வாக்கு, நற்செய்தி அறிவிப்புப்பணியில் ஏற்படும் இடரையும் எதிர்ப்பையும் முன்காட்டுகிறது. இயேசுவின் சீடத்துவம் சவால் நிறைந்தது என்பது இங்குத் தெளிவுபடுத்தப்படுகிறது. வலிகளுக்கு மத்தியிலும் நற்செய்தி அறிவிப்புப்பணி என்பது நிறுத்தப்படாமல் தொடர்ந்துகொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் இயேசு நம்முன் வைக்கும் கனவு, அழைப்பு.
மறவ
நாட்டு மண்ணில் நற்செய்தி அறிவித்து உயிர்த்தியாகம் செய்த புனித அருளானந்தர், நாஞ்சில் மண்ணில் உயிர்த் தியாகம் செய்த புனித தேவசகாயம் போன்றோரின் தியாகமிக்க வாழ்வு நற்செய்தியை எம்முறையில் அறிவிப்பது? அதனை எவ்வழியில் வாழ்ந்து காட்டுவது? எப்படி அதற்குச் சான்று பகர்வது? என்பதற்கு வழிகாட்டி நிற்கிறது. இவர்களின் புனிதமிக்க வாழ்வு ஆயிரக்கணக்கான இறையழைத்தல்களைத் திரு அவைக்குக் கொணர்ந்தது. ஆக, நற்செய்தி அறிவிப்பு என்பது சவாலானது, வலிகள் நிறைந்தது, வாழ்வைத் துறக்கத் தயார் நிலையில் இருப்பது என்ற மூன்று முக்கியக் கூறுகளை இயேசு நமக்கு உணர்த்துகிறார். நற்செய்தி அறிவிப்போரின் துணிவும் வீரமும் தியாக வாழ்வும் கடவுள்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் விளைகிறது. எனவேதான் இயேசு இரண்டாவது நிபந்தனையாக, “பணப்பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச்செல்ல வேண்டாம்”
(10:4) என அறிவுரை வழங்குகின்றார்.
‘எதுவுமே எடுத்துச்செல்ல வேண்டாம்’
என இயேசு கூறும் கட்டளை நமது நடைமுறைக்கு ஒத்துவராத ஆலோசனையாக இருக்கலாம். இன்றைய நம் காலச்சூழலில் நற்செய்தி அறிவிப்பு என்பதே ஓர் எதிர்பார்ப்புடன்தான் செய்யப்படுகிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. நற்செய்தி அறிவிப்பு என்பது ஒரு பயன்கருதாப் பணி என்பதைவிட, பயன்கருதும் ஒரு பணியாக மாறிவிட்டது என்பதுதான் உண்மை. இன்று பணத்தை மையமாகக் கொண்டுதான் நற்செய்திப்பணி ஆற்றப்படுகின்றது. நற்செய்தி அறிவிப்புப்பணிகளில் இயேசுவே மையம் என்ற எண்ணம் நம்மில் மேலோங்கும்போதுதான் நாம் நற்செய்தி அறிவிப்புப்பணியின் மேன்மையை உணர முடியும். நம்முடைய நற்செய்தி அறிவிப்புப்பணியில் பொருளாசை மையம்கொள்ளும்போது விளைவது பொறாமையும் போட்டிகளும் பிளவுகளும் பிணக்குகளும்தான். “உலக இன்பங்களும், பொருளாதாரச் செழிப்பும் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், நம் இதயங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவர முடியாது. செல்வம் ஏமாற்றத்தினை அளிக்கிறது. வறுமையின் துயரமான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுள் இல்லாமல் வாழ முயற்சிக்கும்போது வறுமையே பிறக்கின்றது” என்கிறார்
திருத்தந்தை 14-ஆம் லியோ (9-வது உலக வறியோர் நாள், 14.06.2025).
நற்செய்தி
அறிவிப்பில் ‘வெறுங்கையோடு செல்லுங்கள்’ எனக்
கூறும் இயேசு, அமைதியைக் கொடுக்கச் சொல்கிறார். “நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள்” (10:5) என்கிறார்.
ஒரு குடும்பத்தைச் சந்தித்து அவர்களோடு உறவாடும்போது முதன்முதலில், தாம் இறைவனுடைய பணியாள் என்ற முறையில் அவர்களுக்கு இறை அமைதியை அளிக்கவேண்டும். பின் அவர்களுடைய நிலைமையையும் தேவைகளையும் அறிந்து, அவர்களுடைய இன்ப துன்பங்களில் தம்மை ஒன்றுபடுத்திக்கொண்டு, இறையாட்சியின் மதிப்பீடுகளான அன்பு, அமைதி, ஒற்றுமை முதலியவற்றை அவர்கள் வாழ்ந்துகாட்ட அவர்களைத் தூண்ட வேண்டும். அவர்கள் தூய ஆவியாரின் வழிகாட்டுதலுடன் தங்கள் வாழ்வை வடிவமைத்துக் கொள்ள உதவிடவேண்டும்.
