மூன்றாம் உலக நாடுகளில் கிறித்தவம் பெரிதும் பரவியது 16-ஆம் நூற்றாண்டிலிருந்துதான். இந்தியாவில் அது முதல் நூற்றாண்டிலேயே வேரூன்றியிருந்தாலும், படர்ந்து பரவலாகியதும் அதே காலத்தில்தான். அதற்கான மறைபரப்பு முயற்சிகள் பெரிதும் ஐரோப்பாவிலிருந்தும் ஐரோப்பிய பணியாளர்களாலுமே மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக, பல்வேறு நாடுகளிலும் பண்பாடுகளிலும் சூழமைவுகளிலும் வாழ்கின்ற பல்வேறு திரு அவைகளுக்கான அனைத்து முக்கியச் சட்டதிட்டங்களும் இன்றளவும் உரோமைத் தலைமையகத்திலேயே இயற்றப்படுகின்றன. இதனால், உலகெங்கும் திரு அவையில் ஐரோப்பியத்தன்மையே அதிகம் மேலோங்கி நிற்கிறது. அதுவும் குறிப்பாக, ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தன் நடை, உடை, பாவனைகளில் மட்டுமல்ல, சிந்தனைகளிலும் செயல்பாடுகளிலும் சட்ட திட்டங்களிலும்கூட அந்நியமானதாகவே தோன்றுகிறது. அந்தந்த இடத்துப் பண்பாட்டு வளங்களால் அது அதிகம் செழுமைப்படுத்தப்படவில்லை. இதன் விளைவாக, அந்தந்த இடத்து மக்களின் நல்வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் தனது நற்செய்தியின் ஆற்றலால் அதனால் இயன்ற முழு பங்களிப்பையும் செய்ய இயலவில்லை. அதன் நற்செய்திப்பணியும் உரிய பெரும் வெற்றியைப் பெறவில்லை.
வேரூன்றி நின்று
வேறுபடுவது
ஒரு
குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்கள் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளும்போது அங்குத் திரு அவை உருவாகிறது. அந்த இடத்துப் பண்பாட்டிலும், வரலாற்றுச் சூழமைவிலும்தான் அம்மக்கள் மீட்பளிக்கும் இறைவனின் சந்திப்பு அனுபவத்தை உண்மையாகவும் ஆழமாகவும் அனுபவிக்கவும், பிறருடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும். இவ்வாறு குறிப்பிட்ட இடங்களைச் சார்ந்ததாகத் திரு அவை இருப்பதால்தான் நம்பிக்கையின் பல்வேறு வெளிப்பாடுகள் எனும் வளமை அதில் தோன்றவும் பாதுகாக்கவும்படுகிறது (இஅ* 110).
ஓர்
இடத்தில் வேரூன்றியிருத்தல் என்பதை இன்று நாம் ஒரு நிலப்பகுதியைச் சார்ந்து இருத்தல் என்று மட்டும் புரிந்துகொள்ளல் ஆகாது; ஏனெனில், இன்று அது முன்பு ஒருபோதும் இல்லாத இயக்கமும் நெகிழ்வுத்தன்மையும் கொண்ட உறவுகளின் பின்னலையும் பண்பாட்டுப் பன்மைநிரையையும் சார்ந்திருப்பதும் ஆகும். இதற்கு முக்கிய ஒரு காரணியாக இருப்பது நகர்மயமாதல், மக்களின் புலம்பெயர்தல் என்பன. இவற்றால் நிலப்பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட மறைமாவட்டங்கள், பங்குகள் என்பனவற்றின் எல்லைகள் மங்கி புதுவகைப் பிணைப்புகள் உருவாகின்றன. இம்மாற்றங்கள் திரு அவையின் அருள்பணிசார் செயல்பாடுகளுக்குப் பல சவால்களை முன்வைக்கின்றன.
இச்சவால்களை எதிர்கொள்ளப் புதிய வகைகளிலான அருள்பணிச் செயல்பாடுகளைக் கற்பனை செய்து, தெளிதேர்வு செய்து நடைமுறைப்படுத்தும் மறைத்தூதுப் படைப்பாற்றல் அவசியம் (இஅ 111).
