news-details
ஆன்மிகம்
புனித ஜான் மரிய வியான்னி இறைவன் மீது பேரார்வமும் இறைமக்கள் மீது கனிவிரக்கமும் கொண்ட மேய்ப்புப்பணியாளர்!

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு 4-ஆம் நாள் அருள்பணியாளர்களின் பாதுகாவலராம் புனித ஜான் மரிய வியான்னியின் நினைவைக் கொண்டாடுகின்றோம். 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆர்ஸ் பங்குத்தளத்தில் பணியாற்றிய இவரின் இறைப்பணியின் செயல்பாடுகளும் துணிவான முடிவுகளும் இன்றும் பேசுபொருளாக, உந்துசக்தியாக அனைத்து அருள்பணியாளர்களுக்கும் அமைந்துள்ளன.

கிறிஸ்துவின்மீது அவரது பேரார்வமும் தொடர்முயற்சியும் முன்னெடுப்புகளும் அவரது மறைப்பணி சார்ந்த மக்கள்மீது கொண்டிருந்த கனிவிரக்கமும் செயல்பாடுகளும் உலகில் உள்ள அனைத்து அருள்பணியாளர்களுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதை நாம் அறிவோம். அவரது மேய்ப்புப்பணியின் நான்கு தூண்களாக அவரது செபவாழ்வும் பேரார்வமும் தவமுயற்சிகளும் விடாமுயற்சியும் அமைந்திட்டன.

செப வாழ்வு

இன்று செப வாழ்வு என்பது காலாவதியான ஒரு செயல்பாடாகவே கருதப்படுகின்றது. சமூக ஊடகங்களும் செல்லிடைப்பேசிகளும் நமது செப நேரங்களை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. நமது புனிதரின் வியப்புக்குரிய மறைப்பணிக்கு அவரது செப வாழ்வே அடித்தளமாக அமைந்திருந்தது. செப வாழ்வும் அதன் செயல்பாடுகளும் ஓர் அருள்பணியாளரின் குறைந்தபட்சக் கடமையாகும் (திரு அவைச் சட்டம் எண். 276). செப வாழ்வின் மூலம் இறைவனோடு ஓர் அருள்பணியாளர் இணைந்திருத்தால் மட்டுமே, ஒவ்வோர் இறைமக்களின் கண்ணீரையும் வேதனையையும் தமது திருப்பணியின் திருவுடைகளால் வெரோணிக்காவைப் போன்று அவர்களின் துன்பங்களைத் துடைக்க இயலும்.

செபம் என்பது தாழ்ச்சியின் வெளிப்பாடு. ஒவ்வோர் அருள்பணியாளரும் செபிக்கின்றபொழுது, தனது மேய்ப்புப்பணியில் மற்றவர்களின் செயல்களும் தனக்கு மிகவும் அவசியமானது என்பதை அவர் உணர்ந்துகொள்கின்றார். மேய்ப்புப்பணியில் ஈடுபடும் அனைத்து அருள்பணியாளர்களும், இறைமக்கள் தங்களுக்குச் செபிக்கின்ற செயல்களில் நம்பிக்கை கொள்ளவேண்டும். சர்வ அதிகாரமும் அடக்கி ஆள்கின்ற மனநிலையும் முற்றிலுமாகச் சரிந்துவிழும் இடம்தான் செப அனுபவச்சூழல்கள். செப அனுபவங்களில்தான் இறைவிருப்பத்தை நாம் அறிகின்றோம்; அதற்குக் கீழ்ப்படிகின்றோம். இறைதூண்டல்களை உய்த்துணர்கின்றோம். கூட்டொருங்கியக்கத் திரு அவையின் மேய்ப்புப்பணிகளின் செப சூழல்களில்தான் தூய ஆவியின் வழிகாட்டுதலைப் பெற்று, அனைவரின் கலந்தாலோசனைக்குப் பிறகு சரியான முடிவுகளை எடுக்க இயலும். எனவே, செப வாழ்வு மேய்ப்புப் பணியில் மிக முக்கிய அங்கம் என்பதை நமக்கு எடுத்துரைக்கின்றார்.

