மனித வாழ்க்கையின் மூலவேர்களாகவும், பாசத்தின் பாதுகாப்புக் கோட்டையாகவும் இருக்கின்றவர்கள் நம்முடைய தாத்தா-பாட்டிகள். அவர்களின் கைகளில் நாம் பழகிய முதல் நொடிகளில் கதைகள் பிறந்தன. அவர்களின் வார்த்தைகளில் முதன் முதலாய் அறிவு பிறந்தது. மூத்தோர் நாள் என்பது அவர்களுடைய பங்கு, பாசம் மற்றும் பண்பாட்டுக்குரிய பாராட்டுகளை நன்றியுடன் நினைவூட்டும் ஒரு சிறப்பு நாள். இந்நாளில், அவர்கள் இல்லாமல் இவ்வுலகம் எவ்வளவு வெறுமையாக இருக்கின்றது என்பதை நினைத்துப் பார்க்க அழைக்கின்ற தருணம்.
இல்லம்
என்பது கோவில். அதில் முதியோர், பெரியோர், இளையோர், சிறுவர் எனப் பலரும் இணைந்து இருக்கின்றபொழுது அது ஒரு குடும்பமாக அமைகின்றது, கோவிலாக இருக்கின்றது. ஆனால், எங்கே நம்முடைய முதியோர்கள்? எங்கே நம்முடைய தாத்தா-பாட்டிகள்? முதியோர் இல்லத்திலும், மூன்று மகன்களின் இல்லத்திலும் மாதம் ஒரு முறை இருக்கும் சூழலை நினைத்துப் பார்க்கின்ற தருணம் இது.
“முந்தையத் தலைமுறையின் ஆசிர்வாதம், எதிர்காலத்தின் நம்பிக்கையின் விதைகள்!” என்று திருத்தந்தை 14-ஆம் லியோ தாத்தா-பாட்டிகள் பற்றித் தன்னுடைய செய்தி மடலில் கூறுகின்றார். மேலும்,
வாழ்வின் நீண்ட பயணத்தைக் கடந்து, அனுபவங்களின் ஒளியில் ஒளிரும் தாத்தா-பாட்டி என்பவர்கள், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு தூணாக இருக்கின்றனர். நம் மனத்தில் நிறைந்து இருக்கும் பாடல்கள், பழமொழிகள், செபங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள்... இவைகளெல்லாம் அவர்களால்தான் பசுமையாக இன்று இருக்கிறது.
உலக
தாத்தா-பாட்டிகள் தினம், நம் மூத்தத் தலைமுறையின் பங்களிப்புகளுக்கு நன்றி செலுத்தும் ஓர் அரிய நாள். இவ்விதமான ஒரு நாளில், நாம் அவர்களைப் பாராட்டுவதே இல்லை. நம் உள்ளத்தை அவர்களிடம் செலுத்தி, அவர்கள் சிரிப்பிலும் அமைதியிலும் இறைவனைக்
காணும் ஆசிர்வாதமாக உணர்வதற்கான ஓர் அழைப்பாக இது இருக்கிறது என்றும் திருத்தந்தை தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
“தாத்தா பாட்டியின் செபம் ஓர் இல்லத்தின் பாதுகாப்புச் சுவராகும்.”
“பழமை என்பது பாழ்மை அல்ல; அது நம்மை வழிநடத்தும் ஒளி.”
“வயது கூடினாலும், நம்பிக்கை புதிதாகிறது. அவர்கள் நமக்கான செபக்கதவுகள்!”
பெரியவர்கள்
வீட்டின் கதவுகள் போல. வெளியே புயல் இருந்தாலும், உள்ளே நிம்மதி இருக்கிறது. அவர்களின் வாழ்வில் இருந்த கற்றல்களும் தியாகங்களும், நம் தலைமுறைக்குத் தேவையான ஒளிக்கீற்று. இன்று நாம் நம் தாத்தா-பாட்டிக்கு அருகில் போகவேண்டும், அவர்களின் கைகளைப் பிடித்து, நம் வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இது ஒரு கடமை அல்ல; இது ஒரு கருணைப்பூர்வமான அழகு. நம் குழந்தைகள், நம் பேரன்கள் இந்த மரபைத் தொடர, இப்போதைய நம் நடத்தைதான் அவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும். பெரியவர்கள் நமக்கு ஓர் ஆசிர்வாதம், வாழும் நம்பிக்கையின் சின்னங்கள்!
“வயது என்பதெல்லாம் எண்கள் மட்டும்; உள்ளத்தில் அன்பு நிறைந்திருந்தால் வாழ்வு அழகு!”
“தாத்தா-பாட்டியின் புன்னகையில் தேவனின் முகம் தெரிகிறது!”
“அவர்களின் நாள்கள் சிரமமானவையாக இருந்தாலும், அவர்களின் நினைவுகள் சீரானவை!”
தாத்தாவும்-பாட்டியும் இல்லாத வீடு, சத்தம் இல்லாத கோவில்போல் இருக்கும். அவர்களின் பரிசுத்தமான அன்பும், அனுபவங்களின் வெளிச்சமும் நம்மை வழிநடத்துகிறது. மூத்தோர் தினம் ஒரு நாளாக மட்டுமல்ல; அவர்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நம் அன்பையும் கவனத்தையும் வழங்கும் ஒருவிதமான கடமை. அவர்களுக்கு நன்றி கூறுவதும், அவர்களைக் கொண்டாடுவதும் நம் சமூகப் பண்பாடுகளுக்குப் பெருமை சேர்க்கும். அன்பும் மதிப்பும் சேர்க்கும் இந்த நாள், நம் மூத்தோர்களுக்கான புகழின் நாளாக நிலைக்கட்டும்!