news-details
ஞாயிறு மறையுரை
ஜூலை 20, 2025, ஆண்டின் பொதுக்காலம் 16-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) தொநூ 18:1-10; கொலோ 1:24-28; லூக் 10:38-42 - இறைவனின் சாயலே விருந்தினர்!

நமது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் என்ற மூன்றில் முதலிடம் பிடிப்பது உணவே. உணவின் அடிப்படைத் தேவையை நன்கு உணர்ந்ததாலே நம் முன்னோர்கள் தாம் உண்பதோடு மட்டுமல்லாமல், உணவில்லாமல் வறுமையில் வாடிய ஏழை எளியவர்களுக்கும், வீட்டிற்கு வரும் புதியவர்களுக்கும் உணவினை வழங்கி அவர்கள் உண்பதைக் கண்டு மகிழ்ந்தனர். ‘முகர்ந்தாலே வாடிவிடும் அனிச்சம் மலர்போல (குறள் 90), முகத்தை மாறுபட்டு வைத்தாலே விருந்தினர் மனம் வருந்துவர் என்பதால், விருந்தினரை அன்போடு உபசரித்தனர். வழிப்போக்கர்கள் அமர்ந்து இளைப்பாறி, விருந்துண்டு செல்வதற்காகவே வீட்டிற்கு முன்பு திண்ணை அமைத்து வீட்டைக் கட்டினர். வேலை செய்து சேமித்த செல்வத்தின் ஒரு பகுதியைப் பிறருக்கு உணவு அளித்தல் போன்ற செயல்களுக்குச் செலவிட்டனர். தற்போது வீடுகளில் திண்ணையும் இல்லை; அறிமுகமில்லாதவர்களை வீட்டிற்குள் அழைப்பதுமில்லை. நம் பண்பாடுகளினுள் பல மறக்கப்பட்டு வருகின்றன. விருந்தோம்பல் என்பது கற்பனையாய், கனவாய் மாறிவருவது, உண்மையிலேயே நம் தலைமுறை சந்தித்துவரும் பெரும் இழப்புதான்.

ஆண்டின் பொதுக்காலத்தின் 16-ஆம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். உறவுகளை வளர்க்க மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிக முக்கியக் கொடைகளில் ஒன்றுதான் விருந்தோம்பல். இன்றைய வாசகங்கள் விருந்தோம்பலால் வரும் வியத்தகு கொடைகளைப்பற்றிய சிந்தனைகளை நமக்கு வழங்குகின்றன.

நாம் உண்கின்ற உணவைப் பசியோடு வருகின்றவர்களுக்குக் கொடுத்து உபசரிக்கும் பண்பு தமிழர்களுக்கே உரிய ஒன்று. பசி எப்போதும் அவமானத்தைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறது. ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்என்பது திருமூலரின் திருமந்திர வரி. உணவில்லையென்றால் உடலும் உடலில் ஒட்டியிருக்கும் உயிரும் அழிந்துவிடும். அனைத்துச் சமயங்களும் பசியோடும் களைப்போடும் வருபவர்களுக்கு உணவளிப்பது உயர்ந்த புண்ணியம் என்கின்றன. ‘விருந்தாளிகள் அடிக்கடி வரும் வீடு அல்லாஹ் நேசிக்கும் வீடுஎன்கிறது இசுலாமிய மறை. மண்ணில் உள்ள உயிர்களுக்கெல்லாம் உணவும் உடையும் வீடும் அளிப்பதுதான் உயர்ந்த அறம். ‘அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள் (142:9-11) என்கிறது நற்றிணை. சங்க கால மகளிர் நள்ளிரவில் விருந்தினர் வந்தாலும் முகம் திரிந்து நோக்காது, அவர்களை எதிர்கொண்டு வரவேற்று உணவளித்தமையைக் கற்புடைமைக்குப் பொருத்திக்காட்டியுள்ளனர் நம் முன்னோர்கள். ‘விருந்தினர் போற்றுதும்என்பது நம் தமிழ் மரபு. இந்தச் சிந்தனைகளின் அடிப்படையில் இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்களை உற்றுநோக்கும்போதுநிறைந்த மனத்துடன் நாம் ஒருவருக்குச் செய்யும் விருந்தோம்பல் இறைவனின் வியத்தகு அருளை நாம் பெற்றுக்கொள்ள வழிசெய்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில், முன்பின் அறிமுகமில்லாத மூன்று மனிதர்கள் தன் அருகில் நிற்கக் கண்ட ஆபிரகாம் அவர்களுக்கு விருந்து படைக்க முன்வருகிறார். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வந்துவிடும் விருந்தினருக்குத் தன் வீட்டில் ஒன்றுமில்லாத நிலையிலும், தன் மகனை அடுத்த வீட்டிற்கு அனுப்பி அல்லது வீட்டிற்கு எதிரே உள்ள கடையில் கடனைச் சொல்லி ஒரு பழ இரசமோ, காப்பியோ வாங்கி வந்து கொடுக்கும் ஓர் எளிய குடும்பத்தில் நடக்கும் காட்சியைப்போல இங்கே ஒரு காட்சி நம் கண்முன் விரிகிறது. வானவர் என்று தெரியாமலேயே அவர்களை அழைத்து விருந்து படைத்த ஆபிரகாமின் செயலை வள்ளுவர் இவ்வாறு பாடுகிறார்:

