news-details
தலையங்கம்
தமிழ்நாட்டை உலுக்கும் காவல் மரணங்களும் திருமணத் தற்கொலைகளும்!

எல்லை மீறும் எச்செயலும் வன்முறையே! பயங்கரவாதமே! தீவிரவாதமே! நான்கு நபர்களால் வீதிகளில் தொடரும் வன்முறைகள், இன்று கண்ணசைவில் நான்கு சுவர்களுக்குள்ளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இவை வன்முறையின், மனித உரிமை மீறலின் உச்சமாகப் பார்க்கப்படுகின்றன.

குடும்ப, சமூக வாழ்க்கையில் சவால்கள் நிறைந்திருப்பது எதார்த்தம். தனியொருவராக அச்சவால்களைச் சந்திக்கின்றபோது தீர்வுகாணத் துணையிருக்க வேண்டியவர்களே இடையூறுகளுக்கு ஆதாரமாகிப் போவதும் பிரச்சினைகளுக்கு உச்சமாகிப்போவதும் வேதனையிலும் வேதனை! அண்மைக் காலங்களில் தமிழ்நாட்டில் தொடர்ந்து நிகழ்ந்துவரும் பல துயர நிகழ்வுகளில்வேலியே பயிரை மேய்ந்ததுதான்உச்சக்கட்டமான துயரம்.

தமிழ்நாட்டையே உலுக்கிய சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவிலில் காவலாளி அஜித்குமார் தனிப்படைக் காவலர்களால் கொல்லப்பட்ட நிகழ்வும், வரதட்சணைக் கொடுமைகளால் நிகழ்ந்த ரிதன்யா, கவிதாவின் மரணங்களும் சமூகத்திற்கு உணர்த்தும் பாடங்கள் ஏராளம். உயிரிழந்த கோவில் காவலாளி அஜித்குமாரின் முதல்கட்ட உடற்கூராய்வு அறிக்கையை ஆராய்ந்த மதுரை உயர் நீதிமன்றம், “இது காவல்துறையால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட குற்றம்; அரசு தனது சொந்தக் குடிமகனையே கொன்றிருக்கிறதுஎனச் சாடியிருக்கிறது.

அஜித்குமாரின் மரணம், நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பல காவல் மரணங்களை (Custodial deaths) வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளதுடன், காவல் மரணங்கள் தொடர்பாக எந்தக் காவலரும் தண்டிக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் காவல்துறையினரால், பட்டியல் சாதி மக்கள் இன்னும் கூடுதலாக இலக்காக்கப்படுவதையும் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

2016 முதல் 2022 (மார்ச் 30) வரையிலான காலத்தில், இந்தியாவில் 11,656 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அத்தகைய மரணங்கள் அதிகம் நிகழும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளதாகவும், அதாவது, மேற்கூறிய காலகட்டத்தில் இங்கு 2,630 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறே, தமிழ்நாட்டில் 490 நபர்கள்  உயிரிழந்திருப்பதாகவும், தென்னிந்தியாவில் காவல் மரணங்கள் அதிகம் நடைபெறும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாகவும் மேலும் அப்புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.

இந்தியா முழுவதும், இதே காலகட்டத்தில் நிகழ்ந்த காவல் மரணங்களுக்கு எந்தவொரு காவல்துறை அதிகாரியும் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பதும், இக்காலகட்டங்களில் காவல் நிலையங்களில் ஏற்பட்ட மரணங்கள் குறித்து தமிழ்நாட்டில் 39 நீதி விசாரணைகள் நடத்தப்பட்டும் இந்த வழக்குகள் தொடர்பாக எந்தவொரு காவலர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை, தண்டனை விதிக்கப்படவில்லை என்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

கைதுசெய்யப்பட்ட நபர்மீது காவல் துறையினர் தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், முன்விரோதத்துடன் செயல்படுதல், உடல் - மன ரீதியாகத் துன்புறுத்துதல் போன்றவை வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. இந்திய அரசமைப்புச் சட்டம் 21, ‘எந்த ஒரு நபரின் உயிரையோ, அடிப்படை உரிமைகளையோ எவரும் பறிப்பது குற்றம்எனச் சுட்டிக்காட்டுகிறது. ஆகவே, காவல்துறையினால் அத்துமீறி நடத்தப்படும் இதுபோன்ற காவல் மரணங்கள் சட்டப்படி குற்றச்செயலாகவே கருதப்படும்.

கைது செய்யப்பட்ட நபருக்கு அவரது கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 56, 57-இன்படி, கைதுசெய்யப்பட்ட நபர் தாமதமின்றி 24 மணி நேரத்திற்குள் நீதிபதியிடம் (மாஜிஸ்ட்ரேட்) ஆஜர்படுத்தப்பட வேண்டும் எனத் தெளிவுபடுத்துகிறது. மேலும், இந்திய அரசமைப்புச் சட்டம் 22(1) இன்படி, கைதுசெய்யப்பட்ட எவரும் தங்கள் விருப்பப்படி வழக்கறிஞரிடம் ஆலோசனை பெறவும், மருத்துவரை அணுகவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஆயினும், காவல் மரணங்களை விசாரிப்பதில் நீதித்துறை மெத்தனமாகச் செயல்படுவது நீதிமன்றத்தின்மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சிதைப்பதாக உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டை உலுக்கிய சாத்தான்குளம் ஜெயராஜ் - பெனிக்ஸ் காவல் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 9 காவல் அதிகாரிகள் மீதான வழக்கு நான்கு ஆண்டுகளாகியும் தீர்ப்பு நோக்கி அது நகராதது  வருத்தமளிக்கிறது.

