news-details
சிறப்புக்கட்டுரை
முட்டுச்சந்தில் இந்திய வெளியுறவுத்துறை

1947-இல் இந்தியா சுதந்திரம் பெறுகிறது. அன்று முதல் இன்றுவரைகாஷ்மீர் யாருக்குச் சொந்தம்?’ எனும் கேள்வியாலே இந்தியா-பாகிஸ்தான் யுத்தங்கள் தொடர்கின்றன. காஷ்மீர் பகுதிகளை மெல்ல மெல்ல பல்லாயிரக்கணக்கான சதுர மைல் பரப்பில் சீனாவும் பாகிஸ்தானும் ஆக்கிரமித்துவிட்டன. இந்திய அரசாங்கம் இது குறித்து வாய் திறக்க மறுக்கிறது. ‘இது இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே  உள்ள பிரச்சினை; மூன்றாம் நாடுகளின் தலையீடு கூடாதுஎன்ற இந்தியாவின் நிலையில் டிரம்ப் மண் அள்ளிப் போடுகிறார். தான்தோன்றித்தனமாகநான் பஞ்சாயத்துச் செய்கிறேன்என அறிவிப்பது, முட்டுச்சந்தில் இந்திய வெளியுறவுத் துறையை நிறுத்திவிட்டது. காஷ்மீர் பிரச்சினையைச் சர்வதேசப் பிரச்சினையாக்கும் பாகிஸ்தானின் குரலுக்கு டிரம்ப் முட்டுக்கொடுக்கிறார்.

பாகிஸ்தான் தன் தீவிரவாதத் தாக்குதல்களால் இந்தியாவிற்கு நெருக்கடி கொடுப்பது எப்போதும் வாடிக்கையான செயலாகும். ஏப்ரல் 22 அன்று 5 தீவிரவாதிகள், 26 சுற்றுலா பயணிகளைப் பகல்காம்  எனும் இடத்தில் சுட்டுக்கொன்றனர். இவர்கள் லஷ்கர்--தொய்பாவின் கிளை அமைப்பான எதிர்ப்பு முன்னணி (டி.ஆர்.எஃப்.) என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் எனத் தேசியப் புலனாய்வு அமைப்பு அடையாளம் கண்டது. முதலில் பொறுப்பேற்ற அவ்வமைப்பு, பிறகு தாங்கள் ஈடுபடவில்லை என மறுத்தது. இந்திய அரசாங்கம் பாகிஸ்தானைத் தொடர்புகொண்டு, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியது. பாகிஸ்தான் வழக்கம்போல் கள்ள மௌனம் சாதித்தது.

15 நாள்கள் மௌனம் காத்த இந்திய அரசாங்கம், மே 7 அன்றுசிந்தூர் ஆபரேஷன்எனும் நடவடிக்கையை முன்னெடுத்தது. பாகிஸ்தானில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்கள் அடையாளம் காணப்பட்டு, வான்வெளித்தாக்குதல் வழி அழிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் தீவிரவாத அமைப்புகளான லஷ்கர்--தொய்பா மற்றும் செய்ஷ்--முகமது அமைப்பைச் சார்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டது.

மே 15-ஆம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “முன்பே பாகிஸ்தான் அரசுக்குத் தெரிவித்துவிட்டுத்தான் தீவிரவாத முகாம்களைத் தாக்கினோம்என்றார். மறுநாள் ஜெய்சங்கர்அப்படிக் கூறவில்லைஎன உள்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மறுத்தார். மே 25-இல் ஜெய்சங்கரும், “இத்தகவல் பாகிஸ்தானுக்குக் கூறப்படவில்லைஎன மறுத்தார். முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் செயலற்ற வெளியுறவுத்துறை  அமைச்சர் ஜெய்சங்கர் பதவி விலக வேண்டுமென்ற எதிர்க்கட்சிகளின் குரல் வலுக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி, “சிந்தூர் ஆபரேஷனால் எத்தனை விமானங்கள் இந்திய இராணுவத்திற்கு இழப்பு ஏற்பட்டன? முன்பே தகவல் அளித்ததால் தீவிரவாதிகள் தப்பிவிட வாய்ப்பு உள்ளதே...” எனக் கேள்வி கேட்டார். பாகிஸ்தானும் பதிலுக்கு இந்திய எல்லைப் பகுதிகளில் குண்டு வீசியது. போர் துவங்கிவிட்டது. “நான் கூறியதால் இந்தியா-பாகிஸ்தான் யுத்தம் நின்றுவிட்டதுஎன்கிறார் டிரம்ப். ஆம், அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்... “டிரம்ப் மத்தியஸ்தம் செய்யவில்லை; இந்தியாவிற்குப் போர் வேண்டாம் என உத்தரவு போட்டுவிட்டார்என்பதே! அது உண்மைதான். பாகிஸ்தானுக்குப் போரைத் தாங்கும் வலுவில்லை. டிரம்பிடம் கெஞ்சி தப்பிவிட்டது.

சிந்தூர் ஆபரேஷன்குறித்து உலகின் எந்த நாடும் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்திய அரசு ஏழு தூதுக் குழுக்களை அமைத்து உலகெங்கும் ஆதரவு  திரட்டியது. எதிர்க்கட்சித் தலைவரை ஆலோசிக்கவில்லை. பா... தூதுக்குழு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சசி தரூரை நியமித்து, உள்கட்சிப் பூசலை  உருவாக்கியது. வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போம்.

