news-details
ஞாயிறு மறையுரை
ஜூலை 27, 2025, ஆண்டின் பொதுக்காலம் 17- ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) தொநூ 18:20-32; கொலோ 2:12-14; லூக் 11:1-13 - கேளுங்கள், கொடுக்கப்படும்! தட்டுங்கள், திறக்கப்படும்!

2023, நவம்பர் 12-ஆம் நாள் உத்தரகாண்டில் சில்க்யாரா - பர்கோட் இடையே அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையில் எதிர்பாராத மண்சரிவு ஏற்பட்டதில் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்த சூழலில், இறுதி முயற்சியாகஎலி வளை தொழிலாளர்கள்வரவழைக்கப்பட்டு கைவேலைப் பாடாக 21 மணி நேரத்தில் 13 மீட்டர் துளையிட்டு, 17 நாள்களாக உள்ளே சிக்கியிருந்த 41 தொழிலாளர்களை உயிரோடு மீட்டனர். அந்நேரத்தில் ஊடகங்கள் பதிவிட்ட மிக முக்கியமான செய்தி: “பாதிக்கப்பட்டவர்கள், குடும்பத்தினர் மற்றும் 140 கோடி மக்களின் தொடர் இறைவேண்டலே இவர்களைக் காப்பாற்றியதுஎன்பதுதான்.

பொதுக்காலத்தின் 17-ஆம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் இறைவேண்டலின் வலிமையையும் வல்லமையையும் தொடர்வேண்டலின் அவசியத்தையும் சிறப்பாக நமக்கு எடுத்துரைக்கின்றன.

நமது தனிப்பட்ட நேரத்தையும் இடத்தையும் ஒதுக்கி, இறைவனோடு நாம் தொடர்புகொள்வதையேசெபித்தல்அல்லதுஇறைவேண்டுதல்என்கிறோம். செபித்தல் என்பது இவை மட்டுமல்ல; இவற்றைத் தாண்டி எப்பொழுதெல்லாம் கடவுளின் பெயரை உச்சரிக்கின்றோமோ, எப்பொழுதெல்லாம் கடவுளை மனதார நினைக்கின்றோமா அப்பொழுதெல்லாம் ஏதோ ஒருவகையில் நாம் இறைவனுடன் தொடர்புகொள்கிறோம். இறைவனுடன் நாம் கொள்ளும் ஒவ்வொரு தொடர்பும் செபமே.

இயேசு தமது வாழ்வில் மாலையில் (மத் 14:23), இரவில் (லூக் 6:12) அல்லது விடியற்காலையில் (மாற் 1:35) எனப் பல நேரங்களை ஒதுக்கி தந்தையோடு செபித்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு வல்ல செயலைச் செய்வதற்கு முன்னும் அவர் தம் தந்தையை அழைக்கத் தவறியதில்லை. பல வேளைகளில் இயேசு செபத்தில் ஆழ்ந்திருந்ததையும், செபத்தின் மூலமாக அவரிடம் ஏற்பட்ட அற்புதமான மாற்றங்களையும் (மத் 17:1-13; மாற் 9:2-8; லூக் 9:28-36) சற்று தூரத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த சீடர்களுள் ஒருவர் ஆவலுடன், “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக் கொடும்என்று கேட்கிறார். சீடரின் இந்த ஆர்வமான விண்ணப்பத்திற்கு விடையாக, “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்; தந்தையே, உமது பெயர்...” (லூக் 11:2) என்று இயேசு கூறிய பதில், காலத்தால் அழியாத ஒரு செபமாக அமைந்துள்ளது.

கடவுளுக்கென்று தனி இடங்களை ஒதுக்கி, அங்கும் அவரைச் சந்திக்க பல விதி முறைகளை வகுத்து, இறைவனை மக்களிடமிருந்து வெகுதூரத்தில் வைத்திருந்த இஸ்ரயேல் சமயத் தலைவர்களுக்கு ஒரு பேரிடியாக, இயேசு இறைவனைதந்தைஎன்று மக்களிடம் அறிமுகப்படுத்துகிறார். மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் (மத் 6; லூக் 11) நாம் காணும் இந்தப் புகழ்மிக்க செபம், கிறித்தவ உலகில் கத்தோலிக்கத் திரு அவையினர், ஆங்கிலிக்கன் சபையினர், லூத்தரன் சபையினர், ஆர்த்தடாக்ஸ் சபையினர் என்று பல பிரிவுகள் இருந்தாலும், அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு பொதுவான இறைவேண்டலாக இது அமைகிறதுஇயேசு கற்றுத்தந்தவிண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே...” (மத் 6:9) என்ற இச்செபம், ‘உலகளாவிய வேண்டுதல் (Universal Prayer) என்று தயக்கமின்றிக் கூறலாம்.