செபம் என்பது ஒவ்வொரு துன்பச்சூழலிலும் அடைக்கலமாக, மகிழ்ச்சியின் அடித்தளமாக, தொடர் மகிழ்வின் ஊற்றாக, சோகமான வாழ்விலிருந்து நம்மைப் பாதுகாக்கும் அரணாக அமைந்துள்ளதுஎன புனித யோவான் குறிப்பிடுகின்றார். ஆகவே, அருள்பணியாளர்கள் தங்கள் மேய்ப்புப்பணியின் வழக்கமான கடமைகளை நிறைவேற்றுகின்றபொழுது, செப வாழ்விற்கென்று மிகுதியான நேரத்தை வழங்குவது இன்றியமையாதது.

பேரார்வமும் தவமுயற்சிகளும்

திரு அவையின் புனிதர்கள் அனைவரும் தங்களின் அணுகுமுறையிலும் வாழ்வின் செயல்பாடுகளிலும் மிக எளிமையானவர்களாகவே செயல்பட்டார்கள். எளிமையின் வழித்தடங்களே புனிதத்தை அடையும் பாதை என்பதை கற்றுத் தேர்ந்தனர். எளிமையான வாழ்வு முறையும் எண்ணங்களில், செயல்களில் தூய்மையும் தவ ஒடுக்கச் செயல்பாடுகளும் ஓர் அருள்பணியாளரைத் தூய வாழ்விற்கு இட்டுச்செல்லும். புனித ஜான் மரிய வியான்னி 41 ஆண்டுகள் (1818-1859) பிரான்சிஸ் நாட்டின் லியோன் நகருக்கு வடக்கே 40 கி.மீ. தொலைவில் அமைந்திருந்த சிறிய நகரமான ஆர்ஸில் தனது இறுதிமூச்சுவரை எளிய பணியாளராக இறைப்பணி ஆற்றினார். அவரது எளிமையை உலகப்புகழுக்கும் பெருமைக்கும் செல்வத்திற்கும் சிறிதும் வளைந்து கொடுக்காத மனவுறுதி கொண்டதாகவே இருந்தது.

இறைவன் மீதும், தனது அருள்பணியில் வெளிப்படுத்தப்பட்ட கடமையுணர்ச்சியும் பிளவுபடா உள்ள ஈடுபாடுமே வியான்னியை ஆர்ஸ் நகரின் பாதுகாவலராக உயர்த்தியது. மாலை நேரங்களில் சிறு குழந்தைகளுக்கு மறைக்கல்வி போதித்து, திருவிவிலியக் கதைகளைப் பகிர்ந்து நேரத்தைச் செலவிட்டார். அவர்களுடன் இயல்பாக, கரிசனையுடன் பழகினார். அருள்பணியாளர்களின் தொடர் உருவாக்கப் பயிற்சிக்கான, சர்வதேச மாநாட்டின் பங்கேற்பாளர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் உரையாற்றிய பொழுது, “ஓர் அருள்பணியாளர் சிறு குழந்தைகளுடன் விளையாட இயலாதபொழுது அவர் மேய்ப்புப்பணியில் முழுமையான ஈடுபாட்டை வெளிப்படுத்தத் தவறுகின்றார்என்கிறார். முழுமையான மனித மாண்பை வெளிப்படுத்தி, குழந்தைகளுடன் இயல்பாக விளையாடக் கூடியவர்களாகவும், சமூகத்திலுள்ள முதியவர்களைப் பராமரித்து, ஆரோக்கியமான உறவுகளை வளர்த்து, மேய்ப்புப் பணியின் சவால்களை மனமுதிர்ச்சியுடன் எதிர்கொள்கின்றவர்களாகவும் இருக்கின்ற அருள்பணியாளர்கள் இன்றைக்குத் தேவைப்படுகின்றார்கள்.

புனித ஜான் மரிய வியான்னியைப் பல நேர மணி நேரம் ஒப்புரவு அருளடையாளம் மட்டுமே வழங்கி, ஆன்மாக்களைக் குணப்படுத்திய அருள்பணியாளராக, அவரது மேய்ப்புப்பணியை நாம் சுருக்கிவிட முடியாது. அவரது மேய்ப்புப்பணி ஆலய வளாகத்திற்குள் மட்டும் முடங்கிவிடவில்லை; மாறாக, அது தொலைநோக்குப் பார்வையுடன், விடாமுயற்சியுடன் இணைந்திருந்தது.

