news-details
ஆன்மிகம்
“எதிர்நோக்கை வலுப்படுத்தும் செய்திகளைக் கூறுங்கள்!” - திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 59-வது சமூகத் தொடர்பு நாளுக்கான செய்தி

(சென்ற இதழின் தொடர்ச்சி)

சிக்கல்கள் மிகுந்த இக்காலத்தில் நம்மோடுள்ள சகோதரர்-சகோதரிகளுடன் உடன் நடந்து உற்சாகப்படுத்தி, எதிர்நோக்கு அவர்கள் உள்ளங்களில் உருவாகச் செய்யும் ஒன்றாக நமது தொடர்பாடல் அமைய வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறேன். உணர்ச்சிப்பூர்வமான, சினத்தைத் தூண்டியெழுப்பி, தற்பாதுகாப்பிற்கான எதிர்வினைகளைத் தோற்றுவிக்கும் தொடர்பாடலை அல்ல; மாறாக, மனிதர்களிடையே நட்புறவையும் திறந்த உள்ளத்தையும் உருவாக்கும் தொடர்பாடலாக அது அமைய வேண்டுமென ஆசிக்கிறேன்.

நம்புவதற்குக் காரணங்கள் எதுவும் இல்லாதது போலத் தோற்றமளிக்கும் இன்றைய சூழலில், மக்கள் அன்பையும் அழகையும் போற்றி, அதனால் எதிர்நோக்கையும் பெற்று அவர்களில் அர்ப்பண உணர்வையும், பிறருடன் ஒத்துணர்ந்து வாழும் மனநிலையையும் நமது தொடர்பாடல் உருவாக்க வேண்டுமென விழைகின்றேன். அடுத்தவரின் மனித மாண்பை மதித்துப் போற்றவும், நமது பொதுவான இல்லமாகிய உலகின் மேம்பாட்டிற்காக அக்கறையுடன் செயல்படும் மனநிலையையும் இந்தத் தொடர்பாடல் உருவாக்கவேண்டும் என்பது எனது ஆவல் (Delexit nos 217).

இந்தத் தொடர்பாடல் பொய்யான தோற்றத்தையும், அதனால் எழும் அச்சத்தையும் உருவாக்காமல், நமது எதிர்நோக்கிற்குக் காரணம் கூறும்படி அமைய வேண்டும். மார்ட்டின் லூதர் கிங் ஒருமுறை பின்வருமாறு கூறினார்: “நான் கடந்து செல்லும்போது யாருக்காவது என்னால் உதவ முடிந்தால், ஒரு வார்த்தையாலோ, பாடலாலோ ஒருவரை மகிழ்ச்சிப்படுத்த முடிந்தால் எனது வாழ்வு பயனற்றதாய் இராது.” இதனை நாம் செய்ய வேண்டுமாயின் சுயவிளம்பரங்களைத் தேடும் முயற்சி, தன்னைப் பற்றியே எப்போதும் எண்ணிக்கொண்டிருக்கும் தற்சிந்தனை போன்ற நோய்களிலிருந்து விடுபட்டு, நமது குரல் கேட்கப்பட வேண்டுமென்பதற்காக மற்றவர்களுடன் உரக்கக் கத்துகிற ஆபத்திலும் சிக்கிக்கொள்ளாமல் இருக்கவேண்டும். தனது செய்தியை, பதிவுகளைப் படிப்பவர்கள், கேட்பவர்கள், பார்ப்பவர்கள் தம்மை நெருங்கி வரவும், தங்கள் முழு உள்ளத்துடன் தாம் கூற விரும்பும் செய்திகளிலும் நிகழ்வுகளிலும் முழுமனத்துடன் ஈடுபடச் செய்யும் வண்ணம் தொடர்பாளர் தனது தொடர்பாடல் செயல்பாடுகளை மேற்கொள்வது அவசியம். இவ்வாறு தொடர்பாடல் மேற்கொண்டால் யூபிலி ஆண்டின் மையக்கருத்தாகியஎதிர்நோக்கின் திருப்பயணிகள்என்ற நிலையை நாம் அடையும் வாய்ப்பு உருவாகும்.