2008-ஆம் ஆண்டில் நான்கு நாள்களில் மும்பையில் நடந்த லஷ்கர்--தொய்பாவின் தீவிரவாதத் தாக்குதலில் 160 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கோர் காயம் அடைந்தார்கள். அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் 100 நாடுகளுக்குப் பல்வேறு தூதுக் குழுக்களைச் சத்தமில்லாமல் அனுப்பினார். தீவிரவாதிகளின் உலகளாவியப் புகலிடம் பாகிஸ்தான் என உறுதிபட அறிவித்தார். பாகிஸ்தானுக்கு உலகளாவியப் பொருளாதார உதவிகளை நிறுத்தினார். இன்று இந்தியா-பாகிஸ்தான் போர் நிற்கிற நாளில், ஒரு மில்லியன் டாலர் கடனை .எம்.எஸ்.சிடமிருந்து பாகிஸ்தான் எளிதாகப் பெறுகிறது. சர்வதேச அரங்கில் பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தும் மோடி அரசின் முடிவுக்கு உலகின் எந்த நாடும் ஆதரவு தரவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கைள் புரியும்.

2001-ஆம் ஆண்டு அல்-கொய்தா அமைப்பு அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடத்தியது. அதன் முழு மூளையாகச் செயல்பட்டவர் ஒசாமா பின்லேடன். 2011, மே 2 அன்று பாகிஸ்தானின் அபோட்டா பகுதியில் ஒசாமா பதுங்கியிருந்தபோது அமெரிக்க இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். 1993-ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்புச் சம்பவங்களில் தேடப்படும் நிழல் உலகத் தாதா தாவூத் இப்ராஹிம்கூட பாகிஸ்தானில் இருப்பதாகத் தகவல் கசிகிறது. அவர் முக்கியக் கிரிக்கெட் பந்தயங்களைப் பாகிஸ்தானில் உள்ள விளையாட்டுத்திடலுக்கே வந்து பார்த்தார் என்ற அதிகாரப்பூர்வமற்றத் தகவல்களும் உலா வருகின்றன. பாகிஸ்தான் உலகளாவியத் தீவிரவாதிகளின் புகலிடம்  என்பதில் இரு வேறு கருத்துகள் இல்லை.

பாகிஸ்தானில் நிலையான அரசு இல்லை. குடியாட்சி இல்லை. இராணுவ ஆட்சி நடக்கிறதுதெற்காசிய நாடுகளில், புவிசார் அரசியலில், சீனாவைக் காட்டி அமெரிக்காவிடமும், அமெரிக்காவைக் காட்டிச் சீனாவிடமும் பாகிஸ்தானியர்கள் சலுகைகளைப் பெற்றுக்கொள்கின்றனர். இலங்கையும் இந்தியாவிற்கு எதிராக இதே அரசியல் நிலைப்பாட்டில் கொழிக்கிறது.

நமது பிரதமர் மோடி தனது 11 ஆண்டுகால பிரதமர் பதவிக் காலத்தில் 151 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு 72 நாடுகளுக்குச் சென்றுள்ளார். அமெரிக்காவிற்கு மட்டுமே 10 முறை சென்றுள்ளார். ஆனால், ‘இந்த ஏழைத் தாயின் மகனுக்கு எந்த நாடும் ஆதரவாக இல்லைஎன்பதே பெருங்கவலை. கையறு நிலையில் கனடாவின் ஆல்பர்ட்டா நகரில் நடந்தஜி-7’ நாடுகளின் மாநாட்டில் அழையா விருந்தாளியாகச் சென்றார். உலகத் தலைவர்களோடு புகைப்படம் எடுத்துத் தன்னை மாபெரும் உலகப் பெருந்தலைவராக மோடி ஊடகங்களால் வெளிச்சம் பெற்றார். கெஞ்சி, கூத்தாடி டிரம்பிடம் பெற்ற காணல் பேச்சு வார்த்தை இரத்தானது. திடீரென டிரம்ப் அமெரிக்கா திரும்பினார். பிறகு வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் இராணுவ அமைச்சருடன் மதிய உணவு மற்றும் பேச்சுவார்த்தைக்குத் திரும்பினார் எனத் தெரிய வந்தது.

பிரதமர் மோடி சீன என்ற நாட்டின் பெயரைப் பொதுவெளியில் சொல்லவும், சீன அதிபரின் பெயரைச்  சொல்லவும் தைரியமற்றவர் என்ற உண்மை சுடுகிறது. நேருவால் முன்னெடுக்கப்பட்டஅணிசேரா நாடுகள்என்ற நிலையும் மாறிஇந்திய வெளியுறவுக்கொள்கை புயலில் சிக்கிய கப்பலாய்  மோடி ஆட்சியில் தவிக்கிறது. தற்போதைய இஸ்ரேல் - ஈரான் யுத்தத்தில் பா... அரசு தன் மதவெறியின் பகுதியாக இஸ்ரேல் பக்கம் சாயும் நிலையில் உள்ளது. இது குறைந்த விலைக்கு இந்தியாவிற்குக் கச்சா எண்ணெய் வழங்கும் ஈரானைக் கோபப்படுத்தும். அதன் பின்விளைவுகளால் இந்தியாவின் பொருளாதாரம் சரியும் என்ற அடிப்படையைக்கூட அறியாமல் உள்ளார்கள்.

மதவாத அரசியல் நடத்தும் பா... தனது மோசமான அயலுறவுக்கொள்கையால் நாடுகள் இடையே  தனித்து விடப்பட்டுள்ள தன் நிலை அறிய வேண்டும். புதிய அயலுறவுக் கொள்கை உருவாக எதிர்க்கட்சிகளிடம் பேசி, கூட்டு முயற்சியில் நாட்டின் நலனைப் பாதுகாக்கப் புதிய முன்னெடுத்தல்கள் காலத்தின் கட்டாயம்.