ஆர்ஸ் நகரின் திருமண வாழ்விற்கு எதிரான தவறான முறைகளால் பிறந்த பெண் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் கவனியாமல் புறக்கணித்து வாழ்ந்தனர். அவர்களுக்குக் கல்வியும் சமத்துவ வாழ்வும் அரவணைப்பும் குடும்பங்களில் மறுக்கப்பட்டன. இப்பெண் குழந்தைகளுக்கென்று இல்லம் அமைத்து, கல்வி வழங்கி, அவர்களைச் சமூகத்தின் பொறுப்புமிக்க பெண்களாக உருவாக்கினார். அந்நகரத்தின் எதிர்காலத் தூண்களாக அவர்களை அதிகாரப்படுத்தினார்.

இத்தகைய சிறு துவக்கமே, சிறுமிகளின் உருவாக்கமே, அந்நகரின் எதிர்காலத்தை மாற்றும் என நம்பிச் செயல்பட்டார். அவரது சமூக அர்ப்பணிப்பு அத்துடன் நிற்கவில்லை. ஆர்ஸ் நகரத் தோட்டத்தின் உரிமையாளர்கள் ஏழைக் கூலியாள்களின் உழைப்பினை, ஏழ்மையினைத் தங்களுக்குச் சாதகமாக்கி, குறைந்த ஊதியம் வழங்குவதை எதிர்த்தார். நீதியான ஊதியம் அவர்களுக்கு வழங்கப்பட நில முதலாளிகளுக்கு எதிராகக் குரலெழுப்பி, ஏழைகளின் சார்பாகப் போராடி அவர்களின் உரிமையைப் பெற்றுத்தந்தார். ஏழைகளின் துன்பங்களை, துயரங்களை உணர்ந்த தனது ஆடுகளின் முடை அறிந்த ஆயனாக அவர் செயல்பட்டதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

விடாமுயற்சி

ஆர்ஸ் நகர மக்களுக்குச் செய்த புனித வியான்னியின் மேய்ப்புப்பணியினை அங்குள்ள இரவு விடுதிகளின் உரிமையாளர்கள் வரவேற்கவில்லை. தொடக்கச் சவால்களும் போராட்டங்களும் மக்களின் புறக்கணிப்பும் மேய்ப்புப்பணியில் தவிர்க்க இயலாதவை என வியான்னி உணர்ந்திருந்தார்.

சிறிய நகரமான ஆர்ஸின் மக்கள்தொகை ஏறக்குறைய 215 மட்டுமே. 65 குடும்பங்களை உள்ளடக்கிய மக்களை இறைப்பக்கம் திருப்ப புனிதர் பத்து ஆண்டுகள் விடாமுயற்சியுடன் உழைத்தார். அவர்களுடன் மிகப்பொறுமையுடன் உரையாடி, அவமானங்களை, இழிப்பேச்சுகளைச் சகித்துக்கொண்டு இறைஇரக்கத்தை அவர்கள் உணர அவர் எடுத்த முயற்சிகள் ஏராளம்.

வேதனைகளும் விரக்தியும் அவரது மேய்ப்புப் பணியைச் சோர்வடையச் செய்தது. அப்பங்கினை விட்டு வெளியேறி, தனிமையில் செப ஆராதனையில் தனது வாழ்வினைக் கழித்திட அவர் விரும்பினார். ஆனால், இறைவனின் திட்டத்தைத் தனது தனிச்செபத்தில் உணர்ந்து 41 ஆண்டுகள் அங்குத் தொடர்ந்து பணியாற்றினார்.

வெறுமையாய் இருந்த ஆர்ஸ் நகரமும், அப் பங்கு ஆலயமும் பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் புனிதத்தளமாகவும் கடவுளின் இரக்கத்தையும் மன்னிப்பையும் பெற்று, எதிர்நோக்கின் நம்பிக்கையாளர்களாக ஆர்ஸ் நகர மக்களைப் புனிதரின் மேய்ப்புப்பணி மாற்றியது.

விடாமுயற்சியுடன் உழைப்பவர்களே, இறையரசின் கனியை மக்களுக்குப் பெற்றுத்தருவார்கள் என்பதற்கு இப்புனிதரின் வாழ்வைவிட சிறந்த எடுத்துக்காட்டு இருக்க இயலுமோ?