இயேசு கற்றுத்தந்த செபத்தைத் தொடர்ந்து, நாம் எவ்விதம் செபிப்பது என்பதைக் கற்றுத்தர இயேசுநள்ளிரவில் நண்பர்என்ற ஓர் எளிய உவமையைக் கூறுகிறார். “உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று...” (லூக் 11:5) என்று ஆரம்பிக்கும் இந்த உவமையில், இயேசு இறைவனிடம் வேண்டுதல் என்ற உயர்ந்த முயற்சிக்குத் தேவையான மூன்று பண்புகளைச் சுட்டிக்காட்டுகிறார். செபத்தில் 1. பிறர் தேவைக்காகச் செபிக்கவேண்டும்; 2. உண்மைநிலை இருக்க வேண்டும்; 3. நம்பிக்கையுடன் தன் விண்ணப்பத்தை எடுத்துரைக்க வேண்டும். இந்த உவமையில் வரும் கதாநாயகர் () தன் பசியைத் தீர்த்துக்கொள்வதற்கு அல்ல; தன் நண்பரின் பசியைத் தீர்க்க அடுத்தவரை நாடிச் செல்கிறார். () அவரிடம் மூடி மறைக்காமல் தன் உண்மை நிலையை எடுத்துச்சொல்கிறார். () நண்பர் கதவைத் திறக்காத போதும், நம்பிக்கையுடன் தன் விண்ணப்பத்தைத் தொடர்கிறார்.

செபத்தின் முக்கியமான இந்த மூன்று கூறுகளை இன்றைய முதல் வாசகத்தில் (தொநூ 18:20-32) ஆபிரகாமிடம் காண்கிறோம். சோதோம் கொமோரா நகரங்களில் வாழும் நீதிமான்களைக் காப்பாற்றுவதற்காகக் கடவுளோடு ஆபிரகாம் நடத்தும் உரையாடல் ஒரு செபமாக மாறுகிறது. செபம் என்பதே கடவுளுடன் நாம் மேற்கொள்ளும் உரையாடல்தானே! ஒரு நீதிமான்கூட அநீதியாகத் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆபிரகாம் கடவுளோடு மேற்கொண்ட உரையாடலும் உரசலும் தனக்கு வேண்டியதைப் பெற அடம்பிடிக்கும் குழந்தையை நம் நினைவுக்குக் கொணர்கிறது.

நற்செய்தி வாசகத்தின் கதாநாயகர் வேண்டிக் கொண்டது போலவே ஆபிரகாமும், (1) தன்னை மையப்படுத்தாமல், மற்றவர்களை மையப்படுத்தியும், (2) கடவுளிடம் எதையும் மறைக்காமல் தன் உண்மைநிலையை எடுத்துச்சொல்லியும், (3) மனம் தளராமல் நம்பிக்கையுடன் தொடர்ந்து மன்றாடியது, ‘நான், எனது, எனக்குஎன்ற மயக்க நிலையில் மரத்துப்போன ஒரு மனசாட்சியுடனும் தன்னைச் சுற்றியே இந்த உலகம் இயங்குகிறது என்ற எண்ணத்திலும் வாழும் இன்றைய தலைமுறையினருக்கு ஓர் உன்னத எடுத்துக்காட்டு.

இன்றைய வாசகங்கள் நமக்கு உணர்த்தும் உன்னதப் பாடங்கள்:

முதலாவதாக, ‘எனக்கு இதைத் தாரும், அதைத் தாரும்என்று தன்னைச் சுற்றியே செபங்களை எழுப்புவதற்குப் பதில், அடுத்தவரது தேவைகளை நம் செபங்களில் சுமந்துசெல்வது அழகானது. அடுத்தவரது தேவைகள் நம் எண்ணங்களையும் மனத்தையும் நிறைக்கும்போது, நமது தேவைகள் குறையுமன்றோ!