மனித உரிமை, மனநல ஆரோக்கியம் என்பன பற்றிச் சிறிதும் கவலையின்றி, காவல்துறையில் தொடரும் இத்தகைய வன்முறைக் கலாச்சாரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதும், வன்முறைக் கலாச்சாரத்தை விடுத்து, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைக் கொண்டு, புலனாய்வு நுட்பங்களைக் காவல்துறையினர் மேம்படுத்த வேண்டும் என்பதும், அரசியல், அதிகாரம் மற்றும் சாதிய அழுத்தங்களுக்கு அடிபணியாத வகையில் உண்மை, நேர்மை, நீதி வழியில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் காவல்துறையினர் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக இருக்கிறது.

அவ்வாறே, திருப்பூர் அவினாசி ரிதன்யா மற்றும் கிருபானந்த வாரியாரின் கொள்ளுப்பேத்தி கவிதா ஆகியோரின் வரதட்சணைக் கொடுமையால் நிகழ்ந்த மரணங்கள் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆணாதிக்க மனநிலை, குடும்ப வன்முறை, உடல் ரீதியான துன்புறுத்தல், வற்புறுத்துதல், மன வேதனை, உளவியல் சார்ந்த அழுத்தம், மனித உரிமை மீறல் எனக் குற்றப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஆணுக்கு இணையாகப் பெண் கல்வியில் உயர்ந்து சிறந்து விளங்கினாலும், திருமணம் என்னும் பந்தத்தில் சிறுமைப்படுத்தப்படுவதும், வரதட்சணை என்னும் போர்வையில் கொடுமைப்படுத்தப்படுவதும் சமூகத்தின் அவலமாகவே பார்க்கப்படுகிறது.

திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுஎன்னும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வரிகள்தான் நம் நினைவுக்கு வருகின்றன. பல்வேறு கட்டமைப்புகளில் இருந்து விடுபட்டு, முற்போக்குச் சிந்தனைகளில் வளர்ந்து வரும் இச்சமூகம், மீண்டும் வரதட்சணை, பெண்ணடிமைத்தனம், பாலியல் வேறுபாடு, வர்க்கக்கட்டமைப்பு என்னும் அவலங்களில் சிக்குண்டிருப்பது இச்சமூகத்தின் பிற்போக்கு ஆதிக்கத்தையே இன்னும் படம்பிடித்துக் காட்டுகிறது.

குடும்பமும் சமூகமும் சிறந்து விளங்க ஒவ்வொருவரும் ஒழுக்கம், தன்னடக்கம், எளிமை, அமைதி, அனைத்து உயிர்களையும் மதித்தல், பிறர் நலம் காத்தல் மற்றும் தர்மத்தைப் போற்றுதல் என்னும் ஏழு நற்பண்புகளைப் பின்பற்ற வேண்டுமென நம் மூதாதையர் வகுத்துக்கொடுத்த அறநெறி வாழ்க்கை இன்று சிதைந்து போயிருக்கிறது.

திட்டமிட்ட இவர்களின் வாழ்க்கை திடீரென எழுந்த எதிர்பாராதச் சூறாவளிக் காற்றில் சூறையாடப்பட்டு, பொருளற்றுப் போனதால் ஒவ்வொரு குடிமகனின், குலமகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி இருக்கிறது. உண்மைத் தன்மையற்ற சட்டங்களாலும், போலியான குடும்பப் பாசங்களாலும் சூழப்பட்ட இச்சமூகத்தில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும்நாளைஎன்பது அச்சத்துடனே நகர்கிறது.

மனித உறவுகள் மேம்பட மனம் வளப்பட வேண்டும்என்பார்கள். குடும்பத்திலும் சமூகத்திலும் இன்று மனம் சுருங்கிப்போனதும் இறுகிப் போனதும் பல பேராபத்துகளை ஏற்படுத்துகின்றன. ஆகவே, அனைத்துத் துன்பங்களின் ஆதாரமாக இருக்கும் சுயநலம் விடுக்கவும்உண்மை-பொய்மையின் தன்மை உணரவும், நன்மை-தீமையின் வேறுபாடுகளை அறியவும் விரிந்த பார்வையும் தெளிந்த சிந்தனையும் துணிந்த செயல்பாடும் நாம் கொண்டிருக்க வேண்டும்.

கனவுகளும் கற்பனைகளும் எதிர்கால நல்லெண்ணங்களும் நிறைந்ததுதான் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும். அநீதியை முன்னிறுத்தி, பேராசையில் மையம்கொண்டு, பதவி, புகழில் பாதையமைக்கத் துடிக்கும் ஒவ்வொருவரும் சற்றே சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஆகவே, இளைய தலைமுறையினரின் கனவுகளைச் சிதைத்துவிட வேண்டாம்; அந்தப் பட்டாம் பூச்சிகளின் சிறகுகளை முறித்தெறிய வேண்டாம். ‘உயிர் வழிபாடுதான் உண்மையான, மேன்மையான இறைவழிபாடுஎன்பதை நம் நெஞ்சில் நிறுத்திடுவோம்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்