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்வருந்து வானத் தவர்க்கு (குறள் 86)

நாள் முழுவதும் விருந்தினரை உபசரித்து வழியனுப்பி, அடுத்துவரும் விருந்தினரையும் எதிர்கொண்டு வாழ்பவர், விண்ணவர் மத்தியில் விருந்தினர் ஆவார் என்பது வள்ளுவர் கூறிய அழகான கருத்து.

ஆபிரகாமின் விருந்தோம்பலைப் பற்றி விவரிக்கும்போது மூன்று மரக்கால் நல்ல மாவு, நல்ல இளங்கன்று, வெண்ணெய், பால் என மேன்மையானதையும் சிறந்ததையும் அவர் தெரிவுசெய்து விருந்து படைப்பது, நிறைவையும் அவரது நல்ல பண்புகளையும் காட்டுகிறது. எனவே, ஆபிரகாம் தங்களுக்குக் குழந்தை பிறக்கப்போகிறது என்னும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொள்கிறார். ஆபிரகாமைப் போலவே, இன்றைய நற்செய்தியில் மார்த்தாவும் மரியாவும் இயேசுவுக்கு கொடுக்கின்ற விருந்தோம்பலின் விளைவாக, சிறப்பான நன்மைகளையும் பாராட்டுகளையும் பெறுகின்றனர்.

யூதப் பாரம்பரியத்தில் வீட்டுக்கு வரும் போதகருக்கு விருந்து படைப்பதுதான் தலையாயக் கடமை. இதை நன்கு உணர்ந்ததால்தான் மார்த்தா உணவு தயாரிப்பதில் பரபரப்பாக இருந்தார். தன் சகோதரி தனக்கு உதவி செய்யாமல், இயேசுவின் காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தது குறித்து அவரிடம் புகார் கூறியபோது இயேசு மார்த்தாவிடம், “நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்; ஆனால், மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது (லூக் 10:42) என்று கூறுகிறார்.

இவ்வாறு இயேசு கூறுவதன் வழியாக மார்த்தாவின் பணிவிடையை அவர் சிறுமைப்படுத்தி விட்டார் என்று எண்ணவேண்டாம். ‘என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டார், ‘உமக்குக் கவலை இல்லையா?’ என்ற முறைப்பாட்டில் எழுந்த சிறு கோபத்தை இயேசு மாற்ற விரும்புகிறார். தமக்குப் பணிசெய்வதாக நினைத்து, அந்தப் பணிகளாலேயே மார்த்தா திசைதிருப்பப்பட்டதை இயேசு கண்டிக்கிறார். அவரது திசை இயேசுவாக இருந்திருக்கவேண்டும் என்று மார்த்தாவுக்கு உணர்த்துகிறார். முதலில் முன்னுரிமை கொடுக்கப்படவேண்டியது, இயேசுவின் திருவார்த்தைக்கு என மார்த்தாவுக்குப் புரியவைக்கின்றார்.