இரண்டாவதாக, நமது உண்மை நிலையை உள்ளவாறு எடுத்துரைத்துச் செபிப்பது நன்மை பயக்கும். “நண்பருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை (லூக் 11:6) என்ற வேண்டுதலை எழுப்பும் நம் உவமையின் நாயகர், நம்மிடம் உள்ள நிறை-குறைகளை ஏற்றுக்கொள்ளும் பணிவான, துணிவான மனநிலையைக் கற்றுத்தருகிறார். செபத்தில் தன் இயலாமையை எடுத்துரைக்க, உண்மையிலேயே மிகுந்த பணிவும் துணிவும் தேவை. ஆணவமும் தற்பெருமையும் சுயநலமும் நிறைந்த நமது இறைவேண்டல்களைக் கடவுள் எப்போதும் விரும்பமாட்டார்.

மூன்றாவதாக, செபத்தில் பல தடைகளும் மறுப்பும் தொடர்ந்தாலும், நம்பிக்கையோடு மனம் தளராமல் செபிக்கவேண்டும். ‘எறும்பு ஊரக் கல்லும் தேயும்என்பார்கள். எறும்பின் தொடர்முயற்சியே அதன் வலிமை. அதுபோலவே நமது தொடர் இறைவேண்டலே நமது செபத்தின் வலிமை. நாம் இடைவிடாமல் வேண்டுவதால், நாம் எண்ணியபடியே முற்றிலும் நிறைவேறும் என்பதல்ல; பல நேரங்களில் நாம் கேட்பதைக் காட்டிலும் இன்னும் சிறப்பான தீர்வுகளை இறைவன் தருவார் என்ற நம்பிக்கை நமக்குள் இருக்கவேண்டும்.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆஸ்வால்டு சேம்பர்ஸ் என்ற மறைப்போதகர், “நாம் செபிக்கும்போது கடவுள் மீது கண்களைப் பதித்து நாம் செபிக்க வேண்டும்; நம் கவலைகள் மீதல்லஎன்கிறார். “செபம் என்பது இறைவனின் விருப்பம் நம்மில் நிறைவேற நாம் அளிக்கும் அனுமதிஎன்பார் புனித அர்னால்டு. “இறைவா, எங்கள் தேவை என்னவென்று உமக்கு நன்றாகத் தெரியும்; உம் விருப்பத்தை நிறைவு செய்தருளும்என்று வேண்டும் போது, நமது செபங்களில் நம் தேவைகளைவிட, தந்தையாம் இறைவனே முன்னிலை பெறுவார்.

நிறைவாக, ஒவ்வோர் ஆண்டும் நம் ஆண்டவராகிய இயேசுவின் தாத்தா-பாட்டியும், அன்னை மரியாவின் தாயும்-தந்தையுமான புனிதர்கள் சுவக்கீன்-அன்னாவின் நினைவு நாளை ஒட்டி வருகின்ற சூலை மாதத்தின் நான்காம் ஞாயிறைஉலக தாத்தா-பாட்டிகள்தினமாகக் கொண்டாடுகிறோம். அதன்படிநம்பிக்கை தளராதோர் நற்பேறுபெற்றோர் (சீரா 14:2) என்ற மையப்பொருளில் சிறப்பிக்கும் இந்நாளில், நம் குடும்பங்களில் வாழும் தாத்தா-பாட்டிகளையும் முதியோர்களையும் நினைவுகூர்ந்து இறைவனிடம் வேண்டுவோம். நம் குடும்பங்களின் வேர்களை மறவாதிருப்போம். “நம் குடும்ப வாழ்வில் இறைநம்பிக்கையை அறிவிப்பதில் முக்கியப் பங்காற்றும் தாத்தா-பாட்டிகளை (திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இன்ஸ்டா பதிவு, 26.07.2019) குழந்தை மனநிலையுடன் ஏற்றுக்கொள்வோம். குழந்தை மனத்தை ஏற்றுக்கொண்டால் நம் செபம் எளிதாகுமன்றோ!

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையேஎன்ற செபத்தில் நாம் கேட்கும் அனைத்தும், நமக்கு இறைமகன் வழியாக உரிமைப்படுத்தப்பட்டுள்ளன. எனவேதான், இயேசு உறுதிப்படக் கூறுகிறார்: “கேளுங்கள், கொடுக்கப்படும்! தட்டுங்கள், திறக்கப்படும்!”