அனைவரும் சேர்ந்து எதிர்நோக்குதல்

எதிர்நோக்குதல் ஒரு சமூகச் செயல்பாட்டுத் திட்டமாகும். இரக்கத்தின் இந்த யூபிலி ஆண்டின் அரும்பெரும் செய்தியை உற்றுநோக்குவோம். கடவுள் எல்லாரையும் மீண்டும் உயர்த்தி, தம்மோடு அணைத்துக்கொண்டு நமக்குத் தமது இரக்கத்தை வழங்கும் யூபிலி ஆண்டின் அருளைப்பெற நாம் எல்லாரும் அழைக்கப் பெற்றுள்ளோம். இதில் தனிமனித மற்றும் சமூகக் கூறுகள் பிரிக்க இயலாதபடி கலந்துள்ளன. நாம் எல்லாரும் ஒன்றாகப் புறப்படுகிறோம். பல சகோதர- சகோதரிகளோடு ஒன்றாகப் பயணிக்கிறோம். ஒன்றாகவே புனிதக் கதவில் நுழைந்து யூபிலி ஆண்டின் அருளைப் பெறுகிறோம்.

நாம் கொண்டாடும் இந்த யூபிலி பல விளைவுகளைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, சிறையில் இருப்போருக்கான இரக்கத்தையும், அவர்களது எதிர்நோக்கையும் குறிப்பிடலாம். துன்பத்தில் இருப்போரும், விளிம்பு நிலையில் இருப்போரும் அனுபவிக்கும் மேன்மை மற்றும் உடனிருப்பு அனுபவங்களும் அடங்கும். “அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர் (மத் 5:9) என்ற செய்தியை இந்த யூபிலி நமக்கு நினைவூட்டுகிறது. இவ்வாறு இது எதிர்நோக்கை ஊக்கப்படுத்துகிறது. இதனால் நமது தொடர்பாடல் செயல்பாடுகள் கவனமுடையதாகவும் கனிவுடையதாகவும் ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகவும் உரையாடலுக்கான வழிவகைகளைச் சுட்டிக்காட்டுவனவாகவும் அமைவது அவசியம். இந்தக் காரணத்திற்காகவே நமது தொடர்பாடல் செயல்பாடுகளில் நாம் பயன்படுத்தும் நிகழ்வுகளில் உள்ள பல நன்மையானவற்றைக் கண்டுகொள்ள முடியும்.

தங்கத் துகள்களைச் சேகரிப்போர் சோர்வடையாது, மணலை நன்கு சலித்து அதில் உள்ள தங்கத்துகள்களைத் தேடிக்கண்டுபிடிப்பது போல, நாமும் நமது தொடர்பாடல் செயல்பாடுகளில் பயன்படுத்தும் செய்திகள், நிகழ்வுகள், பதிவுகளில் காணக்கிடைக்கும் நன்மையானவற்றைத் தேடிக் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். எதிர்நோக்கின் விதைகளைத்தேடி, அவற்றைப் பிறர் அறியச் செய்வது நமது தொடர்பாடலின் நோக்கமாகும். இதனால் இன்றைய உலகினர் ஏழைகளின் கூக்குரலுக்குச் செவிமடுக்காமல் இருப்பது குறையும். உலகமாந்தர் பிறரைப் பற்றிப் பாராமுகமாய் இருப்பதும், தம்மிலேயே அவர்கள் மூழ்கி இருப்பதும் குறையும். எனவே எதிர்நோக்கை உருவாக்கும் நன்மையின் மினுமினுப்புள்ள நல்ல செய்திகளைத் தொடர்பாடல் துறையில் இருப்பவர்கள் தேடுதல் அவசியம். இத்தகைய தொடர்பாடல் மக்களிடையே ஒன்றிப்பைக் கட்டியெழுப்ப மிகவும் உதவும். இதனால் யாரையும் தனிமையில் விட்டுவிடாமல், எல்லாருடனும் சேர்ந்து பயணிக்க வாய்ப்பு ஏற்படும்.