இயேசு
கூறுகின்ற இந்த மூன்று நிபந்தனைகளையும் நடைமுறை வாழ்வில் கடைப்பிடிப்பது மிகவும் சிரமமே. இவ்வுலகைச் சார்ந்த வழிகளில் மட்டுமே சிந்திப்பதால், உயர்ந்த கனவுகள் சிறகடித்துப் பறக்க முடியாமல், நமக்குள் சிறைப்படுத்தப்படுகின்றன. எதிர்ப்புகளைச் சந்திக்கும்போது, கோபமும் வெறுப்பும் கசப்புணர்வுமே மேலோங்கி நிற்கின்றன. இந்தச் சூழலில் நமது நற்செய்தி அறிவிப்புப்பணி எப்படி அமையலாம்?
முதலில்,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் கலாத்தியத் திரு அவைக்குக் குறிப்பிடுவதுபோல பணம், பதவி, பகட்டு, வீண்பெருமை போன்ற உலக ஆடம்பர வலையில் நாம் சிக்கிக்கொள்ளாமல், ‘சிலுவையே எனது வாழ்வின் ஆதாரம்’,
‘சிலுவையே எனது பெருமை’ என்ற மனநிலையில் வாழவேண்டும். நற்செய்தி அறிவிப்போர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்ட வேண்டும் (1கொரி 1:31). புனித பவுல் குறிப்பிடுவதுபோல, நற்செய்தி அறிவிப்போர் தன்னைப்பற்றி எடுத்துரைக்காமல் கிறிஸ்து இயேசுவைப் பற்றி எடுத்துரைப்பவர்களாக இருக்க வேண்டும் (2கொரி 4:5). நமது நற்செய்தி அறிவிப்புப் பணியில் சிலுவையில் அறையுண்ட இயேசுவையே நமது பணியின் இலக்காகவும், பாதையின் விளக்காகவும் கொண்டு பயணிக்க வேண்டும் (கலா 6:14).
இரண்டாவதாக,
நற்செய்தி அறிவிப்பின் மையமாக இருப்பவர்கள் ஏழைகள். அவர்களே நற்செய்தி அறிவிப்பைப் பெற்றுக்கொள்ளும் முதன்மையானவர்களாகவும் இருக்கின்றார்கள். திருத்தந்தை பிரான்சிஸ் ‘நற்செய்தியின் மகிழ்ச்சி’
என்னும் திருத்தூது மடலில் குறிப்பிட்டுள்ளதுபோல, ஏழைகளுக்குக் கடவுளுடனான நட்புறவு, ஆசி, இறைவார்த்தை, வழிபாட்டுக் கொண்டாட்டம் ஆகியவற்றை வழங்க நாம் தவறக் கூடாது. அவர்களிடமிருந்து நமது பார்வையை ஒருபோதும் விலக்கிவிடக்கூடாது. திருத்தந்தை 14-ஆம் லியோ வலியுறுத்துவதுபோல, “ஏழைகளில் கிறிஸ்துவின் முகத்தைக் காணவேண்டும்; மேய்ப்புப் பணியானது எப்பொழுதும் நம்மில் எளியவர்கள், சிறியவர்கள் மற்றும் ஏழைகளுக்கான அக்கறையில் உயிர்ப்பிக்கப்பட வேண்டும்”
(16.06.2025).
நிறைவாக,
நற்செய்தி அறிவிப்பு என்பது இயேசுவைப் பின்பற்றி நடப்பது. எருசலேம் நகரில் புறக்கணிப்பு, துன்பம் மற்றும் மரணத்தை தாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை இயேசு அறிந்தபோதிலும் அந்நகர் நோக்கித் தொடர்ந்து பயணம் மேற்கொண்டார். பாகுபாடின்றி எல்லா இடங்களிலும் நன்மை செய்தார். நற்செய்திக்காகத் தம் இன்னுயிரைக் கையளிப்பதுதான் நற்செய்தி அறிவிப்பின் இறுதிநிலை என்பதை வாழ்ந்து காட்டினார். எனவே, நற்செய்தி அறிவிப்பில் துணிச்சலும் உயிர்த்தியாகமும் அவசியம் தேவை என்பதைப் புரிந்துகொள்ளும் நாம், வெள்ளமெனச் செல்லும் உலகப் போக்கின்படி பயணிக்காமல், கடவுளை அறிந்து, அன்புசெய்து, அவரை இந்த உலகில் அறிவிப்போம்.
நற்செய்தி
அறிவிப்புப் பணி திருமுழுக்குப் பெற்ற நம் அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ள கடமை என்பதை உணர்வோம். இவ்வுலகில் பணியாற்றப் போதிய வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுவோம். தூய பிரான்சிஸ் அசிசி குறிப்பிடுவதுபோல “நற்செய்தியை அறிவிப்போம், நற்செய்தியாவோம்.”