news-details
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 14- ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (06-07-2025) எசா 66:10-14; கலா 6:14-18; லூக் 10:1-12, 17-20

திருப்பலி முன்னுரை

ஆண்டின் பொதுக்காலத்தின் 14-ஆம் ஞாயிறை இன்று சிறப்பிக்கின்றோம். இன்றைய நற்செய்தியில் இயேசு தம்முடைய சீடர்களிடம், “நீங்கள் எந்த வீட்டிற்குள் சென்றாலும்இந்த வீட்டுக்குள் அமைதி உண்டாகுகஎன முதலில் கூறுங்கள்என்கிறார். “இறைவா, எங்களை நீர் உமக்காகப் படைத்திருக்கின்றீர். நாங்கள் உம்மை அடையும் வரை எங்களிலே நிம்மதி கிடையாது, அமைதி கிடையாதுஎன்கிறார் புனித அகுஸ்தினார். இறைவனோடு இணைந்திருந்தால் மட்டுமே அமைதியை அனுபவிக்க முடியும்; மற்றவர்களுக்கும் கொடுக்க முடியும். வாழ்க்கையில் அமைதி இல்லாமல் வாடும்போதும், துன்பத்திற்கு மேல் துன்பம் வரும்போதும், கவலைக்குமேல் கவலை வரும்போதும் ஆண்டவரிடம் தஞ்சம் புகுவோம். அவர் நமக்குக் கேடயமாக, மீட்பாக இருந்து நம்மை அமைதியின் பாதையில் வழிநடத்துவார். ஆண்டவரில் அமைதியைச் சுவைத்து அதை எடுத்துச்செல்வோம். பணத்தையோ, அதிகாரத்தையோ, பதவியையோ கொண்டு அமைதியை வாங்க முடியாது. ஆண்டவரிடம் நம்மையே கொடுக்கும்போதுதான் அமைதியைப் பெற்றுக்கொள்ள முடியும். இயேசுவின் சீடர்கள் தங்களையே இயேசுவிடம் ஒப்படைத்தார்கள், இயேசுவிடம் சுவைத்த அமைதியை அவர்கள் சென்ற இடமெல்லாம் கொடுத்தார்கள். நாமும் ஆண்டவர் வழங்கும் அமைதியை அனுபவித்துஅனைவருக்கும் கொடுத்து உயிருள்ள சாட்சிகளாய் சீடத்துவ வாழ்வில் சிறந்து  வாழ வரம்வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.

முதல் வாசகம் முன்னுரை

நமது கடவுள், அவருடைய பிள்ளைகளாகிய நாம் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வதையே விரும்புகின்றார். நலமும் வளமும் அன்றாடம் கொடுத்து நம்மை மகிழ்ச்சியின் பாதையில் வழிநடத்தி வருகின்றார். நன்மைகளாலும் நலன்களாலும் நிறைத்து, நிறைவோடு வாழவைக்கும் இறைவனில் மகிழ்ந்திருக்க அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நம்முடையதுஎன நாம் நினைத்துக்கொண்டிருக்கும் அறிவு, திறமை, ஆற்றல், வாழ்க்கை, குடும்பம், சொத்து, சுகம் இவற்றில் நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆனால்சிலுவையைச் சுமந்து நமக்குப் புதிய வாழ்வைக் கொடுத்த இயேசுவின் பிள்ளைகள் நாம் என்பதில்தான் பெருமை கொள்ள வேண்டும். நமக்கு வாழ்வு கொடுத்த சிலுவையின்மீது நம் கண்களைப் பதிய வைத்து, துன்பங்களைத் துணிவோடு ஏற்று வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அமைதியின் தெய்வமே எம் இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் உம்மில் நிலைத்து, உம் அன்பைச் சுவைத்து வாழவும், அவர்களின் பணிவாழ்வில் நாங்கள் துணைநிற்கவும் தேவையான அருளைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

2. ‘நான் உங்களோடு இருக்கிறேன்என்று மொழிந்த ஆண்டவரே! நாங்கள் உம்மில் நிலைத்திருந்து பல மடங்கு பலன் கொடுத்து வாழவும், உம்மீது கொண்ட நம்பிக்கையில் ஆழம்பெறவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம்மோடு வாழும் ஆண்டவரே! ஒப்பற்ற செல்வமாகிய உம்மை அனைத்திற்கும் மேலாகத் தேடவும், மற்றவர்களில் வாழும் கடவுளைக் கண்டு கொள்ளவும் தேவையான ஞானத்தை எமக்குத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஞானத்தின் ஊற்றான ஆண்டவரே! எம் மறைமாவட்டத்திலும் பங்கிலும் உள்ள குழந்தைகள், கடவுளைப் பற்றி அறிவதில் ஆர்வம் காட்டத் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.