news-details
சிறப்புக்கட்டுரை
பொடுகு (வலையும் வாழ்வும் - 20)

சென்னைக்குப் புதிதாக வந்த காலம் அது. நண்பர் ஒருவர் உயர் இரக முடிதிருத்தும் நிலையம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். அலுவலகத்திற்கு அருகாமை என்பதாலும், ‘அப்படி என்னதான் உயர் இரகம்! பார்த்து விடுவோமே?’ என்ற எண்ணத்திலும் அங்குச் சென்றேன். குளு குளு அறையில் அலங்கார விளக்குகள் ஜொலிக்க, கண்ணாடிச் சுவர்கள் பிம்பங்களைப் பிரதிபலிக்க சங்கர் பட பாணியில் பிரமாண்டம் தெரிந்தது. வரிசையாக நின்றுகொண்டு கற்களில் தேவதைகளை வடிக்கும் சிற்பிகளைப் போல சுழல் இருக்கைகளில் அமர்ந்து கொண்டிருந்தவர்களுக்கு முடி மற்றும் முகத்திருத்தம் செய்து கொண்டிருந்தனர் சிலர். நானும் அந்த வரிசை இருக்கையில் அமரும்போது, ஏதோ அரச சிம்மாசனம் ஒன்றில் அமர்ந்த உணர்வு இருந்தது. நானே மிக அழகாய் இருப்பதுபோல அந்த மாயக்கண்ணாடி காட்டியது. ‘டேய்! எங்க ஓடுற? ஒழுங்கு மரியாதையா இங்க வந்து உட்கார்ந்து தாத்தாவிடம் முடிவெட்டிக்கோஎன்ற அப்பாவின் அதட்டல் ஞாபகம் வந்தது.

அந்தக் காலத்தில் மாதம் ஒருமுறை ஊருக்கு வரும் ஆறுமுகம் தாத்தாவிடம் முடிவெட்ட வேண்டும் என்றாலே பயம்தான். எல்லாரும் ஓடி ஒளிந்துகொள்வோம். உரோமம் கத்தரிக்க ஆடுகள் வரிசையில் நிற்பதுபோல ஊர் சிறுபிள்ளைகள் மரத்தடியில் வரிசையாக நிற்போம். ‘பங்க் ஸ்டைலில வெட்டுங்கஎன்றால்சரிஎன்பார். ‘ரஜினி ஸ்டைல்என்றாலும்சரிஎன்பார். ஆனால், எல்லா ஸ்டைலும் ஆறுமுகம் தாத்தாவிற்கு ஒன்றுதான். சில நேரம் அப்பா ஆறுமுகம் தாத்தாவின் காதில் ஏதேதோ முணுமுணுப்பார். விளைவு, கிரிக்கெட் மைதான புற்களைப் போல தலைமுடியை ஒட்ட வெட்டிவிடுவார். பள்ளியில் நண்பர்களிடம் தலையைக் காட்டவே சில நாள்களுக்கு வெட்கமாக இருக்கும்.

யூனிபார்ம் அணிந்த ஒருவர் அருகே வந்து, ‘சார்! எப்படி வெட்டணும்என்றது பழைய ஞாபகங்களைக் கலைத்தது. ‘மீடியமா வெட்டுங்கஎன்றேன். சீப்பு ஒன்றை எடுத்துக்கொண்டு முடியைச் சீவிப்பார்த்தார். ‘சார்! உங்களுக்கு டாண்ட்ரப் இருக்கு. ஸ்கல்ப்ல இன்பக்சன் வேற. டாண்ட்ரப் ட்ரீட்மென்ட் பண்ணிக்கலாமா?’ என்றார். ‘இல்ல வேண்டாம், ஹேர் கட் மட்டும் பண்ணிக்கிறேன்என்றேன். ‘சார் அப்படியே விட்டீங்கனா இன்பக்சன் அதிகமாகிடும்என்றவர், ஒரு மெல்லிய பிளாஸ்டிக் உடையை எடுத்து என் உடலில் போர்த்திவிட்டார். ‘சார், எங்ககிட்ட பெஸ்ட் புராடக்ட் பேஸ்கிரீம் இருக்கு. போட்டீங்கனா பேஸ்ல இருக்கிற டேன் எல்லாம் போய்டும்என்றவர் என் மௌனத்தைப் பதிலாக எதிர்பார்த்திருக்க மாட்டார்போலும்.