இதயத்தை மறக்க வேண்டாம்

அன்புக்குரிய சகோதரர்-சகோதரிகளே, வியக்கத்தக்கத் தொழில்நுட்பச் சாதனங்களுக்கு முன்நிற்கும் உங்களை, உங்கள் இதயத்தைப் பற்றியும், உங்கள் உள்ளத்தின் வாழ்வு பற்றியும் அக்கறை கொள்ள உற்சாகப்படுத்துகிறேன். இதன் பொருள் என்ன? இதோ ஒருசில சிந்தனைகளை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன்.

உள்ளத்தில் கனிவோடு இருங்கள்; பிறரது முகங்களை மறந்துவிடாதீர்கள். பிறருக்கு நீங்கள் சில பணிகளைச் செய்யும்போது, அந்த ஆண்கள்- பெண்களுடைய இதயத்துடன் பேசுங்கள்.

• உங்கள் உள்ளுணர்வு இயல்பூக்கத்தினால் மட்டும் உங்கள் தொடர்பாடல் செயல்பாடுகள் தூண்டப்படாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். மிகக் கடினமான சூழ்நிலைகளிலும், எதிர்நோக்கிற்கு வாய்ப்பு இல்லையெனத் தோன்றும் போதும், இது ஒரு பயனில்லாத முயற்சி எனத் தோன்றும் போதும் மனவுறுதியுடன் எதிர்நோக்கைப் பரவலாக்குங்கள்.

மனிதகுலத்தின் காயங்களைக் குணமாக்கும் தொடர்பாடலை ஊக்குவியுங்கள்.

வாழ்க்கைச் சிக்கல்களில் வளைந்துகொடுத்து அழிந்து போகாத நீர்நிலையின் மலர்த்தண்டைப் போல மென்மையானதாக ஆனால் உறுதியானதாக நம் எதிர்நோக்கு இருக்க வேண்டும். இந்த உறுதியான எதிர்நோக்கினாலேயே நமது தாய்மார்கள் தம் பிள்ளைகள் இவ்வுலகின் முரண்பாடுகளாகிய அகழிகளைத் தாண்டி வர வேண்டுமென்று செபிக்கின்றனர். அந்த எதிர்நோக்கினாலேயே பல தந்தையர்கள் நல்ல எதிர்காலத்திற்கான வேலைகளைத் தேடி பல சவாலான சூழ்நிலைகளைத் தினமும் கடந்து வருகின்றனர். இந்த எதிர்நோக்கினாலேயே நமது சிறுவர்கள் போர் என்னும் குப்பைக் கூளங்களுக்கிடையிலும், வறுமை மிகுந்த தெருக்களிலும், குடிசைப் பகுதிகளிலும்கூட விளையாடவும் சிரிக்கவும் நம்பவும் செய்கின்றனர்.

நீங்கள் சாட்சிகளாக இருந்து, வன்முறைத் தாக்குதல் இல்லாத தொடர்பாடலை மேற்கொள்ளுங்கள். பிறர்மீது அக்கறை காட்டும் கலாச்சாரத்தை உண்டாக்குங்கள். நிகழ்காலத்தில் காணக்கூடிய, காணக்கூடாத தடைகளைத் தகர்த்து மனிதரிடையே இணைப்புப்பாலங்களைக் கட்டியெழுப்புங்கள்.

எதிர்நோக்கை வலுப்படுத்தும் செய்திகளைக் (கதைகளை) கூறுங்கள்.

மனுகுலத்தின் பொதுவான இலக்கைப் பற்றியும், அதனை மனிதகுலம் அடையும் வழிவகைகளையும் நமது எதிர்கால வரலாறாக வடிக்கும் ஆற்றல் உள்ள எதிர்நோக்கின் செய்திகளை உங்கள் தொடர்பாடலில் பயன்படுத்துங்கள்.

இந்த யூபிலி ஆண்டில் இறைவன் தரும் அருளால் நீங்களும் நானும் இவற்றையெல்லாம் செய்ய முடியும். இதுவே எனது வேண்டுகோள். உங்களுக்கும் உங்கள் பணிகளுக்கும் ஆசி வழங்குகிறேன்.

- திருத்தந்தை பிரான்சிஸ்

உரோமை, புனித இலாத்தரன் பேராலயம்

2025, ஜனவரி 24,

சலேசு நகர் புனித பிரான்சிஸ் நினைவு நாள்