இந்நிலையில்
திரு அவையை நாம் ஓர் இல்லம் எனப் புரிந்துகொள்வது அவசியம். “அதனை எல்லா வகையிலும் பாதுகாக்கப்படவேண்டிய, வாயில் திறவாத, மூடிய ஓர் இடமாகக் கருதாது, ஓர் இல்லமாக உருவகிக்கும்போது வரவேற்றல், விருந்தோம்பல், ஏற்றுக்கொள்ளுதல் என்பனவற்றிற்கான வாய்ப்புகள் பிறக்கின்றன. இம்மண்ணுலகம் என்பதே ஒரே மனிதக் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஏனைய படைப்புகளுடன் வாழும் நமது பொது இல்லம்தானே! (அனைவரையும்) வரவேற்கும் ஓர் இல்லமாகவும், சந்திப்பு மற்றும் மீட்பின் அருளடையாளமாகவும், கடவுளுடைய பிள்ளைகளாகிய அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களுக்குமான உறவு ஒன்றிப்பின் பயிற்சி இல்லமாகவும் திரு அவை பார்க்கப்படுவதைத் தூய ஆவியின் துணையுடன் உறுதிசெய்வதே நமது ஈடுபாடு”
(இஅ 115).
ஒற்றுமை என்பது
ஒருமைப்பாடு அல்ல!
பல்வேறு
நாடுகள், பண்பாடுகள், சூழமைவுகள் என்பனவற்றில் இணைந்து பயணிக்கும் திரு அவைக்குப் ‘பன்மையில் ஒருமை’ என்பது இன்றியமையாதது. ஏனெனில், அது மூவொரு கடவுளின் வாழ்வில் பங்கேற்கின்ற கடவுளின் மக்கள் சமூகம். தந்தை, மகன், தூய ஆவியார் மூன்று ஆள்களாக இருப்பினும், அவர்கள் ஒரே கடவுளாகவும், பன்மையில் ஒருமையாகவும் வேறுபடினும் ஒன்றிப்புறவில் இணைந்தவர்களாகவும் இருப்பவர்கள். இவ்வாறே, திரு அவையும் பல நாடுகள், இனங்கள்,
மொழிகள், பண்பாடுகளைச் சார்ந்த மக்களாக இயேசுவின்மீது கொண்ட ஒரே நம்பிக்கையில் ஒன்றித்து வாழ வேண்டிய சமூகமே. ஆனால், “திரு அவையின் ஒன்றிப்பு என்பது ஒருமைப்பாடு அல்ல; மாறாக, அது முறையான வேறுபாடுகளின் உயிரிணைப்பு சார்ந்த கூட்டமைப்பே. மீட்பின் செய்தி பல்வேறு வகைகளில் வெளிப்படுகிறது. இது அச்செய்தியைத் திரு அவையின் வாழ்க்கைமுறை மற்றும் அது எடுக்கும் இறையியல், திருவழிபாடு, அருள்பணி, ஒழுங்குமுறைகள் என்பவற்றின் வடிவங்களையும் பற்றிய ஒற்றைப்புரிதலுக்குள் முடக்கிவிடுவதைத் தவிர்க்க உதவுகிறது”
(இஅ 39). ஏனெனில், “திரு அவையின் கத்தோலிக்கத் தன்மையின் பொருள் பன்மையில் ஒருமை என்பதே”
(இஅ 38).
திரு
அவையின் இந்தப் பன்மையில் ஒருமை என்பது ஒரு வளமை எனும் அனுபவமாக மாமன்றக் கூடுகைகள் தங்களுக்கு அமைந்திருந்தன என அதன் பங்கேற்பாளர்கள்
வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்: “கூடுகை நாள்களில் திரு அவை பல்வேறு வெளிப்பாடுகளாகத் திகழ்வதை நேரடியாகவும், மிக்க மகிழ்ச்சியாகவும் நாங்கள் அனுபவித்தறிய முடிந்தது”
(முஅ 5o). எவ்வாறெனில்,
“தலத்திரு அவைகளின் அருள்வாழ்வுசார் மரபுச் செல்வங்களை மாமன்ற இயக்கமுறை வெளிச்சம் போட்டுக்காட்டியது, திரு அவையின் பொதுமை (கத்தோலிக்கத் தன்மை) காரணமாக அதன் தனிப்பகுதிகள் தத்தம் கொடைகளை ஏனைய பகுதிகளுக்கும், முழு திரு அவைக்கும் கொண்டுவருகின்றன. இதனால், அவை தங்களுக்கு இடையிலான பகிர்வுப் பரிமாற்றம் மற்றும் நிறை ஒற்றுமைக்கான ஒன்றுபட்ட முயற்சிகள் வழியாக முழுத் திரு அவையும் அதன் தனிப் பகுதிகளும் வளர்ச்சியடைகின்றன”(இஅ
37).
- மாமன்ற
முதல் அமர்வின் அறிக்கை *(முஅ),
இறுதி
அறிக்கை (இஅ)