தூசு படர்ந்த தண்ணீரை விலக்கி அருந்துவதுபோல என் மௌனத்தை விலக்கிஎவ்வளவு ஆகும்?’ என்று கேட்டேன். ‘ஹேர் வாஷ், ஹேர் கட், ஃபேஸ் ட்ரீட்மென்ட் எல்லாம் சேர்த்து 5,500 ரூபாய் ஆகும்என்று கூறிக்கொண்டு மெசினை எடுத்தார். ‘இல்ல வேண்டாம், ஹேர்கட் மட்டும் பண்ணிக்கிறேன்என்று மறுபடியும் கூறினேன். ‘இல்ல சார், ஹேர் வாஷ் பண்ணாம உங்க ஹேர் கட் பண்ண முடியாதுஎன்றார். அப்படியே இருக்கையிலிருந்து சட்டென எழுந்துசரி சார், பிறகு பார்த்துக்கலாம்என்று சொல்லிக்கொண்டு எல்லாரும் என்னையே உற்றுப்பார்க்கையில் வேகமாக வெளியேறினேன்மனம் கொஞ்சம் கனத்திருந்தது. இதை அவமானம் என்று சொல்லலாமா? இல்லை வேண்டாம். அனுபவம் என்று எடுத்துக்கொள்ளலாம். இதே தலை, இதே முடி, பல்வேறு இடங்கள், இத்தனை ஆண்டுகள். பொடுகு வரும் போகும், யாரும் முடி வெட்ட முடியாது என்று சொன்னதில்லையே என்ற எண்ணம் மட்டும் என்னோடு வேகமாக நடந்து வந்தது.

சாலையோரத்தில் ஒரு முடிதிருத்தும் கடையைக் கண்டு உள்நுழைந்தேன். குறை கூறமுடியாத அளவு நன்றாகத்தான் இருந்தது அந்தச் சலூன். ‘முடி வெட்ட வேண்டும்என்றேன். புன்முறுவலோடுபைட்டியே சார்என்றார் ஒரு வட நாட்டு இந்திக்காரர். இருக்கையில் அமர்ந்தேன். முடிதிருத்தம் செய்தார். பொடுகு அவர் கண்ணுக்கு மட்டும் தெரியவில்லை. முடி வெட்டிய பிறகு குளு குளு எண்ணெய் ஊற்றி மசாஜ் வேறு. தலைபாரம் முழுமையாக இறங்கியது போலிருந்தது. கேட்ட நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன். அன்றிலிருந்து அங்குதான் முடி வெட்டிக்கொள்கிறேன். கத்தரிக்கப்பட வேண்டியது முடி மட்டுமல்ல, நம் முன்சார்பு எண்ணமும்தான் என்று தோன்றியது. வட நாட்டுக்காரர்களை யாராவது பழித்தால், இப்போதெல்லாம் எனக்குக் கோபம் வந்துவிடுகிறது.

ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் செல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். நாம் இந்தப் பொருள்கள் எல்லாம் வாங்கவேண்டும் என்று ஒரு பட்டியல் வைத்திருப்போம். ஆனால், உள்ளே சென்ற பிறகு அங்கிருக்கும் இன்னும் பல பொருள்கள் நமக்கு அத்தியாவசியத் தேவை என்று தோன்றுகிறது. அவற்றையும் சேர்த்து வாங்கி வருகிறோம். கடைசி நேரத்தில் நம் முடிவில் ஏன் மாற்றம் ஏற்பட்டது? நாம் வாங்கவேண்டும்? என்று நினைத்துக்கொண்டதும், நாம் வாங்கியதும் எண்ணிக்கையிலும் அளவிலும் வேறுபடுகிறதே... ஏன்? என்றாவது சிந்தித்திருப்போமா? அதற்கான பதில்தான்மார்க்கெட்டிங் உத்திகள் (Marketing Strategy).  

நாம் குள்ளமானவர்களாக, அழகில்லாதவர்களாக, ஏதோ குறையுள்ளவர்களாகவே முதலாளித்துவ உலகின் கண்களுக்கு எப்போதும் தெரிகிறோம். ‘இந்த டானிக்கைக் குடித்தால் உயரமாக வளர முடியும்என்பதிலிருந்து, ‘இந்தப் பற்பசையைப் பயன்படுத்தினால் பற்கள் பளபளக்கும்என்பது வரை எல்லாம் மார்க்கெட்டிங் உத்திகளே. முதலாளித்துவ மார்க்கெட்டிங் உத்திகள் மனித மூளையை எளிதாகச் சலவை செய்து அவர்களின் பொருள்களை வாங்க வைத்துவிடுகின்றன. இன்று செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பல மார்க்கெட்டிங் உத்திகள் மனிதனைச் சுற்றிப் புனையப்படுகின்றன.

AIDA (Attention, Interest, Desire and Action) என்பது மார்க்கெட்டிங் உத்தியிலே மிகவும் பிரபலமான மாடல் எனலாம். இது நுகர்வோர் ஒருவர் ஒரு பொருளை வாங்குவதற்குமுன் கடந்து செல்லும் மனநிலையை விவரிக்கிறது. இன்று செயற்கை நுண்ணறிவின் வரவினால் இந்த உத்தி இன்னும் அதிகமாக மேம்படுத்தப்பட்டு குறிப்பாக, மின் வணிகத்திலே (E-commerce) அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. அமேசான், பிளிப்கார்ட், மீஷோ, மின்ட்ரா, பிக்பாஸ்கட், டாட்டா கிளிக், பெப்பர் பிரை, ஜியோ மார்ட் போன்ற மின் வணிகத்தளங்கள் செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்தி முதலில் செயற்கைத் தேவையினை உருவாக்குகின்றனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியினால் நுகர்வோரின் தேவையினை முன்கூட்டியே கண்டறிகின்றனர் (Anticipating Needs). குறிப்பிட்ட நுகர்வோருக்காகவே தயாரிக்கப்பட்டது போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றனPersonalized Recommendations). தொடர்ச்சியான நினைவூட்டல்கள் வழங்கப்படுகின்றன (Persistent Reminders). செயற்கையான பற்றாக்குறை பயத்தை ஏற்படுத்துகின்றனர் (Fear of Mission Out- FOMO). அவசர உணர்வை உருவாக்குகின்றனர் (Creating Urgency). கடைசியாக உளவியல் தூண்டல்கள் அடிக்கடி முன்வைக்கப்படுகின்றன (Psychological Nudging)). இன்று செயற்கை நுண்ணறிவினால் செறிவூட்டப்பட்ட இத்தகைய மார்கெட்டிங் உத்திகளைக் கடந்து நம்மால் மின் வணிகத்தளங்களிலிருந்து ஒரு பொருளையாவது வாங்காமல் வெளிவர முடியாத நிலை உருவாகி வருகிறது.

மனிதனுக்குரிய அடிப்படை ஆற்றலாகிய பகுத்தறிவு செயற்கை நுண்ணறிவிடமும், அதன் மார்கெட்டிங் உத்தியிடமும் மண்டியிட்டுக்கிடப்பது காலத்தின் கொடுமை, மானுடத்தின் சிறுமை.