இருவருமே இயேசுவின்மேல் அளவற்ற அன்பு கொண்டிருந்தனர். விருந்தாளியாக வந்த இயேசு வழங்கும் நற்செய்திக்குச் செவிமடுப்பதே சிறந்த விருந்தோம்பல். அதுவே சீடத்துவம் என்பதை மரியா புரிந்துகொண்டார். வீட்டிற்கு வந்த விருந்தினரை வரவேற்பதும், சிறந்த விருந்து கொடுப்பதும் அன்பின் வெளிப்பாடு என்பதை மார்த்தா புரிந்துகொண்டார். வீட்டிற்கு வந்த இயேசுவை முதலில் வரவேற்றவர் மார்த்தாதான் (10:38). எனவே, மார்த்தா மற்றும் மரியா ஆகிய இருவரின் செயல்களும் ஒன்றுக்கொன்று எதிரானவையல்ல; மாறாக, ஒன்றுடன் ஒன்று இணைந்து, நிறைவு செய்யக்கூடியவையாக உள்ளன. இயேசுவின் அருகில் அமர்ந்து அவர் குரலுக்குச் செவிமடுத்தல், விருந்தோம்பல் பணிகளில் ஈடுபடுதல் என்ற இரு நற்பண்புகளையும் ஒன்றிணைத்துச் செயல்பட வேண்டும். இந்த இருவகை ஆன்மிகமும் இணைந்த வாழ்வுதான் சிறந்த செப வாழ்வு. சிறந்த செபம் என்பது தன் தேவைகளை முன்னிலைப்படுத்தாது, செபத்தில் தன்னையே இழந்துவிடுவதுதான்! அந்த வகையில் இரு பெண்களுமே தங்கள் தேவைகளை முன்னிலைப்படுத்தாது இயேசுவுக்கு முதலிடம் கொடுத்தனர்.

ஆகவே, நமது அன்றாட வாழ்வில் இறைவனுக்கும் அயலாருக்கும் விருந்தோம்பல்மிக்க கிறித்தவர்களாக வாழ்ந்து, நிறைந்த பயனையும் மகிழ்வையும் பெறுவோம். “நம்மைத் தேடி வந்து நம் கதவுகளைத் தட்டும் ஏழைகளும், தங்கள் வீட்டில் இருப்பது போன்ற உணர்வைப் பெறும் வகையில் நம் விருந்தோம்பல் பண்பு இருக்க வேண்டும்எனும் நம் திருத்தந்தை பிரான்சிசின் கூற்று நம் பாடமாகட்டும் (மூவேளைச் செப உரை, 22.7.2019).

நாம் உடன்பிறந்த உணர்வோடு அன்னியரையும் வரவேற்று விருந்து படைக்கும்போது அவர்கள் மத்தியில் வானதூதர்களும் இருக்கலாம். வானதூதர்கள் நம் இல்லங்களுக்கு வந்து நம்மை வாழ்த்திடும் வாய்ப்பையும் பெறலாம் (எபி 13:2). எனவே, விருந்துகளைவிட விருந்தினர்கள் முக்கியத்துவம் பெறும்போதுவிருந்தோம்பல்என்ற வார்த்தை இன்னும் பொருளுள்ளதாக மாறும்.

விருந்து என்பது வெறும் உணவு மட்டுமல்ல, ஒவ்வொரு விருந்துக்கும் பின்புலத்தில் பாசம், பந்தம், பண்பாடு, உறவு, நட்பு என்று எத்தனையோ அம்சங்களை நாம் கொண்டாடுகின்றோம். உணவு வெறும் பொருள் அல்ல; அது அக்கறை. அது உயிர் வளர்க்கும் சக்தி. பகிர்ந்துகொள்ளப்பட வேண்டிய மகிழ்ச்சி. எனவே, அக்கறையற்ற மனநிலையோடு கைகளைக் கட்டிக்கொண்டு நிற்பதோ, ஒன்றும் செய்ய இயலாது என்ற மனநிலையோடு கைகளை விரித்தபடி தன் இயலாமையை வெளிப்படுத்துவதோ ஒரு கிறித்தவரின் செயலாக இருக்கமுடியாது.

இன்றைய உலகில் அடுத்தவரை, இறைச்சாயலாகக் கருதாவிட்டாலும், மனிதராகவாகிலும் வரவேற்க வேண்டும். “இறைவனின் சாயலே விருந்தினர் (Athiti devo bhava).